விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் மற்றும் பலர் நடிப்பில், சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘டெவில்.’ இந்த படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் இயக்குநர் மிஷ்கின்.
சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் தேவி பாரதி எழுதிய ‘ஒளிக்குப் பிறகு இருளுக்கு அப்பால்’ என்ற நாவலைத் தழுவி உருவாகியிருக்கும் இந்த படம் வரும் பிப்ரவரி 2-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
படத்தின் இயக்குநர் ஆதித்யா பேசியபோது, ‘‘ ஒளிக்குப் பிறகு இரவுக்கு அப்பால் புத்தகத்தினை படித்தேன். கலைஞர்கள் எப்போதுமே சமூகத்தை மேம்படுத்தி சிந்திக்க வைப்பார்கள். அந்த சிந்தனை அக்கதையில் இருந்தது. அதை வைத்து ஒரு கதையினை உருவாக்கத் துவங்கினேன். எம்.கே.மணி திரைக்கதைக்கு உதவி செய்தார்.
பூர்ணா ஒரு நடிப்புப் பேய். ஸ்கார்ஸி படங்களில் எப்படி டி நீரோ இருக்கிறாரோ அது போல், என் படங்களில் எப்போதும் அவர் இருப்பார். நீதி தவறப்படும் போது வாழ்க்கை சிக்கலாகும் என்பதை விதார்த்தின் கதாபாத்திரம் பேசும்” என்றார்.
நடிகர் விதார்த் பேசியபோது, ‘‘இதுவரை மிஷ்கின் சார் இயக்கத்தில் நடிக்கவில்லை என்றாலும், அவர் இசையமைத்த முதல் படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. பின்னணி இசையமைக்கும் போது அதைப் பார்ப்பதற்கும் என்னை அனுமதித்தார். என் நடிப்பு இப்படத்தில் பேசப்பட்டால் அதற்கு முழு காரணம் இயக்குநர் ஆதித்யா அவர்கள் தான். நெருக்கமான பாடல் காட்சிகளில் அவர் சொல்லிக் கொடுத்ததில் பாதி கூட நானும் அந்த நடிகையும் நடிக்கவில்லை என்பது தான் உண்மை. டெவில் நல்ல திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது. உங்கள் எல்லோருக்கும் படம் கண்டிப்பாக பிடிக்கும். படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள்” என்றார்.
இயக்குநர் மிஷ்கின் பேசியபோது, ‘‘ஒரு படத்தை நீங்கள் உண்மையாக எடுத்திருக்கிறீர்கள் என்றால், அந்த படத்திற்குள் கேளிக்கைகள், சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கலாம். அதை மீறி நெஞ்சைத் தைப்பது போல் ஒரு விஷயம் இருக்க வேண்டும் என்று சொல்வேன். அதுதான் திரைப்படத்திற்கான உயிர்.
வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், எதற்காக வாழ வேண்டும் என்பதற்கான கேள்விகளின் பதில் இருப்பதால் இப்படம் நல்ல படம் என்பேன். மிகச்சிறந்த படம் என்று சொல்வதற்கில்லை.
ஒரு பெண்ணின் உணர்வு நிலையில் ஏற்படும் குழப்பநிலை இது காதலா, இல்லை காமமா என்கின்ற குழப்பத்தை பதிவு செய்திருக்கிறான் இயக்குநர் ஆதித்யா.
நான் இளையராஜா ஐயாவிடம் இருந்து சண்டை போட்டு வந்ததற்குப் பின்னர் 6 ஆண்டுகளாக இசையை கற்று வருகிறேன்… இப்படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று கேட்டதும் ஏற்றுக் கொண்டு இசையமைத்து இருக்கிறேன்…. என் இசைக்கு 35 மதிப்பெண் கொடுக்கலாம் என்று நம்புகிறேன்.
பத்திரிக்கை நண்பர்களாகிய நீங்கள் டெவில் திரைப்படம் நன்றாக இருந்தால் நன்றாக இருக்கிறது என்று எழுதுங்கள். நன்றாக இல்லை என்றால் ஆதரவு கொடுக்க வேண்டாம்” என்றார்.
நடிகை பூர்ணா, நடிகர் ஆதித் அருண், தயாரிப்பாளர் ஹெச் பிக்சர்ஸ் ஹரி, தயாரிப்பாளர் டச் ஸ்கிரீன் ஞானசேகர் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.