‘தில்லு இருந்தா போராடு’ சினிமா விமர்சனம்

‘முயற்சி செய்தால் விரும்பிய துறையில் ஜெயிக்கலாம்’ என தன்னம்பிக்கையூட்டி, ‘நாம் விரும்பி, நம்மை விரும்பாத பெண்ணை அடைய விரும்பினால் துரத்தித் துரத்தி முத்தம் கொடுத்து நினைத்ததை சாதிக்கலாம்’ என எக்குத்தப்பான கருத்தை விதைத்திருக்கிற படம்.

அந்த இளைஞன் நன்றாகப் படித்திருந்தாலும் வேலை வெட்டிக்குப் போக விரும்பாமல் ஜாலியாக சுற்றித் திரிகிறான். அவனுக்கு தன் குடும்பத்தைவிட சாதி, பொருளாதாரம் என எல்லாவிதங்களிலும் உயர்ந்த குடும்பத்துப் பெண் மீது காதல் வருகிறது. அவனது காதலை அந்த பெண் விரும்பாவிட்டாலும் விடாமல் பின் தொடர்கிறான். அதனால் அந்த பெண்ணுடைய அப்பாவால் அவன் மிரட்டப்படுகிறான்,  அவன் குடும்பம் அவமானத்துக்கு ஆளாகிறது. அதன்பிறகும் அந்த பெண்ணை அடைய துடிக்கிறான். அந்த விபரீத முயற்சியின் விளைவுகள் என்ன என்பதே மிச்சசொச்ச கதை.

எந்த லட்சியமுமின்றி தறுதலையாய் சுற்றித் திரிவது, தான் காதலிக்கும் பெண்ணை அடைய விதவிதமாக முயற்சிப்பது, மடக்கிப் பிடித்து முத்தம் கொடுப்பது, ஆதரவற்ற பிள்ளைகளுக்கு பாடம் நடத்தி ஊரே புகழ்கிற உச்சத்தை எட்டுவது, அடிக்கடி காதலியுடன் டூயட் பாட்டுக்கு உடல் நோகாமல் ஆடுவது என வலம் வருகிறார் கார்த்திக் தாஸ்.

வருகிற காட்சிகளிலெல்லாம் முழம் கணக்கில் அல்ல, மீட்டர் கணக்கில் மல்லிகைப் பூ சூட்டிக் கொண்டு புத்துணர்ச்சியோடு வெளிப்படுவது, தன்னை காதலிக்க கட்டாயப்படுத்தும் இளைஞனை திமிரோடு எதிர்கொள்வது, அவன் மீது காதல் வந்ததும் மனநிலையை தலைகீழாய் மாற்றிக் கொள்வது, மணமான பின் வாழ்க்கைத் துணைவனை மாமா மாமா என செல்லம் கொஞ்சுவது என அழகாலும் அளவான நடிப்பாலும் மனம் நிறைக்கிறார் அனு கிருஷ்ணா.

ஹீரோவுக்கு சிக்கல் வரும்போதெல்லாம், ‘பஞ்சாயத்து பரமேஸ்வரி’ என்ற பெயரில் தெனாவட்டாக என்ட்ரி கொடுத்து அந்த காட்சியை ரகளையாக்கியிருக்கிறார் வனிதா விஜயகுமார்.

ஒருசில காட்சிகளில் மட்டுமே அட்டனன்ஸ் போட்டு, கொஞ்சமே கொஞ்சம் கலகலப்பூட்டியிருக்கிறார் யோகிபாபு.

ஹீரோயினுக்கு அப்பாவாக வருகிற தென்னவன் உட்பட மற்ற பாத்திரங்களில் வருகிற அத்தனைப் பேரும் அவரவர் பாத்திரத்தை வலுப்படுத்த முடிந்தவரை முயற்சித்திருக்கிறார்கள். ஒன்றிரண்டு காட்சிகளில் எட்டிப் பார்க்கும் மதுரா புவனேஸ்வரி, ‘யாருப்பா இந்த பொண்ணு?’ என கேட்க வைக்கிறார்.

பாகுபலி 5-ம் பாகத்தின் ஹீரோ சிம்மேந்திரபாபுவாக சாம்ஸ், கிரிக்கெட் பிளேயராக மனோபாலா இருவரும் காமெடி என்ற பெயரில் நடத்தும் அட்ராசிடி சிறிதளவு சிரிக்க உதவியிருக்கிறது.

ஜி.சாயிதர்ஷன் இசையில், ‘அடடா அழகழகா ஒரு பூஞ்சாரல்’, ‘தேவதையே என் தேவதையே’, ‘நீதான் சொன்னாயா’, ‘நான் கட்டழகு பொண்ணு’, ‘மனசெல்லாம் மழைத்துறல்’ என வரிசையாய் பாடல்கள் வரிசை கட்டினாலும், ‘அம்மாவும் இல்ல அப்பாவும் இல்ல’ பாடல் நெகிழ்ச்சியான காட்சியால் மனதைக் கவர்கிறது. ஒரு பாடலுக்கு ரிஷா போடும் குத்தாட்டம் இளைஞர்களின் ஹார்மோனை சூடேற்றக்கூடும்.

ஹீரோ, தான் விரும்பும் பெண்ணை அடைய எடுக்கும் முயற்சியில் காமத்தைக் கலந்திருப்பது ஏற்க முடியாத அக்கிரமம், மன்னிக்க முடியாத அநியாயம்.

திரைக்கதை தாறுமாறாக பயணித்தாலும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியிருப்பதற்காக, ஆதரவற்றோருக்கு உதவ தூண்டியிருப்பதற்காக அறிமுக இயக்குநர் எஸ்.கே. முரளிதரனுக்கு பாராட்டுக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here