‘திறந்திடு சிசேம்’ படத்தை இயக்கிய எம். முத்து இயக்கத்தில், தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சாத்விக் வர்மா மற்றும் ‘வலிமை’ ஜாக் ராபின்சன் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் படம் ‘சிக்லெட்ஸ்.’டீன்ஸ் டிராமா ஜானரில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகியிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்போது முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
அதில் காமமும், இளமை குறும்பும் வெளிப்படும் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. அதிலும் ஒரு இளம் பெண், ‘துளசி வாசமிக்க ஆணுறை கிடைக்குமா?’ என கேட்பது, அதிர்ச்சியாக இருந்தாலும், இன்றைய இளம் தலைமுறையின் மனநிலையைத் துல்லியமாக பிரதிபலிக்கிறது. அத்துடன் பெற்றோர்களுக்கும், அவர்களது வாரிசுகளுக்கும் இடையே காதலிப்பது தொடர்பான கருத்து மோதல்களும் இடம் பிடித்திருக்கிறது. மேலும் இப்படத்தின் டைட்டிலுடன் ‘2k கிட்ஸ்’ என்ற டேக்லைன் இணைக்கப்பட்டிருப்பதால், இதற்கு இணையவாசிகளிடத்தில் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.இந்த படத்தில் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹைதர், மஞ்சீரா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடிக்க, ஸ்ரீமன், மனோபாலா, சம்பத்ராம், சுரேகா வாணி, ஜானகி, மீனாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். ‘துணிவு’ விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை ராஜு மேற்கொண்டிருக்கிறார்.
எஸ்.எஸ்.பி.பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் ஏ. ஸ்ரீனிவாசன் குரு தயாரித்திருக்கிறார்.