‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ சினிமா விமர்சனம்

திகில், திரில், காமெடி காம்போவில் வித்தியாசமான கதைக்களத்தில் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்.’

தொழில்நுட்ப மூளைக்குச் சொந்தக்காரனான கண்ணப்பன், விளையாட்டு செயலி (Play Games App) உருவாக்கும் முயற்சியிலிருக்கிறான். அவர் கைக்கு வந்து சேரும் வினோத பொருளால் தொடர்ச்சியாக ஒரேவித கனவு வருவதும், கனவில் ஒரு மர்ம பங்களாவுக்குள் போவதும், அங்கு சில அமானுஷ்ய சக்திகளால் பாதிக்கப்படுவதும் தொடர் கதையாகிறது.

அந்த பிரச்சனைக்கு தீர்வாக பேய் விரட்டுவதில் தேர்ந்த ஒருவரின் ஆலோசனைப்படி தனது குடும்பத்துடன் கனவுலகத்துக்குள் பயணிக்கும் முடிவுக்கு வருகிறான். அந்த முடிவு அவனையும் அவனது குடும்பத்தையும் பேய்களின் பிடியில் சிக்க வைக்கிறது.

உயிருக்கு ஆபத்தான அந்த சிக்கலில் இருந்து அவனும் அவன் குடும்பத்தாரும் மீண்டு வர படும்பாட்டில் திகிலும் திரில்லும் கலந்திருக்க காமெடிக்கும் பஞ்சமில்லை. இயக்கம் செல்வின் ராஜ் சேவியர்

கதாநாயகனாக சதீஷ். கனவுலகில் பேய்களைக் கண்டு மிரள்கிற காட்சிகளில் எளிமையான நடிப்பால் கவர்கிறார். தான் பெற்ற துன்பம் இன்னும் சிலரும் பெறட்டும் என்ற நல்லெண்ணத்தில் தனக்கு கடன் கொடுத்தவரையும் தனக்கு மருத்துவம் பார்க்க முன்வந்த மனநல மருத்துவரையும் பேய்களிடம் சிக்க வைப்பது ரகளை!

கதாநாயகனின் அம்மாவாக வருகிற சரண்யா பொன்வண்ணன் ஆர்வக்கோளாறு யூ டியூபராக செய்யும் அலப்பரை, அப்பாவாக வருகிற விடிவி கணேஷ் பாவாடை பறக்க ஆடும் நடனம் கிச்சுக்கிச்சு மூட்டும் எபிசோடுகள்!

ஒட்டிப்போன கன்னங்களுடன், மிரட்சி தரும் மேக்கப்போடு ஆவியுலக ஆராய்ச்சியாளராக வருகிற ரெஜினா கசான்ட்ரா, ஹைடெக் பேயோட்டும் நிபுணராக வருகிற நாசர் என இன்னபிற கதாபாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்பு நேர்த்தி.

எக்குத்தப்பாய் வந்து பேய்களிடம் மாட்டிக்கொள்கிற ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி தங்கள் பங்கிற்கு சிரிப்பூட்டுகிறார்கள்.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை திகில், திரில், காமெடி என கலந்து பயணிக்கும் திரைக்கதைக்கு பலம் கூட்டியிருக்கிறது.

கலை இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் காட்சிகளுக்கு உயிரோட்டம் தந்திருக்கிறார்கள்.

வழக்கமான காமெடி பேய்ப்படங்களில் இருக்கிற அத்தனை விஷயங்களும் இந்த படத்தில் உண்டு. ஆனாலும், கனவுலகில் பேய்களிடம் மாட்டிக் கொள்கிற கதைக்களம் தமிழ் சினிமாவுக்கு புதிது. அந்த அனுபவத்தை உணர, காட்சிக்கு காட்சி ரசித்துச் சிரிக்க கான்ஜூரிங் கண்ணப்பன் ஓடும் தியேட்டரை குடும்பத்தோடு நாடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here