சாமானியனை கொன்றழிக்கத் துரத்தும் அமைச்சர் என்ற பரபரப்பான கதைக்களத்தில் ‘தில் ராஜா.’
நாயகன் விஜய் சத்யா, தன் மனைவியிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்த இளைஞர்கள் நான்கு பேரை தாக்குகிறார். அதில் ஒரு இளைஞன் இறந்துபோக, மற்ற மூவரும் காணாமல் போகிறார்கள். இறந்தது அமைச்சரின் மகன்.
மகனை இழந்த அமைச்சர், விஜய் சத்யாவை தீர்த்துக்கட்ட அடியாட்களுடன் களமிறங்குகிறார். அவரிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள விஜய் சத்யா சாமர்த்தியமாக காய் நகர்த்துகிறார். அந்த சாமர்த்தியம் அவரை காப்பாற்றியதா இல்லையா என்பது மீதிக் கதை… திரைக்கதை, இயக்கம் ஏ வெங்கடேஷ்
சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகராக, அவரது பெயரைச் சுமந்து வருகிற நாயகன் விஜய் சத்யாவின் முகவெட்டு லட்சணமாக அமைந்திருக்க கம்பீரமான உடற்கட்டு அவர் ஏற்றிருக்கும் தில்’லான அதிரடி ஹீரோ பாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கிறது. கதைக்கேற்ற துறுதுறுவென்ற நடிப்பைத் தந்தும், சண்டைக் காட்சிகளில் எதிராளிகளை சூறாவளியாய் சுழன்றடித்தும் தன்னைக் கவனிக்க வைக்கிறார்.
விஜய் சத்யாவின் மனைவியாக ‘துள்ளுவதோ இளமை’ ஷெரின். முகத்தில் வயதின் முதிர்ச்சி தெரிந்தாலும் வளைவு நெளிவுகளில் ஏற்ற இறக்கங்களில் செழுமைக்கு குறைவில்லை. நடிப்பிலும் குறையில்லை.
அமைச்சராக வருகிற ஏ வெங்கடேஷ், மகனுடைய இழப்பில் வெறியேறி பழி வாங்கத் துடிக்கும்போது காட்டும் வில்லத்தனத்தில் கெத்து தெரிகிறது.
மகனை இழந்தபின் கலங்குவதாகட்டும், பழி வாங்கும் உணர்வை பிரதிபலிப்பதாகட்டும் அமைச்சரின் மனைவியாக வருகிற வனிதா விஜயகுமாரின் நடிப்பு கச்சிதம்.
இமான் அண்ணாச்சி பளீர் வண்ணங்களில் விதவிதமாக சட்டை போட்டுக்கொண்டு அப்படியும் இப்படியுமாக வந்து போகிறபோது கொஞ்சமாய் சிரித்துக் கொள்ளலாம்.
நண்பனாக வருகிற வெட்டுக்கிளி பாலா, ஹீரோவின் கஷ்ட நஷ்டங்களில் துணைநிற்க, நெகுநெகு உயரத்திலிருக்கும் சம்யுக்தா காவல்துறை உயரதிகாரியாக விரைப்பாக வலம் வந்து கிளைமாக்ஸில் வேறொரு முகம் காட்டி ஆச்சரியப்படுத்துகிறார்.
பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், கராத்தே ராஜா என இன்னபிற நடிகர், நடிகைகள் தங்களுக்கு கொடுத்த வேலையை அலட்டலின்றி செய்திருக்கிறார்கள்.
அம்ரிஷ் இசையமைத்து அசத்தல் லுக்கில் ஆட்டம் போட்டிருக்கும் பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையும், மனோ வி நாராயணாவின் ஒளிப்பதிவும் நேர்த்தி.
எளிமையான பட்ஜெட்டில் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் அனுபவம் தர நினைத்த இயக்குநர், ‘அமைச்சரின் மகன் என்றாலே கேடுகெட்ட செயல்களில் ஈடுபடுவதையே முழு நேரத் தொழிலாக வைத்திருப்பான், காமவெறியனாகவும் இருப்பான்’ என்ற காலங்காலமாக பார்த்து சலித்த சப்ஜெக்ட்டையே மீண்டும் தொட்டிருப்பது படத்தின் பலவீனம்.