‘டாடா’ சினிமா விமர்சனம்

படிக்கிற வயதில் ‘படுத்தால்’ விளைவு என்னவாகும் என பாடம் நடத்தும் படம்!

கல்லூரிப் படிப்பின் போது காதல், உணர்ச்சிகளின் தூண்டுதலால் எல்லை மீறல் என கவினும் அபர்ணாவும் உற்சாகமாக வலம் வருகிறார்கள். அதன் விளைவாக ‘அம்மா’வாகிறார் அபர்ணா. இருதரப்பு பெற்றோரும் எதிர்க்க, நண்பர்கள் உதவிக்கு வர, துவங்குகிறது தனிக்குடித்தனம்.

தாய்மையடைந்த காதலியை கவனித்துக் கொள்வதற்காக சம்பாதிக்கத் துவங்குகிறார் கவின். நிலைமையைச் சமாளிக்க வருமானம் போதவில்லை என்ற விரக்தியில் குடித்து தன்னை மறக்க நினைக்கிறார். அதனால் சண்டையும் சச்சரவுமாக வாழ்க்கைப் பயணம் ரணமாகிறது. இந்த சூழலில் குழந்தை பிறக்க, அந்த குழந்தையை அப்படியே விட்டுவிட்டு பெற்றோருடன் போய்விடுகிறார் அபர்ணா.

கர்ப்பப்பையின் சூடு முழுமையாக நீங்கும் முன்பே அம்மாவை பிரிந்த அந்த சிசுவின் நிலை என்ன? தனக்கு பிறந்த குழந்தையை அப்படி தவிக்கவிட்டு போவது ஒரு பெண் செய்யக்கூடிய காரியமில்லை எனும்போது அதை செய்ததன் பின்னணி என்ன? என்பதெல்லாம்தான் டாடாவின் கதையோட்டம்… இயக்கம் கணேஷ் கே பாபு

கவின் கல்லூரி மாணவன், ஐடி இளைஞன், பொறுப்பான அப்பா என அத்தனைக்கும் பொருந்துகிறார்.

காப்பகத்தில் குழந்தையை சேர்க்கும்போது ஏற்படும் வலியை பிரதிபலிக்கும்போதும், பின்னர் தவறுணர்ந்து மீட்டெடுக்கும் போதும் நெகிழ வைக்கிறார்.

கதையின் போக்கு சற்றே திசைமாறி உற்சாக டிராக்கில் பயணிக்கும்போது விடிவி கணேஷை கலாய்ப்பது, தன் மனைவியை பற்றி சக பணியாளன் தன்னிடமே அசடு வழிவதை எதிர்கொள்வது என காமெடியிலும் கவனம் ஈர்க்கிறார். தற்கொலைக்கு முயற்சிக்கும் ஐடி இளைஞனை அவமானத்திலிருந்து காப்பாற்ற வகுக்கும் வியூகம் ஒருசில நிமிட காட்சியானாலும் கலகல லகலக!

மிகச்சில தருணங்களில் உற்சாகமாக வலம்வருவது தவிர மற்ற அத்தனை காட்சிகளிலும் பாவப்பட்ட பெண்ணாகி அவதிப்படுகிற கதாபாத்திரத்தில் அபர்ணா தாஸ். அவர் கலங்கும் காட்சியில் மென்மனதுடையோர்க்கு கண்கள் வியர்க்கலாம்!

கதாநாயகனின் பெற்றோராக பாக்யராஜ், ஐஸ்வர்யா. தொப்புள் கொடியின் ஈரம்கூட முழுமையாக காயாத நிலையில், அம்மாவை பிரிந்த குழந்தையை சுமந்து வாசலில் நிற்கும் தங்கள் மகனை நிராதரவாக விடுகிற அதிசயப் பிறவிகளாக நடிப்புப் பங்களிப்பில் நேர்த்தி.

நண்பர்களாக வருகிற ஹரிஷ், கமல், பிரதீப்பின் குசும்பும் குறும்புமான சேட்டைகள் ரசிக்க வைக்கின்றன.

கதையின் அஸ்திவாரமான குட்டிச் சுட்டி இலனின் துறுதுறுப்பான நடிப்புக்கு, குறிப்பாக ‘உனக்கு அம்மா வேணுமா?’ என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் படுக்கையில் முகம் புதைக்கும் அழகுக்கு தனி பாராட்டு. அடுத்தடுத்த வாய்ப்புகள் காத்திருக்கிறது டியர் பேபி!

விடிவி கணேஷின் அறிமுகக்காட்சி சிடுமூஞ்சிகளையும் குலுங்கிச் சிரிக்க வைக்கும்.

‘கிருட்டு கிருட்டு’, ‘நம்ம தமிழ் ஃபோ(ல்)க்கு’ பாடல்களில் உற்சாகத் தீ மூட்டுகிறார் இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின்.

இடைவேளை வரை சீரியஸாக நகரும் கதை பின்னர் காமெடி களேபரத்தில் நுழைந்தபின், நம்மை நெருப்புக்குள்ளிருந்து விடுவித்து பனிமலையில் தூக்கிப் போட்டதுபோல் மனதுக்கு இதமூட்டுகிறது!

கிளைமாக்ஸில் உயிரோட்டம் குறைவு.

லாஜிக் மீறல்களையெல்லாம் பொறுத்துக் கொண்டால் ‘டாடா’வை ‘ஃபில் குட் மூவி’ வரிசையில் வைத்துப் பாராட்டலாம். அதற்கான தகுதிகள் படத்தில் உண்டு!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here