‘இரண்டாம் பாகத்துக்கு வாய்ப்பேயில்லை’ என்பதுபோல் முடிந்துபோன ‘டிமான்ட்டி காலனி’யிலிருந்து தன் மூளையைக் கசக்கிப் பிழிந்து இயக்குநர் அஜய் ஞானமுத்து உருவாக்கியிருக்கும் அடுத்த பாகம்.
அருள்நிதிதான் ஹீரோ என்றாலும் படம் முழுக்க களமாடியிருப்பவர் ஹீரோயின் பிரியா பவானி சங்கர். ஹீரோயின் என்றால் அவர், ஹீரோ அருள்நிதிக்கு ஜோடியா என்றால் உம்ஹூம். அவர் சில வருடங்கள் முன்பே திருமணமாகி கணவரை இழந்தவர். தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவரின் நினைவாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் அவர், இறந்துபோன கணவரின் கருவை சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் முயற்சியில் இறங்குகிறார். அந்த தருணத்தில், இறந்துபோன கணவர் தன்னிடம் எதையோ சொல்ல விரும்புவதை உணர்கிற பிரியா, சீனத் துறவி ஒருவரின் உதவியோடு கணவரிடம் பேசத் தயாராகிறார். அந்த முயற்சியில், இதே படத்தின் முதல் பாகத்தில் இறந்துபோன கதாநாயகனை உயிருடன் மீட்டெடுக்க முடியும் என்பது தெரியவருகிறது.
அது எப்படி சாத்தியம் என்கிற கேள்விக்கு காதைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல் அல்ல; உலகத்தை சுற்றி வந்து மூக்கைத் தொடுவதுபோல் ஏகப்பட்ட கிளைக் கதைகளை கட்டியிழுத்திருக்கிறது திரைக்கதை.
ஹீரோ இரட்டைச் சகோதரர்களாக இருப்பது, அதில் ஒருவர் கோமா நிலையில் நாட்களைக் கடத்துவது, சகோதரியோடு சொத்துத் தகராறு, குறிப்பிட்ட புத்தகத்தைப் படிக்கிற நபர்கள் டிமான்டி காலனிக்குள் சென்று மரணிப்பது, தன்னை நாடி வந்தவர்களை அமானுஷ்ய சக்திகளிடமிருந்து காப்பாற்ற முயற்சிக்கும் துறவிகளுக்கே ஆபத்து நேர்வது என மிரட்டலான பல காட்சிகள் அணிவகுக்கும் இந்த படத்தில் அருள்நிதிக்கு அவ்வளவாய் வேலையில்லை. பணத்தாசை, சுயநலம் என மெல்லிய வில்லத்தனத்தை வெளிப்படுத்த கொஞ்ச நேரத்தை எடுத்துக் கொள்பவர், பின்னர் உயிர் பயத்தில் சிக்கி கண்களில் மிரட்சியைக் காட்டி கடமையை முடித்துக் கொண்டிருக்கிறார்.
இறந்த கணவரை குழந்தையாக பெற்றெடுக்க நினைப்பது, நடக்கும் மரணங்களின் பின்னணியை தோண்டித் துருவி கண்டறிவது, அருள்நிதியைக் காப்பாற்ற முழுமையான முயற்சியில் ஈடுபடுவது கதையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ள பிரியா பவானி, பயம் பதற்றம் என பரபரப்பும் சுறுசுறுப்புமாக கவனம் ஈர்க்கிறார்.
அருண் பாண்டியன் தனக்கு கொடுக்கப்பட்ட எளிமையான பணியை சரியாகச் செய்திருக்கிறார். கதையோடு இணைந்து பயணித்திருக்கிற சீனத் துறவியின் குரலும் அருண்பாண்டியனின் குரலும் ஒரே மாதிரியிருப்பதற்கு எந்த அமானுஷ்ய சக்தி காரணம் என்பதை இயக்குநர் அடுத்த பாகத்தில் தெளிவு படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.
ஒன்றிரண்டு காட்சிகளில் வந்தாலும் ‘யாருப்பா இந்த அடாவடி பார்ட்டி?’ என கேட்க வைக்கும்படி ஆத்திர ஆவேசம் காட்டியிருக்கிறார் பிக்பாஸ் அர்ச்சனா. அறிமுகப் படத்திலேயே அசத்தல் பெர்ஃபாமென்ஸ்.
கதாநாயகனின் சித்தப்பாவாக வருகிற முத்துக்குமாரிலிருந்து கதையில் அங்கம் வகித்திருக்கிற அத்தனைப் பேரிடமிருந்தும் நேர்த்தியான நடிப்பை பெற்று பலமாகியிருக்கிறது கதைக்களம்.
சாம் சி எஸ்ஸின் பின்னணி இசை சில காட்சிகளில் திகில் கதையோட்டத்துக்கு பொருந்திப் போகிறது; பல காட்சிகளில் அதீத இரைச்சலாய் வந்திறங்கி காதுகளைப் பதம் பார்க்கிறது.
ஒளிப்பதிவு, சிஜி என தொழில்நுட்ப சங்கதிகளில் குறையில்லை.
கதையைப் புரிந்து கொள்வது சற்றே சிரமமாக இருந்தாலும், எதிர்பாராத திருப்பங்கள், மீன் தொட்டி உடைதல், வவ்வால் கூட்டம் என வரிசைகட்டும் அமானுஷ்ய ஆர்ப்பாட்டங்கள் ஹாரர் பட ரசிகர்களை கணிசமாக திருப்திபடுத்தாமல் விடாது. அடுத்த பாகமும் வருகிறதாம்…