தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது ஏழை எளிய மக்கள் அனுபவிக்கிற தீராவலிக்கு சான்றாக, சரியான தருணத்தில் வெளிவரும் படம்.
இன்னும் ஒருசில நாட்களில் தீபாவளி. தான் வேலை செய்யும் இடத்தில் போனஸ் கிடைக்கவில்லை; அதனால் மகன் விரும்பிய புத்தாடை, பட்டாசு உள்ளிட்ட எதையும் வாங்க முடியவில்லை; தவித்துப் போகிறான் அந்த எளிய குடும்பஸ்தன். அப்படியே நாட்கள் கடந்துபோக மறுநாள் தீபாவளி என்ற சூழ்நிலையில்,
சாலையோரக் கடையில் சில மணி நேரம் நின்று கூவிக்கூவி ரெடிமேடு துணிகளை விற்றுக் கொடுத்தால் தீபாவளியை நல்லபடியாய் கொண்டாடும் அளவுக்கு சம்பளம் கிடைக்கும் என்ற வாய்ப்பு கிடைக்கிறது. அவன் அந்த வேலைக்கு போகிறான்.
கடைத்தெரு முழுக்க மக்கள் கூட்டம் அள்ளுகிறது. அவன் ‘ஆயிர்ரூவா சட்ட ஐநூர் ரூபா, ஐநூர்ரூவா சட்ட முந்நூர் ரூவா’ என்பதுபோல் கூவிக்கூவி விற்க வியாபாரம் சூடு பிடிக்கிறது.
வியாபாரத்தை முடித்து, பேசியபடி சம்பளம் பெற்று துணிமணி, பட்டாசு என வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியாய் வீட்டுக்கு போவான் என எதிர்பார்த்தால், அப்படி ஏதும் நடக்காமல்,
திடுதிப்பென சிலர் வந்து அவனை இழுத்துப் போட்டு தாறுமாறாக அடித்து துவைக்க, போலீஸ் வந்து அவனை பிடித்துப் போய் ஸ்டேஷனில் அடைக்கிறது.
அவன் செய்த குற்றம் என்ன? போலீஸிடம் சிக்கிய அவனுக்கு என்னவானது? அவனால் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட முடிந்ததா? இத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லும் விதமாக நகர்கின்றன அடுத்தடுத்த காட்சிகள்… இயக்கம் ஜெயபால்.ஜெ
வேலையை ஈடுபாட்டுடன் செய்வது, கிடைக்கிற வருமானத்தில் உற்சாகமாக வாழ்நாளை கடத்துவது என்ற எளிய குடும்பத்தின் பிரதிநிதி பாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் விக்ராந்த். போனஸுக்காக மேனேஜரிடம் வேண்டுகோள் வைப்பது, கிடைத்தாதபோது கலங்கி நிற்பது, ரவுடிகளிடம் அடிபட்டு மிதிபட்டு வலி சுமப்பது, முறையற்ற வருமானத்தை நிராகரிப்பது, உழைப்புக்கான ஊக்கத்தொகை கிடைத்தபின் அதில் மகன், மனைவியை சந்தோஷப்படுத்தி தானும் உற்சாகமடைவது என நீளும் காட்சிகளில் வெளிப்படுத்தியிருக்கும் அலட்டலில்லாத நடிப்பு மனதில் நிறைகிறது.
தான் வீட்டு வேலை செய்யும் முதலாளியம்மாவிடம் அட்வான்ஸ் கேட்டு மறுத்தபின்னும் விடாப்பிடியாய் கெஞ்சி காரியம் சாதிப்பதாகட்டும், கணவனுக்கு நல்ல ஹெல்மெட் வாங்கித்தர முடிவெடுத்து அது முடியாதபோது வருந்துவதாகட்டும், கணவன் போலீஸ் பிடியில் சிக்கியது தெரியாமல் எங்கு போனானோ என்ன ஆனதோ என நினைத்து கண்ணீரில் கரைவதாகட்டும் ரித்விகாவின் நடிப்பில் உயிரோட்டத்துக்கு குறைவில்லை.
மகனாக வருகிற சிறுவன் ஹரீஷின் இயல்பான பங்களிப்பும்,
சிறுவனின் ஏக்கத்தை உணர்ந்து பாதி விலையில் ஷூ வழங்குகிற வியாபாரி, ரித்விகாவிடம் ஈவிரக்கம் காட்டாமல் வேலை வாங்கும் பெண்மணி என மற்றவர்களின் நடிப்பும் நிறைவு.
மரிய ஜெரால்டு இசையில் அந்தோணி தாசன் குரலில் மதுரையின் பெருமை சொல்லும் பாடல் ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் கதையுடன் கலந்து கடந்துபோகிறது.
கதைநாயகனின் வறுமை சூழ்ந்த வீடு, விஜய் படம் ஓடும் தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரம், தீபாவளி ஷாப்பிங் செய்யும் மக்களால் நிறைந்த கடைத்தெரு என கதை நிகழ்விடங்களை நேர்த்தியாக பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் கெளதம் சேதுராமன்.
திரும்பிய பக்கமெல்லாம் சிசிடிவி பெருகியிருக்கும் காலகட்டத்தில், ஒரு பெரிய நிறுவனத்திலிருந்து துணிகள் வெகு சுலபமாக திருடப்படுவதையெல்லாம் ஏற்க முடியவில்லை. சில காட்சிகள் அது தரவேண்டிய உணர்வை முழுமையாக தராதது படத்தின் பலவீனம்.
இப்படி சில குறைகள் இருந்தாலும் எளிய பட்ஜெட்டில், ஏழ்மையில் தவிக்கும் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாய் உருவாகியிருக்கும் இந்த படைப்பின் மூலம்,
‘கெட்டவர்கள் சூழ்ந்த உலகில் ஆங்காங்கே சில நல்லவர்களும் இருக்கிறார்கள்’ என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜெயபால் ஜெ.
தீபாவளி போனஸ் _ தயாரிக்க நினைத்தது யானை வெடி, தயாரானது பிஜிலி வெடி!