குறட்டைச் சத்தம் குடைச்சல் சத்தமாகி, கணவன் மனைவிக்குள் யுத்தம் உருவாக்குகிற கதை.
ஓங்கி சொடக்கு போட்டாலே உறக்கம் கலைந்து விடுகிற இளைஞன் அர்ஜுனுக்கு, படுக்கையறையே அதிர்கிற அளவுக்கு குறட்டை விடுகிற தீபிகா மனைவியாகிறாள். அவளது குறட்டையால் அர்ஜுனுக்கு தூக்கம் கெடுகிறது. அதனால் அவர்களுக்குள் உருவாகிறது சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள். நாட்கள் அப்படியே நகர, ஒரு கட்டத்தில் அந்த குறட்டையால் அர்ஜுனின் வேலை பறிபோகிறது.
மன உளைச்சலுக்கு ஆளாகும் அர்ஜுன், மனைவியை முறைப்படி பிரிய முடிவெடுத்து நீதிமன்றத்தை நாடுகிறான். தீபிகா விவாகரத்தை விரும்பாமல் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறாள். யார் நினைத்தது நிறைவேறியது என்பதே கதையோட்டத்தின் மிச்சமீதி சமாச்சாரம். முன்பாதியில் ரசித்துச் சிரிக்கும்படியான அம்சங்களும், பின் பாதியில் கலங்க வைக்கும் காட்சிகளும் அணிவகுக்கின்றன…
கடந்தாண்டு வெளிவந்த ‘குட் நைட்’டுக்கும் இந்த படத்துக்கும் ‘குறட்டையால் கணவன் மனைவி உறவில் சிக்கல்’ என்பது மட்டுமே ஒத்துப்போக, திரைக்கதையில் ஏகப்பட்ட வித்தியாசங்கள்… இயக்கம் ஆனந்த் ரவிச்சந்திரன்
ஜீ.வி.பிரகாஷுக்கு சற்றே கனமான பாத்திரம். செய்தி வாசிப்பாளராக வரும் அவர், குறட்டையால் தூங்காமலிருந்து மத்திய நிதியமைச்சரை பேட்டியெடுக்கும் வாய்ப்பை தவற விட்டபின் காட்டுகிற எரிச்சல், மனைவியைப் பிரிய முடிவெடுப்பதில் வெளிப்படுத்துகிற சுயநலம், தன் தவறை உணர்கிறபோது வருகிற வருத்தம் என அத்தனை உணர்வுகளையும் கச்சிதமான முகபாவங்களால் கடத்தியிருக்கிறார்.
தீபிகாவாக ஐஸ்வர்யா ராஜேஷ். கதையின் பெரும்பகுதியை தூக்கிச் சுமக்கிற வேலை. கணவனின் வெறுப்பை எதிர்கொள்வதில் காட்டுகிற பக்குவமாகட்டும், புகுந்த வீட்டாருடன் அன்பாகப் பழகும் விதமாகட்டும் காட்சிக்கு காட்சி நடிப்பில் உயிரோட்டம் தந்திருக்கிறார். ரொமான்ஸிலும் கவர்கிறார்.
ஜீ.வி.பிரகாஷின் அண்ணனாக, சுய சம்பாத்தியத்தில் வாழ்கிறவராக, யாரும் எதையும் சரியாகச் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறவராக, தான் செய்வது சரியாகத்தான் இருக்கும் என்ற நினைப்பைச் சுமந்திருக்கிறவராக, ஆணாதிக்க மனோபாவம் கொண்டவராக காளி வெங்கட். ஏற்கும் பாத்திரமாகவே மாறிவிடுகிற அவரது ஆளுமையான நடிப்பு கவனிக்க வைக்கிறது.
காளி வெங்கட்டுக்கு மனைவியாக பிளாக்ஷிப் நந்தினி. தங்களுடைய உணர்வை மதிக்காத கணவர்களுக்கு மனைவியாக இருப்பவர்கள் படுகிற கஷ்ட நஷ்டங்களை நேர்த்தியாக உடல்மொழியில் கொண்டு வந்திருக்கிறார்.
சிங்கிள் பேரண்டாக இருந்து தனது ஆண் பிள்ளைகள் இருவரை வளர்த்து ஆளாக்கிய அம்மாவாக ரோகிணி, கதாநாயகியின் பெற்றோராக இளவரசு, கீதா கைலாசம், வழக்கறிஞராக படவா கோபி என இன்னபிற நடிகர், நடிகைகளின் நேர்த்தியான நடிப்புப் பங்களிப்பு கதையோட்டத்தை பலப்படுத்தியிருக்கிறது.
பாடல்களில் இதத்தையும் இனிமையையும் வழியவிட்டிருக்கிற ஜீ.வி.பிரகாஷ், பின்னணி இசையில் சில தருணங்களில் இசைக்கருவிகளுக்கு ஓய்வு கொடுத்து காட்சிகளின் தன்மைக்கு தரம் கூட்டியிருப்பதற்காக கண்டிப்பாக தர வேண்டும் ஸ்பெஷல் பாராட்டு!
கதை நேர்க்கோட்டில் பயணிக்காமல், கதாநாயகனின் சிறுவயதில் பிரிந்துபோன அப்பாவை, மனைவியைப் பிரிய நினைக்கிற மகன் தேடிப்போவதுபோல் நீளும் காட்சிகள் படத்தின் பலவீனம்.
எது எப்படியிருந்தாலும், ‘தம்பதிகளுக்குள் மனம் ஒத்துப்போனால் மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை’ என்பதை உணர்த்தியிருப்பதற்காக, டியர் படக்குழுவுக்கு ஃபயர் விடலாம்!