கொள்ளையடிப்பது நோக்கம்; கொள்ளையடிக்கப்போன இடத்தில் இருக்கிறவர்களை கொடூரமாகத் தாக்குவதில் ஒருவித சுகம், தாக்கியவர்களில் பெண்கள் இருந்தால் அவர்களை ரத்தம் வழிய வழிய வலியோடு கற்பழிப்பதில் ஆனந்தம்…. இதையே பிழைப்பாக வைத்திருந்த, இப்போதும் வைத்திருக்கிற ‘மனிதாபிமானம் என்றால் என்ன?’ என்றும் ‘குற்ற உணர்ச்சி என்ன விலை?’ என்றும் கேட்கிற ‘தண்டுபாளையம் கேங்’ பற்றி இந்தியாவில் பலருக்கும் தெரிந்திருக்கும்; கன்னடத்தில் அவர்களை மையப்படுத்தி திரைப்படங்களும் வந்ததுண்டு. இதோ அவர்களைப் பற்றிய இன்னொரு படம்.
கொடூரமான ‘தண்டுபாளையம் கேங்’கை துணிச்சலான காவல்துறை அதிகாரியொருவர் குறிவைத்துப் பிடித்து, மரண தண்டனை பெற்றுத்தர அடுத்த கும்பல் இன்னும் வீரியமாய் புறப்படுகிறது. அவர்களைப் பிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட தனிப்படையின் தலைமை அதிகாரி, அவர்களைப் பிடித்து, சட்டத்தைக் கையிலெடுத்து தனிப்பட்ட முறையில் தண்டனை தருகிறார்.
கொடூர கும்பல் அவரை விட்டு வைக்குமா? அவரை தீர்த்துக்கட்ட, அந்த கும்பலுக்கு வாரிசாக மற்றொரு கும்பல் புறப்படுகிறது. அந்த குழுவுக்கு இரு பெண்கள் தலைமையேற்கிறார்கள். அவர்களிடமிருந்து காவல்துறை அதிகாரி தப்பித்தாரா? இல்லையா? படத்தின் மீதிக் கதையில் பதில் இருக்கிறது.
சோனியா அகர்வாலும் வனிதா விஜயகுமாரும் படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும், அவர்களின் கும்பலை தண்டித்த அதிகாரியையும் அவரது குடும்பத்தையும் பழி வாங்கும்போது வெளிப்படும் அவர்களின் கொலைவெறியும்,
தண்டுபாளையம் கும்பலின் தலைவியாக வருகிற சுமன் ரங்கநாத்தாகட்டும், அவரது குழுவினராகட்டும் அத்தனைப் பேரும் செய்கிற கொலைகள், கற்பழிப்புகள் படம் பார்ப்போருக்கு உச்சபட்ச பயத்தை உருவாக்காமல் விடாது!
தண்டுபாளையம் கும்பலின் ஒரு குழுவை வித்தியாசமான முறையில் அழிக்கிற தனிப்படை அதிகாரியாக வருகிற (இந்த படத்தை இயக்கி, தயாரித்திருக்கிற) டைகர் வெங்கட், அவர் ஏற்ற பாத்திரத்துக்கு உரிய கம்பீரத்தையும் துணிச்சலையும் சரியான விகிதத்தில் தன் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார். மற்ற நடிகர், நடிகைகளும் கதைக்களத்தை தாங்கியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு, பின்னணி இசை என மற்ற பணிகளில் ஈடுபட்டவர்களின் பங்களிப்பு கதைக்களத்துக்கு பலமூட்டியிருக்கிறது.
நம் நாட்டில் நடந்த, நடக்கிற கொடூரமான சம்பவங்களை அதன் உண்மைத் தன்மை பிரதிபலிக்கும்படி படமாக்கியிருப்பதால் எல்லோராலும் பார்க்க முடியாது. அதனாலேயே இயக்குநர், படத்தின் போஸ்டரிலேயே ‘மரண மாஸ் ரசிகர்களுக்கு மட்டும்’ என்ற வாசகத்தை சேர்த்திருக்கிறார். நீங்க ‘மரண மாஸ் ரசிகர்’ என்றால் உடனே தண்டுபாளையத்துக்கு டிக்கெட் புக் பண்ணுங்க. இல்லாவிட்டால் தண்டுக்காம… மன்னிக்கவும் கண்டுக்காம விடுங்க!