சந்தானம் நாயகனாக நடிக்க, கல்யாண் இயக்கியிருக்கும் படம் ‘80ஸ் பில்டப்.’ ராதிகா ப்ரீத்தி நாயகியாக நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குநர் சுந்தர்ராஜன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ஆடுகளம் நரேன், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், தங்கதுரை, சுவாமிநாதன், கும்கி அஷ்வின், சுபாஷினி கண்ணன், சங்கீதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
நடிகர் சந்தானம் பேசியபோது, “இயக்குநர் கல்யாண் என்னிடம் எப்போதுமே கால்ஷீட் கேட்டுக் கொண்டே இருப்பார். நான் என்னிடம் தேதி இல்லை என்று சொல்லிக் கொண்டே இருப்பேன். அப்படி ஒரு முறை கேட்கும் போது 15 நாள் மட்டுமே எனக்கு ப்ரேக் இருக்கிறது என்று சொன்னேன். உடனே அப்படி என்றால் வாருங்கள் சார் நாம் டாக்கி போர்ஷனை முடித்துவிடுவோம் என்றார். எனக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது. எப்படி முடிப்பீர்கள், மீது உள்ளதை எப்போது எடுப்பீர்கள் என்று கேட்டேன். ஒரு படப்பிடிப்புக்கு செல்வதற்கு 20 நாட்கள் முன்பே எப்படி படப்பிடிப்பை நடத்துவது என்று திட்டமிடுவார்கள். இவர் 20 நாளில் மொத்த படப்பிடிப்பையே எப்படி முடிப்பது என்று திட்டமிடுகிறார். பிக் பாஸ் ஹவுஸை விட எங்கள் படப்பிடிப்பு தளத்தில் அதிக கேமராக்கள் இருக்கும். எல்லோரும் முட்டையில் ஆம்லேட் போடுவார்கள் என்றார், இயக்குநர் கல்யாண் அவிச்ச முட்டையில் ஆம்லேட் போட்டுவிடுவார். சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது ஐ போனில் ஒரு குளோஷப் ஷாட் எடுத்துக் கொண்டு போவார். சூட்டிங் ஸ்பாட் டாஸ்மாக் கடையின் முன்புறம் போல் எப்பொழுதும் கூட்டமாகத் தான் இருக்கும். எல்லோரும் கிம்பலை வைத்து படப்பிடிப்பு நடத்துவார்கள். இவர் கும்பலை வைத்துக் கொண்டு தான் படப்பிடிப்பு நடத்துவார். எனக்கே எப்படி இவ்வளவு ஆர்ட்டிஸ்டுகளை வைத்துக் கொண்டு இவ்வளவு வேகமாக படப்பிடிப்பு நடத்துகிறார் என்று ஆச்சரியமாக இருக்கும். என்ன நினைத்தாரோ அதை சிறப்பாக எடுத்து முடித்திருக்கிறார்.
படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சார், சுந்தர்ராஜன் சார், முனிஷ்காந்த், கிங்க்ஸ்லி இவர்கள் நால்வரும் ஒரு அணி, ஒரு கிண்டலான வசனம் வரும். அதை சிறப்பாக ரவிக்குமார் சார் செய்திருக்கிறார். இயக்குநர் சுந்தர்ராஜன் சார் பிணமாக நடித்திருக்கிறார். இறந்த பின் காமெடி செய்யும் கதாபாத்திரம். மனோபாலா சார், மொட்டை ராஜேந்திரன் மற்றும் மன்சூரலிகான் சார் மூவரும் ஒரு கேங். பாட்ஷா படத்தில ரஜினி சாரை கம்பத்துல கட்டி வைச்சி அடிச்ச ஆனந்தராஜ் சாரை காட்டன் புடவை கட்ட வைச்சி காமெடி பண்ணியிருக்காங்க. ஆடுகளம் நரேன் சாரை வேற மாதிரி இந்தப் படத்துல மாத்தி வச்சிருக்காங்க. அதை பார்க்கும் போதே இந்த காமெடி எல்லாம் வொர்கவுட் ஆகும்ங்குற நம்பிக்கை வருது.
சந்தானம் படம் என்றாலே ஹீரோயின் கிடைக்கவில்லை என்கின்ற நியூஸ் வைரல் ஆகும். ஆனா இந்த படத்துல தமிழ் பேசத் தெரிஞ்ச ராதிகா அழகான ஹீரோயினா கிடைச்சிருக்காங்க. இந்தக் கதைக்குள்ள லவ்வை ரொம்ப அழகா இயக்குநர் கொண்டு வந்திருக்காரு.
80 காலகட்டத்துல எடுக்க வேண்டிய படத்தை இப்ப எடுத்திருக்காங்கன்னு நினைக்காம, 80ஸ்ல நடக்குற ஒரு கதையை 80ஸ் காலகட்டத்துக்கே போயி நாம பாக்குறோம்னு நினைச்சி நீங்க பாத்தீங்கன்னா இந்தப் படம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். லாஜிக் இதெல்லாம் தூக்கி ஓரமா வச்சிட்டுப் பாத்தீங்கன்னா இந்தப் படம் குடும்பத்தோட பாத்து குதூகலிக்கிற ஒரு படமா இருக்கும்” என்றார்.
நிகழ்வில் இயக்குநர் கல்யாண் பேசியபோது “நான் நாளைய இயக்குநர் சீசனில் இருந்து வெளிவந்த உடனே ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் படம் செய்ய வேண்டும் என்று நினைத்தது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் தான். அந்த கனவு இன்று நனவாகி இருக்கிறது. எல்லோருமே நான் வேகமாக படப்பிடிப்பை முடித்து விடுகிறேன் என்றார்கள். ஆனால் அது என் தனிப்பட்ட ஒருவனால் சாத்தியமான விசயம் அல்ல. என்னோடு பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகைகள் அனைவரும் ஒத்துழைத்ததால் தான் சாத்தியமானது. இந்தக் கதையை சந்தானம் சாருக்காகவே தான் உருவாக்கினேன். கிட்டத்தட்ட ஒரு வருடம் அவருக்காக காத்திருந்தேன். இடையில் பல்வேறு சிக்கல்கள் வந்தது. இருப்பினும் இப்பொழுது திரைப்படம் முழுமையடைந்து வெளியாக இருக்கிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும்” என்றார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியபோது, “பொதுவாக காமெடிப் படங்களுக்கு இசையமைப்பது மிகவும் கடினம். நான் அதை சில வருடங்கள் தவிர்த்து வந்தேன். த்ரில்லர், ஆக்ஷன் படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்து ஒரு கட்டத்தில் எனக்கு ஒருவித சைக்கோ மனநிலை வந்துவிட்டது. இனி துணிந்து ஒரு காமெடி படத்திற்கு இசையமைக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தேன். இப்படத்திற்கு இசையமைத்தது பெரிய அனுபவம்” என்றார்.
நடிகர் ஆனந்த்ராஜ் பேசியபோது, “இதற்கு முன் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல்ஹாசன், ரஜினி, அஜீத், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விஷால் இப்படி பலரும் அந்த கெட்டப் போட்டிருக்கிறார்கள். அது ஹிட் ஆகியிருக்கிறது. நானும் ஜாக்பாட் திரைப்படத்தின் மூலம் அது போன்ற ஒரு கதாபாத்திரம் செய்தேன். இப்படத்தில் பெண் வேடம் மட்டுமல்லாது இன்னொரு கதாபாத்திரமும் செய்திருக்கிறேன். அது சஸ்பென்ஸ், அதனால் டிரெய்லரில் காட்டப்படவில்லை. இது மிகவும் ஜாலியான திரைப்படம். தியேட்டரில் வந்து பாருங்கள்.
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா கோப்பை வெல்ல எங்கள் குழுவினர் சார்பாக வாழ்த்துக்கள். வரும் நவம்பர் 24-ல் எங்களுக்கான வெற்றிக் கோப்பையை நாங்கள் வாங்க இருக்கிறோம். இது தவிர்த்து தயாரிப்பாளர்கள் தரப்புக்கு ஒரு வேண்டுகோள். ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களை வர்ணனையாளராக பயன்படுத்துவதைப் போல் மூத்த நடிகர் நடிகைகளை திரைப்படங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்” என்றார்.
நிகழ்ச்சியில் படத்தின் நாயகி ராதிகா ப்ரீத்தி, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகை சுபாஷினி கண்ணன், இயக்குநரும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் கெளரவ், நடிகர் சுவாமிநாதன், நடிகர் கும்கி அஷ்வின், நடிகர் தங்கதுரை, சக்திவேல் ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் உள்ளிட்டோரும் பேசினார்கள்.