‘கேப்டன் மில்லர்’ சினிமா விமர்சனம்

 

வெள்ளையர்களின் அடக்குமுறை, உள்ளூர் வேந்தரின் ஒடுக்குமுறை இரண்டுக்கும் எதிராக களமிறங்கி மக்களை காக்கும் ஒருவனின் கதையாக ‘கேப்டன் மில்லர்.’

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முந்தைய காலகட்டம். அந்த கிராமத்தில் நமது இளைஞர்களை தனது ராணுவத்தில் சேர்த்து அவர்களை வைத்து, சுதந்திரத்துக்காக போராடும் நமது மக்களை கொத்துக் கொத்தாய் சுட்டுக் கொல்லும் வெள்ளைக்காரர்கள். இன்னொரு பக்கம் வெள்ளைக்காரர்களுக்கு ஆதரவளிப்பத்தோடு, தாழ்ந்த சாதிக்காரர்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என அராஜகம் செய்கிற அந்த பகுதியை ஆள்கிற குறுநில மன்னர்.

இரண்டு தரப்பின் பலத்தையும் தனது சாதுர்யத்தாலும் மக்களின் ஆதரவாலும் தகர்க்கும் முயற்சியில் இறங்குகிறான் கதைநாயகன்.

அவனது முயற்சிகள் எப்படிப்பட்டது என்பதும், அந்த முயற்சிகளால் அவன் நினைத்ததை சாதிக்க முடிந்ததா என்பதுமே கதையோட்டம். உருவாக்கம் மிரள வைக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை!

ஆரம்பத்தில் வெள்ளையர்களின் ராணுவ வீரன், பின்னர் அவர்களையே எதிர்க்கும் போராளி, ஊர்மக்களின் உரிமைக்காக போராடும் இளைஞன், ஒரு கட்டத்தில் அந்த மக்கள் கடவுளாக நினைக்குமளவு செயல்பாடுகளால் உயர்கிற மனிதன் என கனமான கதாபாத்திரத்தில் வெவ்வேறு தோற்றங்களில் தனுஷ். தான் நடிப்பு அசுரன் என்பதை படம் முழுக்க கதையின் தேவைக்கேற்ப காட்டியிருக்கிறார்.

தன் தந்தையைக் கொன்றவரை பழிதீர்க்கும் காட்சியில் கவனிக்க வைக்கிறார் கதாநாயகி பிரியங்கா அருள்மோகன்.

நாயகனின் அம்மாவாக விஜி சந்திரசேகர், குறுநில மன்னராக மன்னராக ஜெயப்பிரகாஷ், அவரது அல்லக்கையாக காளி வெங்கட், நல்ல நோக்கத்துக்காக கொள்ளையடிக்கும் குழுவின் தலைவனாக இளங்கோ குமரவேல் என பலரும் அவரவர் பங்களிப்பை குறையில்லாமல் தர, கன்னட தேசத்து சிவராஜ்குமாரின் பங்களிப்பு தனித்துத் தெரியும்படி ஒன்றிரண்டு காட்சிகள் கலந்திருக்கின்றன.

அப்படி திரும்பினால் துப்பாக்கிச் சூடு, இப்படி திரும்பினால் குண்டு வெடிப்பு என நீ…….ளும் காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தீம் மியூஸிக் என திட்டமிட்டு உழைத்திருக்கிற ஜீவி பிரகாஷுக்கும், பீரியட் படம் என்பதை மனதில் வைத்து 100% திறமையை பங்களிப்பாய் தந்திருக்கிற கலை இயக்குநருக்கும் ஸ்பெஷல் பாராட்டு!

ஒளிப்பதிவு நேர்த்தி!

படம் முழுக்க துப்பாக்கிச் சூடு, ரத்தச்சக்தி என பார்ப்பது உங்களுக்கு பிடிக்குமென்றால், உங்களின் மூளை கதையின் உண்மைத்தன்மை குறித்து எந்தவித கேள்வியும் கேட்காது; அது சார்ந்த ஆராய்ச்சியில் இறங்காது என்றால் கேப்டன் மில்லர் உங்களைப் பொறுத்தவரை பொங்கல் ரேஸில் வின்னர்!

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ரத்தவெறியிலிருந்து சீக்கிரமே மீண்டு வர கோரனாரிடம் பிரார்த்திப்போம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here