நல்லது, கெட்டது என எதையும் சிந்திக்காமல் மனதுக்கு தோன்றுவதையெல்லாம் செய்துவிட ஆசைப்படுகிற துணிச்சலான டீனேஜ் பருவப் பெண்கள் மூன்று பேர். அவர்களுடைய நாட்கள் குடித்துக் கூத்தடிப்பது, மனதுக்குப் பிடித்தமான நபரோடு நெருங்கிப் பழகுவது என படு உற்சாகமாக நகர்கிறது. ஒரு கட்டத்தில் ‘அந்த’ சுகத்தின் நீள அகலத்தையும் அளந்து பார்த்துவிட தகுந்த இடம் தேடி, காண்டம் உள்ளிட்ட சங்கதிகளோடு கிளம்பிப் போகிறார்கள்.
அந்த விவரம் அந்த பெண்களின் பெற்றோர்களுக்கு தெரியவர, அவர்களை துரத்திப் பிடித்து தப்புத்தண்டா நடப்பதற்குள் தடுக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள்.
அந்த முயற்சிக்கு பலன் கிடைத்ததா இல்லையா என்பதே கதையோட்டம். இயக்கம் ‘திறந்திடு சீசே’ முத்து
சுதந்திரப் பறவைகளாக வாழ விரும்புகிற மூன்று பெண்களாக நயன் கரிஷ்மா, அம்ரிதா, சுரேகா மூவரும் தங்களது இளமை ததும்பும் தேகத்தின் காட்டமுடிந்த பாகங்களையெல்லாம் தாராளமாக காட்டி சதைக்களத்தை மன்னிக்கவும் கதைக்களத்தை பலப்படுத்தியிருக்கிறார்கள்!
அந்த மூவரின் காதலர்களாக வருகிற சாத்விக் வர்மா உள்ளிட்ட மூன்றுபேரும் ஹார்மோன் சூடேறி அத்துமீறும் காட்சிகளில் இளமைத் துடிப்போடு வெளிப்படுத்தும் நடிப்பு கச்சிதம்!
காலம் கடந்து பூப்பெய்துகிற பெண்ணின் அம்மாவாக வருகிறவரின், ‘மகள் தவறான பாதையில் போய்விடக்கூடாது’ என்ற தவிப்பும், மகளை அவளது காதலனோடு படுக்கையறையில் பார்த்து பக்குவமாய் திரும்பி நடப்பதும் மனதில் நிற்கும் காட்சிகள்!
இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என உருவாக்கத்தில் உறுதுணையாக இருந்தவர்களின் பங்களிப்பு பரவாயில்லை ரகம்.
படம் முழுக்க ஆபாசக் காட்சிகளை வைத்துவிட்டு, கடைசி கால் மணி நேரம் கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் வரிந்துகட்டியிருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம். அந்த புத்திசாலித்தனத்தை வைத்து சிக்லெட்ஸ் போல் ஆபாசக் குப்பையாக இல்லாமல் அடுத்தடுத்து நல்ல படங்களை எடுக்க வாழ்த்துகள்!