எது மாதிரியும் இல்லாமல் புதுமாதிரியாக வந்துள்ள பேய்ப்படம்!
அன்பான கணவனோடு வசிக்கும் சைத்ராவை பார்க்க ஒரு இளம் தம்பதி அடிக்கடி வருகிறார்கள். அவர்கள் வரும்போது சைத்ரா பயந்துபோய் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறார். இந்த நிகழ்வு அடிக்கடி நடக்கிறது.
அந்த தம்பதியைக் கண்டு சைத்ரா பயப்படுவது ஏன் என்பதை, டிடெக்டிவ் பணியிலிருக்கும் சைத்ராவின் தோழியொருவர் கண்டுபிடிக்க களமிறங்குகிறார். அவருக்கு கிடைக்கும் தகவல்களும் சந்திக்கும் சம்பவங்களும் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி தருகிறது. அதில் ஒன்று சைத்ராவை தேடிவரும் தம்பதி பேய்கள் என்பது… இயக்கம் ஜெனித் குமார்
சைத்ராவாக யாஷிகா ஆனந்த். இடைவேளைக்கு முன் இரண்டொரு காட்சிகளில் மின்னல் போல் வந்து போகிற அவர் படத்தின் பின்பாதியில் சில காட்சிகளில் எட்டிப் பார்க்கிறார். பேயாகவும் ஒன்றிரண்டு காட்சிகளில் அட்டனன்ஸ் போடுகிறார். அம்மணி அத்தனை காட்சிகளிலும் ஒரே சுடிதாரில் வருகிறார், கிட்டத்தட்ட வருகிற காட்சிகள் அத்தனையிலும் அழுது வடிகிறார். பேய் இருக்குனு நம்புறீங்களா இல்லையா?’ என கேட்டுக் கொண்டேயிருக்கிறார். நடிப்பில் சொல்லிக் கொள்ளும்படியான அம்சம் ஏதுமில்லை. யாஷிகாவுக்கே உண்டான கவர்ச்சி துளியுமில்லை. பாடல் காட்சிகள்… உம்ஹூம். அதுவுமில்லை.
ஆன்மிகம், சாமியார், மந்திரம், அமானுஷ்யம், பேய், பிசாசு என எதையும் நம்பாதவராக வந்து பிறகு அனைத்தையும் நம்புகிற கதாபாத்திரத்தில் சைத்ராவின் தோழியாக சக்தி மகேந்திரா. காட்சிக்கேற்ற தவிப்பையும் பயத்தையும் தனது படபடக்கும் விழிகளில் காட்டி, தான் வரும் காட்சிகளை பரபரப்பாக்க முயற்சித்திருக்கிறார். சரி விகிதத்தில் கலந்திருக்கும் அவரது அழகும் இளமையும் ஈர்க்கிறது.
படத்தில் ஆனைமலை சாமியார் என ஒரு கதாபாத்திரம். அவர் அதை செய்வார், இதை செய்வார் என படம் முழுக்க பில்ட் அப் கொடுக்கிறார்கள். கிளைமாக்ஸில் மட்டுமே வருகிற அவர் அப்படி எதையாவது செய்திருக்கலாம்.
யாஷிகாவுக்கு கணவராக வருகிற அவ்தேஜ், சாமியாரின் சிஷ்யராக மொசக்குட்டி, இன்ஸ்பெக்டராக கண்ணன் என இன்னபிற கதாபாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்பு பரவாயில்லை ரகம். படத்தின் இயக்குநர் ஜெனித்குமார் டாக்டராக வருகிறார்.
பிரபாகரன் மெய்யப்பனின் பின்னணி இசை காட்சிகளுக்கு கொஞ்சமே கொஞ்சம் விறுவிறுப்பூட்டியிருக்கிறது.
யாஷிகாவை இதுவரை யாரும் காட்டாத விதத்தில் காட்டியிருப்பது தனித்துவம் என்றாலும் அவரது ரசிகர்களுக்கு கண்டிப்பாக ஏமாற்றத்தையே தரும்.
லாஜிக் அதுஇதுவென எதைப் பற்றியும் கவலைப்படாத திரைக்கதை படத்தின் மைனஸ். கிளைமாக்ஸ் நெருங்குகிறபோது கதையின் போக்கில் இருக்கிற திருப்பங்கள் எதிர்பாராதது!