கவின் – அபர்ணாதாஸ் நடிப்பில் உருவாகி, வரும் 10-ம் தேதி வெளியாகவிருக்கும் படம் ‘டாடா.’ கணேஷ் கே பாபு இயக்கியிருக்கும் இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் தயாரித்திருக்கிறார்.

இந்த படத்தின் பாடல்கள் முன்னரே வெளியாகி பெரியளவில் வரவேற்பு பெற்றிருக்க, படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

இயக்குநர் கணேஷ் கே பாபு, “கவின் மற்றும் அபர்ணா இருவருமே தங்களை முழுமையாக ஒப்படைத்து இந்த படத்தைக் கொடுத்துள்ளனர். தமிழ் சினிமாவில் 2023-ல் சிறந்த நடிகராக கவின் இருப்பார். அபர்ணா நிறைய விருதுகள் பெறுவார்” என்றார்.

கவின், ”நான்கு வருடங்களாக நாங்கள் திட்டமிட்டு இந்தப் படம் சிறப்பாக வரவேண்டும் என்றுதான் உழைத்தோம். அபர்ணாவை நான் முதன்முதலில் ‘பீஸ்ட்’ செட்டில்தான் பார்த்தேன். கதை மேல் இருந்த நம்பிக்கை அவர் மேலேயும் இருந்தது. சிறப்பாக நடித்துக் கொடுத்துள்ளார்” என்றார்.

கதாநாயகி அபர்ணாதாஸ், “கதாநாயகியாக நான் நடித்த முதல் தமிழ்ப் படம் இது என்பதால் எனக்கு எமோஷனலாக இருக்கிறது. கேரளாவுக்கு வந்து கதை சொன்னதில் இருந்து படம் முடியும் வரை எனக்கு உறுதுணையாக நின்ற என் இயக்குநர் கணேஷூக்கு நன்றி. என்னை இயக்குநரிடம் அறிமுகப்படுத்தியது கவின்தான். கவின் இல்லை என்றால் இந்தப் படத்தில் நான் இல்லை. தமிழ் சினிமாவில் இது என் சிறந்த தொடக்கமாக இருக்கும்” என்றார்.

படத்தின் இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின், “இந்த படம் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர். நிறைய குழந்தைகள் நடித்துள்ளனர். அதனால் படம் அனைத்து வயதினரையும் கவரும் வகையில் இருக்கும்” என்றார்.

நடிகர் ஹரிஷ், ஒளிப்பதிவாளர் எழில் அரசு, எடிட்டர் கதிரேஷ் அழகேசன் உள்ளிட்டோரும் விழாவில் பேசினார்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here