நவீன் சந்திரா நடிப்பில் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக உருவாகும் ‘லெவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘செம்பி’ ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ஒன்றை தங்களது மூன்றாவது திரைப்படமாக ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ‘லெவன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இயக்குநர் சுந்தர் சி யிடம் ‘கலகலப்பு 2’, ‘வந்தா ராஜாவா தான் வருவேன், மற்றும் ‘ஆக்ஷன்’ ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இந்த புதிய திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா நாயகனாக நடித்திருக்கிறார். ‘சரபம்’, ‘சிவப்பு’, ‘பிரம்மன்’ மற்றும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ள இவர், இயக்குநர் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ உள்ளிட்ட பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தில் ‘விருமாண்டி’ புகழ் அபிராமி, ‘வத்திக்குச்சி’ புகழ் திலீபன், ‘மெட்ராஸ்’ புகழ் ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

படம் பற்றி இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், “ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக ‘லெவன்’ அமையும். திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளார்கள். அவர்களுக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் எனது நன்றி. அனைவரையும் கவரும் விதத்தில் திரைப்படம் அமையும் என்று நம்புகிறேன்,” என்று கூறினார்.

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் பேனரில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியிருக்கும் திரைப்படமான ‘லெவன்’ படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்தது. இப்படத்தின் முதல் பார்வையை நேற்று 11 நட்சத்திரங்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

டி. இமான் இசைமைக்க, பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவமுள்ள கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவை கவனித்திருக்கிறார். படத்தொகுப்புக்கு தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் என்.பி. பொறுப்பேற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here