காவல்துறையின் போதை விழிப்புணர்வு ஆவணப்பட போட்டி பரிசளிப்பு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு! ‘எழவு’ படத்திற்கு முதல் பரிசு!

போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, சென்னை மாநகர காவல்துறை சார்பில் Drive Against Drugs என்ற பெயரில் மாணவர்களுக்கான குறும்படப் போட்டி நடத்தப்பட்டது.

போட்டியை திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒருங்கிணைத்து நடத்தினார். 300-க்கும் அதிகமான மாணவர்களின் குறும்படங்களிலிருந்து, நான்கு படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது மற்றும் பரிசு வழங்கப்பட்டது. சிறுவர்களுக்கான காமிக்ஸ் புத்தகமும் வெளியிடப்பட்டது.

பிரகதீஸ் இயக்கிய ‘எழவு’ முதல் பரிசையும், கிரிஷாங் பாலநாராயணன் இயக்கிய ‘அன்பு’ 2-வது பரிசையும், ஹேமந்த் இயக்கிய ‘அன்பின் போதை’ 3-வது பரிசையும், மனோஜ் கண்ணன் இயக்கிய ‘போலீஸ்’ மற்றொரு 3-வது பரிசையும் பெற்றன.

நிகழ்வில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் அன்பு, காவல் துறை இணை ஆணையர் ரம்யா பாரதி, பவன்குமார் ரெட்டி ஐபிஎஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின், ”போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையாக நடக்கும் குறும்பட போட்டி மற்றும் காமிக்ஸ் வெளியீட்டு விழா மிக சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதனை மிக சிறப்பாக நடத்தும் காவல்துறை நண்பர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் அன்பு, காவல் துறை இணை ஆணையர் ரம்யா பாரதி மற்றும் பவன்குமார் ரெட்டி ஐபிஎஸ் ஆகியோருக்கு நன்றி. முக்கியமாக இந்தப் படங்களைப் பார்த்துத் தேர்வு செய்த இயக்குநர் நண்பர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி.சத்யம் தியேட்டரில் நிறைய திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன் ஆனால் சமீபத்தில் நான் எந்த ஒரு திரைத்துறை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை, ஆனால், இது போதைப்பொருளுக்கெதிரான குறும்பட போட்டி என்பதால் உடனே ஒப்புக்கொண்டு வந்தேன். விக்னேஷ் சிவன் போன வருடம் உலகம் வியந்து பார்த்த செஸ் ஒலிம்பியாட்டை தொகுத்து இயக்கினார். நானும் ரௌடிதான் படமெடுத்தவர் இங்கு இந்த விழாவை ஒருங்கிணைக்கிறார். அவருக்குப் பாராட்டுக்கள்.இப்போதெல்லாம் நிறைய தவறான செய்திகள் வாட்ஸப் மூலம் மிக எளிதாகப் பரவி விடுகிறது. இங்கு மாணவர்களிடம் எந்த ஒரு செய்தியையும் அதன் உண்மை அறிந்து பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன். மக்களுக்கான நல்ல செய்தியை இந்த குறும்படங்கள் சொல்கிறது. இதனை உருவாக்கிய அனைத்து மாணவர்களுக்கும் நன்றிகள். காவல்துறை இது போல் இன்னும் பல நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here