புஜ்ஜி அட் அனுப்பட்டி சினிமா விமர்சனம்

கிரைம் திரில்லருக்கான ஃபார்முலாவுடன் எடுக்கப்பட்ட, குழந்தைகளுக்கான படம்.

தன் மகனும் மகளும் பாசமாக வளர்த்த ஆட்டுக்குட்டி புஜ்ஜியை, அந்த குடிகார தந்தை விற்றுவிட, யாரிடம் விற்றார் என்ற விவரங்கள் ஏதும் கிடைக்காமல், மகனும் மகளும் அதை தேடிப் போக, அந்த தேடலில் அவர்கள் வெவ்வேறு ஊர்களுக்குப் போய் சுற்றித் திரிந்து சந்திக்கிற கஷ்ட நஷ்டங்கள் எக்கச்சக்கம். புஜ்ஜியை தேடும் படலத்தில் நடப்பவை கிரைம் திரில்லர் படங்களில் அரங்கேறுகிற சம்பவங்களைப் போல் பரபரப்பு கூட்ட, புஜ்ஜி கிடைத்ததா இல்லையா என்பது நிறைவுக் காட்சி… இயக்கம் ராம் கந்தசாமி

சிறுமி பிரிணிதி புஜ்ஜியிடம் செல்லம் கொஞ்சி காட்டும் பாசமாகட்டும், புஜ்ஜியை காணாத நிலையில் அழுது அரற்றுவதாகட்டும், கசாப்புக் கடைக்காரரிடம் சிக்கிய புஜ்ஜியை வெட்டுப்படுமுன் காப்பாற்ற துடிப்பதாகட்டும் மனதுக்குள் தவிக்கிற தவிப்பை தன் நடிப்பில் உயிரோட்டமாக தந்திருக்க,

சிறுமிக்கு அண்ணனாக வருகிற சிறுவன் கார்த்திக் விஜய் (ஆட்டுக்)கறி விரும்பியாக இருப்பது, தங்கையின் ஆட்டுக்குட்டி மீதான நேசத்தைக் கண்டு அசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்திக் கொள்வது, ஆட்டை தேடுவதில் சுறுசுறுப்பு காட்டுவது என தன் பங்களிப்பை சரியாக செய்திருக்க,

ஆதரவற்ற நிலையிலிருக்கிற, தர்ஷினி என்ற பாத்திரத்தில் வருகிற அந்த டீனேஜ் பெண் ஆட்டைத் தேடுகிற சிறுவனுக்கும் சிறுமிக்கும் ஆதரவாக நிற்பது, விலை போன ஆட்டை கசாப்புக் கடையிலிருந்து மீட்க நன்கொடை போல் புத்திசாலித்தனமாக பணம் வசூலிப்பது என கவனிக்க வைக்கிறார்; தன் முதலாளியம்மாவின் எதிர்ப்பைச் சம்பாதித்து மனம் நொறுங்கும்போது சற்றே கலங்கவும் வைக்கிறார்.

பண்ணை, தோட்டம் என பெரும் சொத்துக்கு அதிபதியாக இருந்தாலும் எளிய மனிதனாய் வலம் வருவது, ஆட்டை தேடுகிற சிறார்கள் ஆபத்தில் சிக்கியிருப்பது தெரிந்து, அவர்களை மீட்டுக் கொண்டுவர முழுமையான ஈடுபாடு காட்டுவது என மனதுக்குள் நிறைகிறார் இளைஞர் கமல்குமார்.

நேர்மையான, துணிச்சலான காவல்துறை அதிகாரியாக வருகிற நக்கலைட்ஸ் வைதீஸ்வரி, இன்னபிற பாத்திரங்களில் லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ் மீனா, கறிக்கடை பாயாக வருகிறவர் என பலரும் கதையின் தன்மையுணர்ந்து நடித்திருக்க, கு.கார்த்திக் வரிகளில் அமைந்த ‘புஜ்ஜி புஜ்ஜி என் செல்லத் தங்கம்’ பாடலை தாலாட்டின் இதத்துடன் ரசிக்கும்படி வழங்கியிருக்கிறார் கார்த்திக்ராஜா.

அருண்மொழிச் சோழனின் ஒளிப்பதிவும், சரவணன் மாதேஸ்வரனின் படத்தொகுப்பும் கதைக்களத்தை தாங்கிப் பிடித்திருக்கின்றன.

தொலைந்த ஆடு கறிக்கடையின் கத்தியில் சிக்குவது, பின்னர் புது கட்டடப் பலிக்காக விலைபோவது என எப்படி எப்படியோ கிளை பிடித்து பயணிக்கும் திரைக்கதையோட்டத்தில், காமவெறி போலீசிடம் சிறுமிகள் அகப்படுவது, சிறுமியின் அப்பாவுக்கு அசம்பாவிதம் நேர்ந்து உயிர் பிழைக்கப் போராடுவது என அதிரிபுதிரி அம்சங்கள் அடுக்கடுக்காய் அரங்கேறுகின்றன.

காட்சிகளை பரபரப்போடும் விறுவிறுப்போடும் நகர்த்தியிருக்கும் இயக்குநர், திரைக்கதையை இன்னும் கொஞ்சம் உணர்வுபூர்வமாக அமைத்திருந்தால் மக்களின் வரவேற்பை பெரிதாய் அறுவடை செய்திருக்கலாம்.

ஏற்கனவே சில விருதுகளைப் பெற்றிருக்கும் இந்த படத்துக்கு இன்னும் சில உயரிய விருதுகள் கிடைக்கப்போவதும், குழந்தைகள் மனதில் ‘மனிதர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள்’ என்ற நம்பிக்கை அழுத்தமாக பதியப்போவதும் உறுதி.

புஜ்ஜி அட் அனுப்பட்டி, குழந்தைகள் பட வரிசையில் வெல்லக்கட்டி!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here