அண்ணன் தங்கை பாசத்தை அஸ்திவாரமாக்கி, பெற்றோர்கள் பிள்ளைகளை கவனிக்காமல் மனம்போன போக்கில் நடந்துகொள்வதால், அந்த பிள்ளைகளின் எதிர்காலம் எப்படியெல்லாம் தடம்மாறி தடுமாறுகிறது என்பதை இயக்குநர் சீனு ராமசாமி தனக்கான திரைமொழியில் பதிவு செய்திருக்கும் படம்.
சிறுவயதிலேயே அப்பா அம்மாவை பிரிந்து, கோழிப்பண்ணை வைத்திருக்கும் பெரியப்பாவின் அரவணைப்பில் வளர்கிறார்கள் செல்லதுரையும் அவனது தங்கையும். செல்லதுரை பெரியப்பாவின் கடையில் கறி வெட்டும் பணியில் ஈடுபட, தங்கை கல்லூரிப் படிப்பைத் தொடர்கிறாள். ஒரு கட்டத்தில் தங்கையின் காதல் செல்லதுரைக்கு தெரியவருகிறது. அந்த காதலை கடுமையாக எதிர்க்கிறான். அதனால் அவர்களின் வாழ்க்கையில் சிலபல பிரச்சனைகள் உருவாகி நிம்மதி பறிபோகிறது. அந்த நிம்மதியை அவர்களால் மீட்டெடுக்க முடிந்ததா இல்லையா என்பது கதையின் தொடர்ச்சி…
செல்லதுரையாக ஏகன். வாழ்க்கைப் பாதை தந்த வலிகளால் புன்னகை தொலைத்த முகத்துடன் வலம் வரும் அவர் தங்கை மீது அளவில்லா பாசம், அன்புகாட்டி அரவணைக்கும் பெரியப்பா மீது நேசம் என தன் நடிப்புப் பங்களிப்பை அமைதியாக வழங்கி, உணர்ச்சி வசப்படும்போது அதற்கான சீற்றத்தை அளவாக வெளிப்படுத்தி கதையின் பெரும்பகுதியை தூக்கிச் சுமந்திருக்கிறார்.
தன்னிடம் அடைக்கலமான செல்லதுரை மீதும் அவன் தங்கை மீதும் கருணையும் கனிவும் காட்டும் பொறுப்பை ஏற்றிருக்கும் யோகிபாபுவின், காமெடி கலாட்டாக்களை குறைத்துக் கொண்ட எளிமையான நடிப்பு அவரது பாத்திரத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.
அண்ணனை கடவுளாக கருதி உருகுகிற தங்கையாக சத்யா காதல், தவிப்பு, ஏக்கம் என கண்களாலேயே உணர்வுகளைக் கடத்த முயற்சித்திருக்கிறார்.
பிரிகிடாவுக்கு, தன் பக்கம் திரும்பிக்கூட பார்க்காத செல்லதுரையை துரத்தித் துரத்தில் காதலிக்கிற வேலை. கவர்ந்திழுக்கும் புன்னகை அந்த வேலைக்கு உதவியிருக்கிறது.
குட்டிப்புலி தினேஷின் சின்னச் சின்ன கலாய்ப்புகள் கலகலப்பூட்டி ரசிக்க வைக்கின்றன.
செல்லதுரையின் தங்கையை காதலிக்கிற லியோ சிவகுமார், தங்கையின் திறமைக்கு மதிப்பளிக்கிற பவா செல்லதுரை, மற்றொரு தங்கையாக மானஸ்வி என இன்னபிற நடிகர், நடிகைகளின் பங்களிப்பு நிறைவு. ஐஸ்வர்யா தத்தாவை செல்லதுரையின் அம்மாவாக ஏற்க முடியவில்லை.
தேனியின் மனதைக் கொள்ளையடிக்கும் இயற்கையை பொலிவு குறையாமல் படமாக்கியிருக்கிற அசோக் ராஜின் கேமரா கோணங்கள் அசத்துகிறது.
பாடல்களில் தாக்கம் குறைவாக இருந்தாலும், கதையின் நகர்வுக்கு உயிரூட்டியபடி பயணித்திருக்கிறது என்.ஆர்.ரகுநந்தனின் பின்னணி இசை.
எளிய மனிதர்களுடைய மனதின் அழகையும் அழுக்கையும் கலந்துகட்டி பரிமாற நினைத்த இயக்குநர், கதையோட்டத்தின் சம்பவங்களை ஏனோதானோவென அமைத்திருப்பதும், காட்சிகளை சீரியல் பாணியில் நகர்த்தியிருப்பதும் ரசிகனின் பொறுமையைச் சோதிக்கிறது.