வரிசையாய் பான் இந்திய படங்கள்… தெலுங்கில் பிஸியானார் ‘மைக்கேல்’ படத்தில் கவனிக்க வைத்த தீப்ஷிகா!

சமீபத்தில் வெளியான ‘மைக்கேல்’  படத்தில் தனது நடிப்பால் கவனிக்க வைத்தவர் தீப்ஷிகா.

கதாநாயகனாக சந்தீப் கிஷன், கதாநாயகியாக திவ்யான்ஷா முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி, வரலெட்சுமி சரத்குமார், இயக்குநர் கௌதம் மேனன், வரலெஷ்மி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்த படத்தில், கௌதம் மேனனின் இரண்டாவது மனைவியாக, சிறு வயது சந்தீப் கிஷனின் தாயாக நடித்திருந்தார்.

இவர் சென்னையில் பிறந்து வளர்ந்து, படித்ததெல்லாம் சென்னையில்தான்! தமிழில் நடித்துக் கொண்டிருக்கும்போதே தெலுங்கில் இருந்து வாய்ப்புகள் தேடி வர இப்போது தீப்ஷிகா கிட்டத்தட்ட அரை டஜன் படங்களில் பிஸி. இந்த நிலையில் ‘மைக்கேல்’ படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்தும், அடுத்தடுத்து தான் நடித்து வரும் படங்கள் குறித்தும் உற்சாகமாக பேசினார் தீப்ஷிகா.

“மைக்கேல் படத்தில் நான் நடித்திருந்த ஜெனிபர் கதாபாத்திரத்திற்கு திரையுலகில் இருந்தும் நண்பர்களிடம் இருந்தும் ரசிகர்களிடமிருந்தும் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. இதற்கு இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். சொல்லப்போனால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் வேறு ஒரு பிரபல நடிகை நடிப்பதாகத்தான் இருந்தது.. கடைசி நேரத்தில் சில காரணங்களால் அவர் விலகிவிட, இயக்குநர் என்னை அழைத்து இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமா என கேட்டார்,

கதாபாத்திரம் குறித்து அவர் கூறிய அந்த ஒன்லைன் என்னை உடனே  ஒப்புக்கொள்ள வைத்துவிட்டது. காரணம் படத்தில் என்னுடைய ஜெனிபர் கதாபாத்திரத்தை மையப்படுத்தி தான் மொத்த படமும் நகரும் விதமாக கதை அமைந்திருந்தது. கதை கேட்கும்போதே இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என என்னால் உணர முடிந்தது. ஒரு சின்ன கதாபாத்திரம் என்றில்லாமல் முதல் பாதி முழுவதும் ஆங்காங்கே வந்து செல்லும் விதமாகவும் கிளைமாக்ஸில் வரும் விதமாகவும் காட்சிகளை அழகாக கோர்த்திருந்தார் இயக்குநர்.

அதுமட்டுமல்ல விஜய்சேதுபதி, சந்தீப் கிஷன், இயக்குநர் கௌதம் மேனன் உள்ளிட்ட பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பும் இந்த படத்தின் மூலம் அமைந்தது. படப்பிடிப்பில் கௌதம் மேனன் சாரை பார்க்கும்போது ஒரு முழு நேர நடிகராகவே அவர் மாறிவிட்டதை காண முடிந்தது. உடன் நடிப்பவர்களுக்கும் சரி, இயக்குநர்களுக்கும் சரி அவர் ஒரு வசதியான நடிகராகவே மாறிவிட்டார்.

விஜய்சேதுபதியுடன் எனக்கு இன்னும் நிறைய காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் படத்தின் நீளம் கருதி அவருடன் நான் நடித்த சில காட்சிகள் இதில் இடம்பெற முடியாமல் போய்விட்டது. விஜய்சேதுபதி யதார்த்தமான ஒரு நடிகர். எல்லோரையுமே சமமாக மதித்து பழக கூடியவர். சிறைச்சாலை லொக்கேஷனில் காட்சிகளை படமாக்கியபோது அங்கே பின்னணியில் துணை நடிகர்களாக நின்று கொண்டிருந்தவர்களிடம் கூட தானே சென்று அந்த காட்சி பற்றி கூறி, இப்படியெல்லாம் நீங்கள் உங்கள் நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என விளக்கியதை பார்க்கும்போது ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது.

படத்தில் கதாநாயகன் சந்தீப் கிஷனுடன் நான் இணைந்து நடிக்கும் விதமாக காட்சிகள் எதுவும் இல்லை. ஆனாலும் இந்த படக்குழுவினர் அனைவருமே ஒரு நட்பு வட்டத்தில் இணைந்து பணியாற்றியதால் தனக்கான காட்சிகள் இல்லை என்றாலும் படப்பிடிப்பை கவனிப்பதற்காக வந்து விடுவார் சந்தீப் கிஷன். படத்தில் அவரது சிறு வயது கதாபாத்திரத்திற்கு நான் அம்மாவாக நடித்திருந்தாலும், எந்த இடத்திலும் ஒரு அம்மா கதாபாத்திரம் என்பது போல காட்டாமல் ஜெனிபர் என்கிற கதாபாத்திரத்தையே இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி முன்னிறுத்தி இருந்தார்.

இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டபோது என்னுடைய கதாபாத்திரம் இந்த அளவிற்கு பேசப்படும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. படம் பார்த்துவிட்டு பலரும் பாராட்டினார்கள்.

தற்போது தெலுங்கில் ‘உத்வேகம்’ என்கிற படத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரம். அது மட்டுமல்ல சமூக ஆர்வலரும் கூட.. பொது பிரச்சனைகளில் தலையிட்டு அவற்றிற்கு சட்டரீதியாக போராடும் ஒரு வலுவான கதாபாத்திரம். படத்தின் கதாநாயகனாக அருண் ஆதித்யா நடித்துள்ளார் அவருக்கும் கூட வழக்கறிஞர் கதாபாத்திரம் தான்.. எங்கள் இருவருக்கும் ஏற்படும் கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும்.

அடுத்ததாக தெலுங்கில் நான் நடித்துள்ள ராவண கல்யாணம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் உருவாகியுள்ளது. இதில் சந்தீப் மாதவ் கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகர் சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்ல தெலுங்கு சினிமாவின் பிரபல முன்னணி நடிகர் ரவிதேஜாவின் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்திலும் கதாநாயகியாக நடித்து முடித்து விட்டேன்.

தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் இருந்து என்னைத்தேடி பட வாய்ப்புகள் வருவதால் தற்போதைக்கு தெலுங்கில் முழு கவனம் செலுத்தி நடித்து வருகிறேன். தமிழிலும் நான் நடிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.

தெலுங்கில் ஒரு பான் இந்தியா படத்தில் அறிமுகமானது சந்தோசம் தான். அடுத்த படமும் நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படி அடுத்தடுத்து பான் இந்தியா படங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். இன்னும் உற்சாகமாக எனது பயணத்தை தொடர்கிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here