நாடுவிட்டு நாடு செல்ல சட்டவிரோதப் பயணத்தை தேர்ந்தெடுப்பவர்களின் வலியை சொல்லும் படம்.
மூன்று சிநேகிதர்கள், ஒரு சிநேகிதி என நான்கு பேர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து லண்டனுக்கு செல்ல முடிவெடுக்கிறார்கள். விசா உள்ளிட்ட முறையான அனுமதி பெற முடியாத அவர்களை, லண்டனுக்கு திருட்டுத் தனமாக அழைத்துப் போக உதவுகிறார் முன்னாள் ராணுவ வீரர் ஷாருக்கான்.
அந்த சட்டவிரோதப் பயணத்தில் அவர்கள் சந்திக்கும் சவால்களை, எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நகைச்சுவை, பயம், பதற்றம், உருக்கம் என கலந்துகட்டி தந்திருக்கிறது ‘டங்கி’யின் திரைக்கதை. இயக்கம் ராஜ்குமார் ஹிரானி
வயதானவர், வாலிபர் என இரண்டு தோற்றங்களில் ஷாருக்கான். வயோதிகத்திற்கான உடல்மொழியில் முதிர்ச்சி காட்டுபவர், இங்கிலாந்து நீதிமன்றத்தில் நண்பனுடைய அஸ்தியோடு ஆதங்கப்பட்டு கொந்தளிக்கும் காட்சி அத்தனை நெகிழ்ச்சி. இளவயது தோற்றத்தில் வருகிறபோது காட்சிகளின் தேவைக்கேற்ப தேர்ந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.
டாப்ஸியின் நடிப்பு பயணத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான படம். இளவயது, முதிர்பருவம் என இரண்டு தோற்றங்களில் வருகிற அவர்தான் கதையின் ஹீரோ, ஹீரோயின் எல்லாமே. கனமான கதையைச் சுமக்கும் பொறுப்புணர்ந்து நடித்திருக்கிறார்.
இவர்களுக்கு இணையான வேடத்தில் வந்து கலக்கி இருக்கிறார் விக்கி கௌஷல்.
இங்கிலாந்திலிருந்து தன் காதலியை மீட்கப் போராடி பரிதாப முடிவைச் சந்திக்கும் விக்கி கௌஷலின் நடிப்பில் அத்தனை உயிரோட்டம்.
போமன் இராணியின் ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் கலகலப்புக்கு கேரண்டி.
டாப்ஸியின் நண்பர்களாக வருகிற இரண்டு பேர், இன்னபிற பாத்திரங்களில் வருகிறவர்கள் என அனைவரின் நடிப்புப் பங்களிப்பும் கச்சிதம்.
இந்தியாவிலிருந்து டங்கி’ எனப்படும் திருட்டு வழிகளில் பாகிஸ்தான், ஈரான் என வெவ்வேறு நாடுகள் வழியாக இங்கிலாந்துக்கு பயணப்படும் காட்சிகளின் நம்பகத்தன்மை அப்படி இப்படியிருந்தாலும் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை. லஞ்சத்துக்கு எல்லா நாட்டிலும் மரியாதையுண்டு என்பதை அடித்துச் சொல்கின்றன அந்த காட்சிகள்.
பின்னணி இசை, பாடல்கள், ஒளிப்பதிவு, எடிட்டிங் என அத்தனையும் கதைக்களத்துக்கு பலம் சேர்த்திருக்கின்றன.
கனமான கதையும் கலகலப்பு சங்கதிகளும் பின்னிப் பிணைந்திருக்கும் கதையோட்டத்தின் நிறைவில் சட்டவிரோதமாக நாடு கடக்க முற்பட்டவர்களுக்கு ஏற்பட்ட பயங்கர முடிவை போட்டோக்களாக பார்க்கும்போது வருகிற அதிர்ச்சி நீங்க வெகுநாட்களாகும்!