சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத் தமிழச்சி கவிஞர் சாந்தரூபி அம்பாளடியாள் பாடல்கள் எழுதி இசையுடன் பாடும் ஆற்றல் கொண்டவர். அவர் 50 பாடல்களை இசையமைத்து ‘என்னுயிர்க் கீதங்கள்‘ என்ற தலைப்பில் தொகுப்பாக உருவாக்கியுள்ளார். அந்த பாடல் தொகுப்பினை 6.8.2023 அன்று மாலை சென்னையில் நடந்த நிகழ்வில் இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையேற்று வெளியிட்டார்.
இயக்குநர்கள் பேரரசு, செந்தில்நாதன், ராசி அழகப்பன், இசையமைப்பாளர்கள் சௌந்தர்யன், ஏ.ஆர்.ரெஹானா, பாடகர் மூக்குத்தி முருகன், கண்ணதாசன் பதிப்பக நிறுவனர் காந்தி கண்ணதாசன், பேச்சாளர் ஜான் தன்ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு அம்பாளடியாளின் திறமையை ஊக்குவித்து வாழ்த்திப் பேசினர்.
நிகழ்ச்சியில் அம்பாளடியாள் பாடலொன்றைப் பாடி ஏற்புரை வழங்கினார். அதையடுத்து அவரது தமிழ்ப் புலமையையும், குரல் வளத்தையும் அறிந்த இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் வியந்து, பாராட்டினர்.
நிகழ்வில் கம்பம் குணா கவிஞர் அம்பாளடியாளின் சிறப்புகளை எடுத்துச் சொல்லி, நல்ல தமிழில் வரவேற்புரை வழங்கினார்.
சென்னை பெரம்பூர் ‘அஞ்சலி நாட்டியாலயா’ பரதக் கலை பயிற்சி மையத்தின் மாணவிகள் இருவர் தமிழ்த் தாய் வாழ்த்து பாடி நிகழ்வைத் துவங்கி வைத்து, அம்பாளடியாள் இயற்றிய இறை வணக்கப் பாடல்களுக்கு பரத நாட்டியமாடி சிறப்பித்தனர்.
நந்தினி தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியை மக்கள் தொடர்பாளர் கோவிந்தராஜ் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.
இந்த ஈழத்துக் குயிலின் குரல் விரைவில் வெற்றிப் படங்களில் ஒலிக்கப் போகிறது. ஆம், தமிழ்த் திரையுலகில் பாடல்கள் எழுதவும், பாடவும் அவருக்கு வாய்ப்பு கைகூடியிருக்கிறது.
‘என்னுயிர்க் கீதங்கள்’ பாடல்கள் வெளியீட்டு விழாவின் உற்சாக தருணங்கள் புகைப்படங்களாக…