‘800’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்பு!

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக உருவாகியிருக்கிறது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளர் என்பதால் படத்திற்கு ‘800’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. படத்தில் மதுர் மிட்டல், மஹிமா நம்பியார், நரேன், நாசர், வேலா ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள் தாஸ், ஹரி கிருஷ்ணன், சரத் லோஹிதாஸ்வா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம், ‘800’ என்ற தலைப்பில் விளையாட்டு சார்ந்த பிரம்மாண்ட படமாக இதைத் தயாரித்துள்ளது. இப்படத்தில் முரளிதரனாக ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ புகழ் மதுர் மிட்டல் நடித்துள்ளார். இதில் முரளிதரன் மனைவி மதிமலர் ராமமூர்த்தியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கிய இந்தப் படத்தை புக்கர் பரிசு (2022) பரிசு பெற்ற ஷெஹான் கருணாதிலகா இணைந்து எழுதியுள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் விழா செப்டம்பர் 5-ம் தேதி மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். வரலாற்று சாதனை மிக்க பல போட்டிகளை சச்சின் இந்தியாவுக்காகவும், முரளிதரன் தனது நாடான இலங்கைக்காகவும் விளையாடியுள்ளனர். களத்தில் அவர்களுக்கு இடையே போட்டி இருந்த போதிலும், இரண்டு ஜாம்பவான்களும் எப்போதும் களத்திற்கு வெளியே ஒரு நல்ல உறவைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு டெண்டுல்கர் வருவார் என்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீதேவி மூவீஸின் மூத்த டோலிவுட் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் ‘800’ படத்தின் அனைத்து மொழிகளிலும் விநியோக உரிமையை சமீபத்தில் வாங்கினார். தமிழில் உருவாகி இருக்கும் இப்படம் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியானதும் இதன் புரோமோஷனல் பணிகள் தீவிரமாகத் தொடங்கப்படும். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த டிரெய்லர் வெளியீட்டு விழா குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் பேசுகையில், “டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சச்சின் டெண்டுல்கர் கலந்துகொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மைதானத்தில் தனது ஆட்டத்தால் கோடிக்கணக்கான இந்தியர்களை மகிழ்வித்தவர். முரளிதரன், மற்ற பிரபல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல திரையுலக பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர். ‘800’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது” என்றார்.

உருவாக்கத்தில் உறுதுணை:-
எழுத்து, இயக்கம்: எம்.எஸ்.ஸ்ரீபதி
எடிட்டர்: பிரவீன் கே.எல்
ஒளிப்பதிவாளர்: ஆர்.டி.ராஜசேகர்
இசையமைப்பாளர்: ஜிப்ரான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here