‘பைரி’ சினிமா விமர்சனம்

விளையாட்டுப் போட்டிகளை மையமாக வைத்து அதிலிருக்கும் போட்டி பொறாமை, திறமையாளர்களை வளரவிடாத வன்மம், சாதிய ஏற்றத்தாழ்வு, உள்ளடி அரசியல் என பல விஷயங்களை பல படங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன. அந்த வரிசையில் இணைகிற மற்றுமொரு படம்.

இதுவரை யாரும் தொடாத புறா பந்தயப் பின்னணியை கதைக்களமாக்கியிருப்பது, அந்த பந்தயக் களத்தின் நீள அகலங்களை நன்கு அறிந்தவர் இயக்கியிருப்பது, புதியவர்களை நடிக்க வைத்திருப்பது, அவர்கள் கதைக்கேற்ப மிகமிக பொருத்தமான நடிப்பைத் தந்திருப்பது, உண்மைத் தன்மையிலிருந்து விலகிவிடாமல் பார்த்துக் கொண்ட ரத்தமும் சதையுமான காட்சிகள் என பல அம்சங்களில் தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாக ‘பைரி.’

கல்லூரிப் படிப்பில் மிச்சம் வைத்த அரியர்ஸை முடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் ராஜலிங்கம், சுற்று வட்டாரத்தில் பலரும் புறா வளர்ப்பு, பந்தயங்களில் பங்கேற்பு என பரபரப்பாக சுற்றித் திரிவதைப் பார்த்துப் பார்த்து ஆர்வமாகிறான். அம்மா படி படி என கத்திக் கொண்டிருக்க, அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் புறாக்களை வளர்க்க திட்டமிடுதல், அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடுதல், பந்தயங்களில் கலந்துகொள்ள புறாக்களுக்கு பயிற்சியளித்தல் என படிப்படியாக முன்னேறுகிறான்.

தன் புறாக்களை பந்தயங்களில் இணைக்கும்வரை, பந்தயக் களத்தின் எதிரணியிலிருப்பவர்கள் அத்தனை ஆபத்தானவர்களாக இருப்பார்கள் என அவனுக்கு தெரியவில்லை. தெரிந்தபின் அவர்களை துணிச்சலோடு எதிர்த்து நிற்கிறான். அதன் விளைவுகள் உயிரை உலுக்கும் பயங்கரம்… இயக்கம் ஜான் கிளாடி

ராஜலிங்கமாக சையத் மஜித். ஏற்றிருக்கும் பாத்திரத்தில் எக்கச்சக்கமாக பொருந்தியிருக்கிறார். எதையும் எவரையும் பொருட்படுத்தாமல் தான் விரும்புவதை செய்தே தீருவது என்ற உறுதியாகட்டும், அம்மாவின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் அவரை கீழ்த்தரமாக திட்டித் தீர்ப்பதாகட்டும், பந்தயத்தில் அரசியல் செய்யும் தரப்பினரிடம் வெறியேறிய சிங்கமாய் சீறுவதாகட்டும், ஊரே திரும்பிப் பார்க்கிற அளவுக்கு தன் புறாவை சாதிக்க வைப்பதாகட்டும், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கிய நண்பனை மீட்கப் போராடுவது என காட்சிக்கு காட்சி கவனிக்க வைக்கும் நடிப்பைத் தந்திருக்கிறார்.

நாயகனின் அம்மாவாக விஜி சேகர். மகன் மீது பாசம், அவன் செயல்பாடுகள் மீது கோபம் என இரண்டையும் நேர்த்தியாக வெளிப்படுத்தி யார் இவர்?’ என கேட்க வைக்கிறார்.

நாயகனுக்கு நண்பனாக, அவன் லட்சியத்துக்காக எதையும் செய்யத் துணிந்தவராக ஜான் கிளாடி. நடிப்புப் பங்களிப்பில் நல்ல நண்பன் என்பவன் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகியிருக்கிறார். அந்த நிறைவுக் காட்சி கலங்க வைக்கிறது.

நெய்விட்டுக் குழைத்த பால்கோவா போல் தளதளப்பாக, வெயிலுக்கு வெள்ளையடித்தது போல் பளபளப்பாக இருக்கிற நாயகி மேக்னா, மிகச்சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார். மேக்னட் புன்னகை தந்து போகிறார்.

அய்யா வைகுண்டரை வணங்கி, அவர் வழிகாட்டல்படி எந்த விஷயத்திலும் நடுநிலை வகிக்கிற ‘ரமேஷ் பண்ணையார்’ கதாபாத்திரமும், அதை ஏற்றிருக்கிற ரமேஷ் ஆறுமுகத்தின் நடிப்பிலிருக்கும் உயிரோட்டமும் கதையோட்டத்தை கனமாக்கியிருக்கிறது.

பந்தயத்தில் ஜெயிப்பதற்காக எதைவேண்டுமானாலும் செய்யத் தயாராகிற அராஜகப் பேர்வழியாக, சுயம்பு என்ற பாத்திரத்தில் மீசை முறுக்கி கர்ஜிக்கிற வினு லாரன்ஸும் கவர்கிறார்.

படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்… ப்படி வந்து இப்படி போகிறவர்கள்கூட கதையின் தன்மையுணர்ந்து பங்களிப்பு தந்திருப்பது, புறா பந்தயங்களில் ஊறிப்போன கன்னியாகுமரி, நாகர்கோயில் சுற்று வட்டாரத்தை கதைக்களமாக்கியிருப்பது, தை மாந்தர்கள் அந்த பகுதி வட்டார வழக்கில் கச்சிதமாக பேசி நடித்திருப்பது படத்திற்கு பலம்!

வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகளும், நிஜத்தில் சாத்தியப்படாத விஷயங்களும் படத்தில் உண்டு.

சிஜி குழுவின் உழைப்பு, ஒளிப்பதிவு, பின்னணி இசை என இன்னபிற அம்சங்கள் நிறைவு.

புறா பந்தயம், அதிலிருக்கும் விதிமுறைகள் என பல சங்கதிகளை அந்த விளையாட்டை அறியாத மக்கள் புரிந்து கொள்வது கண்டிப்பாக கஷ்டம். என்றாலும், அந்த பந்தயத்திலிருக்கும் போட்டி பொறாமை வன்மம் என விரியும் காட்சிகளின் வீரியம் தமிழ் சினிமா ரசிகனுக்கு நிச்சயம் புது அனுபவம்.

இது முதல் பாகம்தான். அடுத்தது இன்னும் அதிரவைக்கலாம்…

பைரி – வைரிகளின் ராஜ்ஜியம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here