‘டைரி‘ சினிமா விமர்சனம்
சப் இன்ஸ்பெக்டர் ஆவதற்கான முயற்சியிலும் பயிற்சியிலும் இருக்கும் ஹீரோவுக்கு ஊட்டியில் 16 வருடங்கள் முன் நடந்த மர்ம மரணங்களுக்கான காரணங்களை துப்பு துலக்குகிற வாய்ப்பு கிடைக்கிறது.
அந்த வாய்ப்பு, அதே பகுதியில் தொடர்ச்சியாக நடந்துவரும் வேறுசில தொடர் மரணங்களுக்கான பின்னணியையும், குற்றவாளிகளையும் கண்டுபிடிக்க உதவுகிறது.
இந்த கிரைம் திரில்லர் கதையை, டைம் லூப் பாணியில் அமானுஷ்ய சங்கதிகளைக் கலந்து கட்டி இழுத்திருக்கிறார் இயக்குநர் இன்னாசி பாண்டியன்.
ஒரு பேருந்து நள்ளிரவு வேளையில் பலதரப்பட்ட மனிதர்களைச் சுமந்து புறப்படுகிறது. பேருந்தில் பயணிக்கும் கொலைகார கொள்ளையர்களால் சிலருக்கு ஆபத்து நேர்கிறது. அந்த கொள்ளையர்களை ஹீரோ தண்டிக்கிறார். கதையோட்டத்தில் ஒருபக்கம் இப்படி பரபரப்பு கூட, இன்னொரு பக்கம் பேருந்தில் அமானுஷ்ய சம்பவங்கள் அரங்கேறுவது விறுவிறுப்பைக் கூட்ட கிளைமாக்ஸில் இருக்கும் டிவிஸ்ட் எதிர்பாராதது.
விரைப்பான நடை, முறைப்பான பார்வை என போலீஸ் அதிகாரி பாத்திரத்தில் முன்பே பார்த்துப் பழகிய அதே அருள்நிதி. நடிப்பில் பெரிதாய் வித்தியாசமில்லை; வித்தியாசம் காட்ட கதையில் இடமுமில்லை.
கதாநாயகிக்கு அவசியமில்லாத கதை. ஆனாலும், அவ்வப்போது எட்டிப் பார்த்து விட்டுப் போகட்டும் என அம்சமான ஒருவரை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். பெயர் பவித்ரா மாரிமுத்து. போலீஸ் அதிகாரியாக வருகிற அவரது ஆரம்பக் காட்சி மட்டும் அதிரடி! மற்றபடி சொல்லிக்கொள்ள ஏதுமில்லை.
அஜய் ரத்னம், கிஷோர், ஜெயபிரகாஷ் என படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். ஏற்ற பாத்திரத்தில் நிறைவான பங்களிப்பை தந்திருக்கிறார்கள்.
சாம்ஸ், ஷாரா இருவரும் கலகலப்புக்கு உதவுகிறார்கள். சற்றே எரிச்சலூட்டவும் செய்கிறார்கள்.
ரான் ஈத்தன் யோகன் இசையில் ‘யார் வருவதோ’ பாடல் இதம். பின்னணி இசை படத்தின் பலம்!
இரவு நேர ஊட்டியின் அழகை ஸ்ரீகிருஷ் – விஜி சதீஷின் கேமரா கண்கள் கவனம் ஈர்க்கும்படி சுருட்டியிருக்கிறது.
கதைக்காக அதிகம் யோசித்த இயக்குநர், திரைக்கதைக்காகவும் சற்றே கூடுதலாக மெனக்கெட்டிருந்தால் டைரி’யின் பக்கங்கள் இன்னும் சுவாரஸ்யமாகியிருக்கும்.
எது எப்படியோ, கடைசி 20 நிமிடங்கள் ஆச்சரியங்களுக்கு உத்தரவாதம்!