இந்த படத்தின் ஹீரோ நன்றாக முத்தம் கொடுக்கிறார்! -‘டைனோசர்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் போனி கபூர் பேச்சு

எம்.ஆர். மாதவன் இயக்கத்தில், உதய் கார்த்திக், ‘அட்டு’ புகழ் ரிஷி ரித்விக், சாய் ப்ரியா தேவா, ஸ்ரீனி, டி.மானேக்க்ஷா கவின் ஜெய்பாபு, டி.என். அருண்பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள கமர்ஷியல் படம் ‘டைனோசர்ஸ்.’

இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் திரைப்பிரபலங்கள் முன்னிலையில் நடந்தது.நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எம்.எச். அசன் மவுலானா, ”சினிமாவுக்கும் எனக்கும் சம்மந்தமில்லை. இந்த படத்தில் நடித்திருக்கும்  நண்பர் அருண் பாலாஜி என் பள்ளித்தோழர். இந்தபடத்தை பார்க்க என்னை அழைத்தார். தலைவா படம் சரியில்லை என்றால் நான் போய் விடுவேன் என்றேன்.பரவாயில்லை என்றார்.

படத்தை முழுமையாக பார்த்து ரசித்தேன். படம் என்னைக் கட்டிப்போட்டுவிட்டது. தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள். உங்கள் முதலீடு பன்மடங்காக திரும்ப வரும். இயக்குநர் மற்றும் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்” என்றார்.

தயாரிப்பாளர் போனி கபூர், ”இங்கு பேசிய அனைவரும் படத்தைப் பற்றி நம்பிக்கையாகப் பேசினார்கள். இந்தக்குழு கோவிட் காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு இப்படத்தை உருவாக்கியுள்ளனர். படத்தை நான் பார்த்து விட்டேன். மிக அற்புதமாக இருந்தது. உதய் கார்த்திக் மிக நன்றாக நடித்துள்ளார். அவருக்கு டான்ஸ், ஃபைட், ரொமான்ஸ் எல்லாம் நன்றாக வருகிறது. நன்றாக முத்தம் கொடுக்கிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்” என்றார்.

நடிகர் விஜயகுமார், ”கதையின் நாயகன் உதய் கார்த்திக் என் குடும்பத்தின் பிள்ளை. அவருக்காகத்தான் இங்கு வந்தேன். படக்குழுவினர் அனைவரும் புதியவர்கள் என்றார்கள். இப்போது படத்தின் கதையும் படமும் தான் முக்கியம். எனவே மக்கள் இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்வார்கள்” என்றார்.

இயக்குநர் மிஷ்கின், ”இந்த படம் பற்றி அனைவரும் மிகுந்த நம்பிக்கையோடு பேசுகிறார்கள். டிரெய்லர் நன்றாக உள்ளது. படக்குழுவினரின் உழைப்பு தெரிகிறது. இந்த குழு என்னை அழைத்த போது என்ன பெரிதாகச் செய்திருக்கப் போகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால், அனைவரின் உழைப்பும் துடிப்பும் தெரிகிறது. புதுமையாகச் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் புரிகிறது. படம் மிகப்பெரிய வெற்றி பெறும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார், ”இந்த படத்தை முன்னணி நடிகர்களை வைத்து எடுக்காமல் கதையை நம்பி உருவாக்க நினைத்துள்ளார் இயக்குநர் மாதவன். மாஸாக ஒரு படத்தைத் தந்துள்ளார். கதாநாயகன் உதய் கார்த்திக் எனக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் ஶ்ரீ தேவியின் குடும்பத்திலிருந்து வந்தவர். அவர் பெரும் கதாநாயகனாக வலம் வருவார்” என்றார்.

இயக்குநர் எம்.ஆர். மாதவன், ”சினிமா கண்டிப்பாக அனைவரையும் எட்டி உதைக்கும். நாம் தான் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். படம் வெற்றி பெறுவது எனக்கு முக்கியம் என்பதை விட படத்தில் பணி புரிந்துள்ள 100 பேருக்குத் தான் முக்கியம். இந்த படம் பல கதாநாயகர்களிடம் சென்றது. ஆனால், கார்த்திக் இப்படத்தில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். பல நண்பர்களின் முயற்சியால் தான் நான் இங்கு வந்தேன். தயாரிப்பார் ஸ்ரீனி சார் எனத் தந்தை போன்றவர், நான் கேட்ட அனைத்தும் செய்து கொடுத்தார். நான் வாழ் நாள் வரை அவரை மறக்க மாட்டேன். 143 தயாரிப்பாளர்களை நான் அணுகியுள்ளேன். ஆனால், இவர் தான் எனக்கு இந்த வாய்ப்பை அளித்தார். என்னை இந்த தயாரிப்பாளரிடம் அழைத்துச் சென்றவர் இயக்குநர் எச். வினோத். அவருக்கு மிகவும் நன்றி.

கதாநாயகன் உதய் கார்த்திக்பெரிய நடிகர்களான அஜித், விஜய் போன்று நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இரவு பகல் பாராமல் பணி செய்துள்ளார். கதாநாயகி தமிழ் பேசும் நடிகையாகத் தான் இருக்க வேண்டும் என நினைத்தேன். அது போல அவர் அழகாக நடித்துள்ளார். ஸ்ரீனி நடிப்பு இந்த படத்தில் சிறப்பாகப் பேசப்படும். ஒளிப்பதிவாளர் என்னுடைய பாதி வேலையை செய்தார். இந்தப் படத்திற்கு இசையமைத்த போபோ சசி அதிக மெனக்கெடலுடன்  உழைத்துள்ளார்.  இசை அருமையாக வந்துள்ளது. இந்த படம் கண்டிப்பாக உங்களுக்குச் சிறந்த பொழுதுபோக்காக இருக்கும். நான் கலைப் படம் பண்ணவில்லை; காலாய் படம் பண்ணியுள்ளேன். கண்டிப்பாக இந்தப்படம் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.

படத்தின் நாயகன் உதய் கார்த்திக், ”முதலில் என் மாமா போனி கபூர் அவர்களுக்கு நன்றி. கோவிட் நேரங்களிலும் மூன்று படத்தை வெளியிட்டு பலரது வாழ்வில் வெளிச்சத்தை அளித்துள்ளார். அவருக்குப் பல பணிகள் உள்ளது. இதற்கிடையில் எனக்காக இங்கு வந்ததற்கு நன்றி. இந்த படம் உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும்” என்றார்.

நடிகர் ஸ்ரீனி, ”எனக்கு 2015லிருந்தே இயக்குநர் மாதவனைத் தெரியும். முதல் தடவை அவரிடம் கதை கேட்டு ஏன் தலைவா இந்த டைனோசர்ஸ் தலைப்பு?’ என்றேன். பொறக்கும்போது ஈயா, எறும்பா கூட பொறக்கலாம். ஆனா, சாகும்போது டைனோசரா சாகணும். ஏன்னா, அப்பதான் நாம செத்தா தூக்குறதுக்கு ஒரு ஆயிரம் பேராவது வருவான்’ அப்படின்னு சொன்னாரு. இன்னைக்கு சத்யம் தியேட்டர்ல எங்க டைனோசர்ஸ் படத்தோட டிரெய்லர் 1000 பேருக்கு முன் இவ்வளவு பெரிய  வெளியிட்டு விழாவா நடக்கும்போது அதை மிக சந்தோசமாக உணர்கிறேன். கண்டிப்பாக உங்களுக்குப் படம் பிடிக்கும்” என்றார்.

கேலக்ஸி பிக்சர்ஸ் (Galaxy Pictures) ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here