இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்ம்ரிதி வெங்கட், கோவை சரளா எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடிக்க, மீரா மஹதி இயக்கியிருக்கும் கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படம் ‘டபுள் டக்கர்.’
படத்தை ஏர் ஃபிளிக் நிறுவனம் தயாரிக்க, வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. நிகழ்வில் படத்தின் இயக்குநர் மீரா மஹதி பேசியபோது, ”12 வருட உழைப்புக்குப் பின்னர் எனக்கு இந்த மேடை கிடைத்திருக்கிறது. நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியது இல்லை. இது வரை பத்து பனிரெண்டு குறும்படங்கள் எடுத்திருக்கிறேன். முகநூல் வட்டத்தில் இருக்கும் என் நண்பர்கள் குறும்படத்தைப் பார்த்துவிட்டு நீ சினிமாவே இயக்கலாம் என்று ஊக்கம் கொடுத்தார்கள். நான் கதை சொல்வதற்காக அஜீத், விஜய் போன்ற பெரிய ஹீரோக்களிடம் செல்லவில்லை. அவர்களை நெருங்கக்கூட முடியாது என்று தெரியும். மூன்று அல்லது நான்கு கோடி பட்ஜெட்டிற்குள் வரும் வளர்ந்து வரும் நாயகர்கள் சிலரிடம் தான் கதை சொல்ல முயன்று வந்தேன்.
ஆனால் அவர்கள் யாரும் ஒரு சாதாரண மனிதனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதையைக் கூட எனக்குக் கொடுக்கவில்லை. நான் கேட்டதெல்லாம் வெறும் ஐந்து நிமிடம் மட்டும் தான். அதை எனக்கு யாருமே கொடுக்கவில்லை.
மைம் கோபி அவர்கள் மூலமாகத் தான் இந்த வாய்ப்பு எனக்கு வந்தது. நான் ஒரு இண்டிபெண்டண்ட் ஃபிலிம் மேக்கர் என்று சொல்லிக் கொண்டு மைம் கோபி சாரிடம் கதை சொல்லப் போயிருந்தேன். மைம் கோபி சார் தான் என்னை தீரஜ் சாரிடம் அறிமுகம் செய்து வைத்தார்கள். தீரஜ் சார் என்னிடம் எதுவுமே கேட்கவில்லை, நீ என்ன சாதி..? என்ன மதம்…? யாரிடம் வேலை பார்த்தாய்..? என்று எதுவுமே என்னிடம் கேட்கவில்லை அவர் கேட்டதெல்லாம் ஐந்து நிமிடத்தில் என்னை உன்னால் இம்ப்ரஸ் செய்ய முடியுமா..? என்று கேட்டார். நான் அந்த ஐந்து நிமிடத்தைத் தான் யாரும் எனக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் சார் என்று சொன்னேன். அவர் கொடுத்தார். நான் கதை சொல்லத் துவங்கினேன். கதை சொல்லி முடிக்கும் போது 1 மணி நேரம் ஆகியிருந்தது. ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு தீரஜ் சார் என்னிடம் கதை கேட்டார்.
ஆரம்பிக்கும் போது இப்படம் சிறிய படமாகத் தான் இருந்தது. படத்தில் வரும் அனிமேஷன் பகுதிகளை நான் ஏற்கனவே மனதில் டிசைன் செய்து வைத்திருந்தேன். பிறகு படத்தில் வரும் அனிமேஷன் பகுதிகளைப் பற்றிக் கேட்டுவிட்டு தீரஜ் சார், இது சூப்பராக ஒர்க்-அவுட் ஆகும், நாம் இதை கண்டிப்பாக பெரிய அளவில் செய்வோம் என்று கூறி படத்தின் பட்ஜெட்டை எட்டு மடங்காக உயர்த்திவிட்டார். பின்னர் சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட் எல்லாம் வந்தப் பின்னர் படத்தின் பட்ஜெட் இன்னும் கொஞ்சம் அதிகமானது.
எனது முதல் மேடையிலேயே மிஷ்கின் சார் அமர்ந்திருப்பதை நான் என் பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த அனைவருக்கும், இந்தப் படத்தின் உருவாக்கத்தில் ஈடு இணையின்றி உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். என்னைப் போல் வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கு பத்திரிகை நண்பர்கள் ஆதரவு கொடுங்கள்” என்றார்.
நிகழ்வில், சிறப்பு விருந்தினர் இயக்குநர் மிஷ்கின், நாயகன் தீரஜ், நாயகி ஸ்ம்ரிதி வெங்கட், படத்தின் இணை தயாரிப்பாளர் சந்துரு, படத்தொகுப்பாளர் வெற்றிவேல் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.