கலைஞனுக்கு தன்மானம்தான் பெரிய தடை! -இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகன் நடிக்கும் ‘ஈடாட்டம்’ பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு

இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகனும், பிரபல சின்னத்திரை நடிகருமான ஸ்ரீகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ஈடாட்டம்.’

படத்தில் வெண்பா, அனுகிருஷ்ணா, தீக்‌ஷிகா ஆகிய மூன்று பேர் ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ராஜா, விஜய் விசித்திரன், காதல் சுகுமார், பவர் ஸ்டார், பூவிலங்கு மோகன், விஜய் சத்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஈசன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா 14.6.2023 அன்று சென்னையில் நடந்தது.

படக்குழுவினரோடு தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர்கள் பேரரசு, எழில், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹைனா, தயாரிப்பாளரும், தொழிலதிபருமான என்.ஆர். தனபாலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஈசன் பேசுகையில், ”13 வயதில் எனக்கு சினிமாவின் மீது ஆசை ஏற்பட்டது. அப்போது முதல் கோடம்பாக்கத்தில் வாய்ப்புகளைத் தேடி நான் சைக்கிளில் அலைந்திருக்கிறேன். எனக்கு தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தான் பூர்வீகம். அங்கிருந்து 90களில் சென்னைக்கு வந்தேன். நான் சைக்கிளில் அலைந்த போது சினிமா எங்கிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடைய மாமா ஏ. சி. சந்திரகுமார் திரைப்பட இயக்குநர். ‘செவத்த பொண்ணு’ எனும் படத்தை இயக்கியிருக்கிறார். என்னுடைய தாத்தா ஆறுமுக நாடார் நாடக மன்றம் என்று ஒரு கலைக்குழுவை வைத்து நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார்.

என்னுடைய மாமா, ’20 ஆண்டுகளாக போராடுகிறேன். எனக்கே சினிமா கை வரவில்லை. அதனால் பேசாமல் ஊர் பக்கம் சென்று விடு’ என எச்சரித்தார். ஆனால் நான் அவருக்குத் தெரியாமல் சென்னையில் வாய்ப்புக்காக சுற்றி இருக்கிறேன்.

சினிமாவிற்காக சிலம்பம், கராத்தே, பரதநாட்டியம் ஆகியவற்றைக் கற்றுக் கொண்டேன். இன்று சிலம்பம் என்றால் அனைவருக்கும் தெரியும் வகையில் ஆண்டவன் அருளால் பிரபலமாகி இருக்கிறேன்.

இந்த நிலையில் இரண்டு பேர் தூண்டுதலின் பேரில் நானும் இணைந்து படத்தை தயாரிக்க தொடங்கினோம். ஒரு கோடியில் தயாரிக்கலாம் என்றும், ஒவ்வொருவரும் தலா முப்பது லட்சத்தை முதலீடு செய்யலாம் என்றும் திட்டம் போட்டு படத்தின் பணிகளைத் தொடங்கினோம். முதலில் என்னுடைய பணத்தை செலவழிக்க தொடங்கினேன். ஆர்வத்தில் செலவுகளை செய்யத் தொடங்கினேன். 20 லட்ச ரூபா செலவு செய்த பிறகு இரண்டு நண்பர்களும் வெளியேறி விட்டார்கள். படத்தை நிறைவு செய்ய தெரியாமல் தடுமாறி நின்ற போது, என்னை வளர்த்த தாய் ரங்கநாயகி அவருடைய வீட்டை விற்று கொடுத்த பணத்தில் படத்தை நிறைவு செய்திருக்கிறேன். இந்த செயலை என்னைப் பெற்ற தாய் கூட செய்ய மாட்டார்கள். என்னை வளர்த்த தாய் என் மீது வைத்த பேரன்பின் காரணமாகத்தான் இந்த படம் உருவாகி இருக்கிறது. அவர்கள் இல்லையென்றால் இந்த ஈசன் மூவிஸ் இல்லை. இந்த ‘ஈடாட்டம்’ திரைப்படமும் இல்லை.

இன்னொரு விசயத்தை குறிப்பிட வேண்டும். எனக்கு சினிமா ஆசை இருந்ததே தவிர சினிமாவை முறையாக கற்றுக் கொள்ளவில்லை. என்னுடைய ஆசையை படமாக உருவாக்கியதற்கு இப்படத்தில் பணியாற்றிய கஜபதி தான் காரணம். நான் இந்த படத்தில் இயக்குநர் என்று பெயரை மட்டும் தான் போட்டிருக்கிறேன். ஆனால் அனைத்து பணிகளையும் செய்தது கஜபதி தான்.

இந்த படத்தில் பணியாற்றிய ஜேசன் வில்லியம்ஸ், ஜென் முத்துராஜ் என ஒவ்வொருவரும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். இசைத்துறையில் ஒருவரால் லட்சக்கணக்கில் ஏமாற்றப்பட்டேன். அதன் பிறகு தான் ஜான் பீட்டரைச் சந்தித்தேன். அவர் எனக்கு பேருதவி செய்தார். சினிமாவை நிஜமாக நேசிப்பவர்கள்.. சினிமாவிற்கு உதவி செய்கிறார்கள் என்பதை ஜான் பீட்டர் மூலமாக உணர்ந்தேன்.

என்னிடம் சிலம்பம் கற்ற மாணவி பிரியா என்பவர் ஐந்து லட்ச ரூபாய் உதவி செய்ததால் இந்த படம் சரியான நேரத்தில் நிறைவடைந்தது. அதற்கும் இந்த தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..

13 வயதில் சினிமா ஆசையுடன் சென்னைக்கு வந்த நான் 43 வயதில் இயக்குநராகியிருக்கிறேன். 30 வருஷ தவம் நிறைவேறி இருக்கிறது. இதில் நான் மட்டும் வெற்றி பெறவில்லை. அனைவரும் இணைந்துதான் வெற்றி பெற்றிருக்கிறோம்.

சினிமாவில் தொடர்ந்து போராடி வெற்றி பெறுவேன். ஏனெனில் என்னுடைய குடும்பம் கலை குடும்பம். இந்த சின்ன படத்திற்காக நான் 20 லட்சம் ரூபாய் வரை ஏமாந்திருக்கிறேன். சினிமாவில் ஏமாற்றுபவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

விழாவுக்கு அழைப்பு விடுத்தவுடன் வருகை தந்து வாழ்த்திய கே ராஜன், பேரரசு, எழில், ஏ ஆர் ரஹைனா, தனபாலன் சிலம்பாட்ட கலைஞர் சண்முகம் சிலம்பாட்ட கழகத் தலைவர் ஆகியோருக்கு நன்றி” என்றார்.

தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில், ”ஈடாட்டம் என்றால் என்ன? பொருள் என படக் குழுவினரிடம் கேட்டேன். ‘பொறாமை, வஞ்சகம், வஞ்சனை, பொல்லாப்பு என அர்த்தம் சொன்னார்கள். இந்த படத்தின் மூலம் இயக்குநர் ஒரு நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார். குடியால் கெட்டுப்போன, அதனால் தடுமாறுகிற ஒரு இளைஞனின் கதையை அற்புதமாக சொல்லி இருக்கிறார். இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மகனான ஸ்ரீ ஹீரோவாக நடித்திருக்கிறார். ‘ஈடாட்டம்’ வெறியாட்டமாக மாறாமல் வெற்றியாட்டமாக மாறி மக்களின் பேராதரவை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், ”இந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீயை சீரியல்களில் பார்த்திருக்கிறேன். அருமையாக நடிக்கிறாரே. இவர் ஏன் சினிமாவுக்கு வரவில்லை? என யோசித்திருக்கிறேன். அவரை சந்தித்து கேட்டபோது, ‘வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்’ என்றார். ஆனால் அதன் பிறகு தான் அவர் இசையமைப்பாளர் சங்கர் கணேசின் மகன் என்றே எனக்கு தெரியும். தந்தையின் பெயரை சொல்லி வாய்ப்பு கேட்காமல், தன் சுய முயற்சியால் இந்த உயரத்தை அவர் தொட்டிருப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.

ஸ்ரீயிடம் ஒரு தனித்துவமான நடிப்பு இருக்கிறது. இந்த படத்தின் வெற்றியை பயன்படுத்திக் கொண்டு, அவர் தொடர்ந்து சினிமாவில் பயணிக்க வேண்டும். ஏதோ ஒரு தடை இருப்பதாக நினைக்க வேண்டாம். ஏனெனில் ஒரு கலைஞருக்கு அவருடைய தன்மானம் தான் பெரிய தடை. தன்மானத்தை அதிக அளவில் வைத்திருந்தால் வாய்ப்பு கிடைக்காது. தன்மானத்தை கைவிட்டால், நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த படத்தின் முன்னோட்டத்தில் இடம்பெறும் வசனம் என்னைக் கவர்ந்திருக்கிறது. சட்டத்திற்கும் போலீஸிற்கும் நல்லவர்கள் தான் பயப்படுகிறார்கள். சட்டத்துக்கு புறம்பான வேலைகளை செய்பவர்கள் போலீசுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு வெளியில் மகிழ்ச்சியாக உலா வருகிறார்கள் என்று குறிப்பிட்டிருப்பது உண்மைதான். சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்பவர்கள் போலீசை மதிப்பதே இல்லை.

குடியால் பாதிக்கப்படும் இளைஞனின் கதையை இயக்குநர் ‘ஈடாட்டம்’ மூலமாக கொடுத்திருக்கிறார். இந்த படம் வெளியாகி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹைனா பேசுகையில், ”பொதுவாகவே சமூகத்துக்கு ஏதேனும் நல்லது நடக்கிறது என்றால் உடனே சென்று விடுவேன். இந்த படம் அற்புதமான கதையை கொண்டிருக்கிறது. குடிப்பதால் சமூகத்திற்கு ஏற்படும் தீமைகளை இயக்குநர் படமாக்கி இருப்பதால் அதை பாராட்டுவதற்காகவே இங்கு வந்திருக்கிறேன். இசையமைப்பாளர் சங்கர் கணேசின் மகன் ஸ்ரீக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

உருவாக்கத்தில் உறுதுணை:-
தயாரிப்பு – ஈசன் மூவிஸ் சக்தி அருண் கேசவன்
ஒளிப்பதிவு – ஜேசன் வில்லியம்ஸ்
இசை – ஜான் பீட்டர்
படத்தொகுப்பு – ஜென் முத்துராஜ்
கலை இயக்கம் – செந்தில்
மக்கள் தொடர்பு – சிவா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here