முறையற்ற காதலும் முரட்டுத்தனமான மோதலும் என்ற ஏடாகூட கதையை எக்குத்தப்பான திரைக்கதையில் புரட்டியெடுத்திருக்கும் ‘டெவில்.’
நான்கைந்து ஜீனியர்களுடன் படு கெத்தாக வழக்கறிஞர் பணியை தொடர்கிற, பண வசதிக்கு பஞ்சமில்லாத விதார்த், பூர்ணாவுடன் மணவாழ்க்கையில் இணைகிறார்.
அவர்களின் முதலிரவன்றே விதார்த் வேறு ஒரு துணையின் உடல்பசியைத் தீர்க்க கிளம்பிப் போய்விட, அதுவரை பவுர்ணமி நிலவுபோல் ஜொலித்துக் கொண்டிருந்த பூர்ணாவின் மனம் முழுக்க அமாவாசை போல் இருள்சூழ்கிறது.
கணவனின் பாசம் துளியுமின்றி, அவனோடு படுக்கையிலும் தொடர்பின்றி பல மாதங்கள் கடந்தோட, அந்த ஏமாற்றங்களுக்கு ஆறுதலாய் இளைஞன் ஒருவன் வந்துசேர்கிறான். அவனுடனான நட்பு இறுகும் சூழலில் விதார்த் மனம் திருந்த, பூர்ணா அந்த இளைஞனின் தொடர்பை தூண்டித்துக் கொள்ளும் முடிவுக்கு வர, அவன் விடுவதாயில்லை…
ஒரு கட்டத்தில் பூர்ணாவை சந்திக்க வரும் அந்த இளைஞனை விதார்த்தும் சந்தித்துவிட அதன்பின் சிலபல விபரீத சம்பவங்கள் காட்சிகளாய் விரிகின்றன. அவற்றில் திருப்பங்களை வைத்திருக்கிறது திரைக்கதை… இயக்கம் ஆதித்யா
முதலிரவில் மனைவியிடம் நான்கு வார்த்தைகூட மனம்விட்டுப் பேசாமல் தவிக்கவிட்டு வேறு பெண்ணை ‘திருப்தி’படுத்தப் போவது, ஒரு கட்டத்தில் அந்த மனம் திருந்தி மனைவியின் அதிருப்தியை தீர்ப்பது, தன் மனைவியுடன் தொடர்பிலிருக்கும் நபரை கண்டதும் வெறியேறி தாக்குவது என வெளிப்படுத்தும் நடிப்பின் இயல்பு மீறாத தன்மையால் கவர்கிறார் விதார்த்.
மனநோயாளி போல் ரோமக் காட்டுக்குள் முகம் புதைத்தபடி இரண்டொரு காட்சிகளில் வந்துபோகிறார். கதையின் திருப்பத்துக்கு ஒரேயொரு வசனத்தால் உதவியிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.
தன் அந்தரங்க ஆசைக்கு ஆண்களைப் பலியாக்குகிற சுபஸ்ரீ கவர்ச்சியில் உச்சம்தொட முயன்றிருக்கிறார்.
பூர்ணாவின் மன வலிக்கு தனது மென்மையான அணுகுமுறையால் மருந்துபோடுகிற திரிகுன் உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகளின் பங்களிப்பு கச்சிதம்.
இந்த படம் மூலம் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிற இயக்குநர் மிஷ்கின், மனித மனங்களின் வயலன்ஸ் வரிசைகட்டும் காட்சிகளுக்கு வயலின் ஆதிக்கத்தோடு பின்னணி இசை கோர்த்திருக்கிறார். ‘தினவு’ பாடலின் மெல்லிசை கிறக்கம் தருகிறது.
கார்த்திக் முத்துகுமார் கதை நிகழும் சூழலுக்கேற்ற வைத்திருக்கும் கோணங்களில், ஒளி அமைப்புகளில் காட்சிகளை ஹாலிவுட் தரத்தில் தருவதற்கான மெனக்கெடல் தெரிகிறது.
திரில்லர் ரூட்டில் பயணிக்கும் கதையோட்டம் திடுதிப்பென ஹாரரில் வேகமெடுப்பது போல் போக்கு காட்டுவது எதிர்பாராதது.
காட்சிகளை மெருகேற்ற உழைப்பைக் கொட்டியிருக்கிற இயக்குநர் கதை, திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கூடுதலாய் கவனம் செலுத்தியிருக்கலாம்.