ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டா, ஷார்ட்ஸ், ரீல்ஸ் என எந்த நேரமும் மொபைலும் கையுமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிற இன்றைய இளைய தலைமுறை, ஆன் லைன் விளையாட்டுகளிலும் ஆர்வம் செலுத்தி சிலபல சிக்கல்களைச் சந்திப்பது வழக்கமாகியிருக்கிறது. அறிமுக இயக்குநர் எஸ் ஆர் ராஜன் அந்த விஷயத்தை மையமாக வைத்து சமூக விழிப்புணர்வுக்கு விதைபோட நினைத்ததன் விளைவே இந்த ‘இ மெயில்.’
படத்தின் நாயகிக்கு வருகிற இ மெயில் ஆன்லைன் விளையாட்டு ஒன்றில் ஈடுபட அவளை தூண்டுகிறது. அவள் ஆர்வமாக விளையாடுகிறாள். அந்த விளையாட்டில் அவள் சுட்டிக்காட்டும் நபர்கள் மரணமடைய மரணமடைய அவளுக்கு பணம் வருகிறது. அதை வைத்து அவள் உற்சாகத்தில் மிதக்கிறாள்.
தவறான வழியில் கிடைக்கிற அந்த உற்சாகத்தை அவள் தொடர்ந்து அனுபவிக்க முடியாதபடி, விவகாரமான அந்த ஆன்லைன் விளையாட்டில் அவளை ஈடுபடுத்தியவர்களால் கொலைப் பழிக்கு ஆளாகிறாள்.
தான் விளையாடிய விளையாட்டின் விபரீதம் என்ன? பின்னணியில் இருப்பவர்கள் யார் யார்? செய்யாத கொலையில் குற்றவாளியாக சிக்கியது எப்படி? அத்தனை விவரங்களையும் அவளே கண்டுபிடிக்கிறாள்… அதனால் அவளுக்கும், உண்மையான குற்றவாளிகளுக்கு நேர்ந்தது என்ன என்பதே மிச்சசொச்ச கதை.
வில்லங்கமான ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவதில் துறுதுறுப்பு, பழி சுமத்தியவர்களை தேடிப்பிடித்து நெருங்குவதில் பரபரப்பு, சதிகாரர்களை சம்ஹாரம் செய்யும் சண்டைக் காட்சிகளில் விறுவிறுப்பு என நடிப்புப் பங்களிப்பில் அசத்தும் ராகினி திவேதி கவர்ச்சிப் பங்களிப்பிலும் கவனம் ஈர்க்கிறார்.
நாயகியை காதலித்து, அவளுக்கு கணவனாகி, சவால்களைச் சந்திக்கும் அவளை அரவணைத்து ஆற்றலூட்டுகிற கதாபாத்திரத்தை ஏற்று, எளிமையான நடிப்பைத் தந்திருக்கிறார் அசோக்.
நாயகியின் தோழிகளாக வருகிற நான்கு பேரிடமும் இளமைத் துள்ளல் அதிகம்.
வில்லன், வில்லி என வருகிறவர்கள் வாட்டசாட்டமாக இருந்தாலும் நடிப்பில் அதற்கேற்ற கம்பீரம் காட்டவில்லை.
மனோபாலா அடிபட்டு மிதிபட்டு சிரிக்க வைக்க பெரும்பாடு பட்டிருக்கிறார்.
பின்னணி இசையும், பாடல்களும் முடிந்தவரை காட்சிகளுக்கு உயிரோட்டம் தர, ஒளிப்பதிவில் நேர்த்தி தெரிகிறது.
நடிகர் நடிகைகள் தேர்விலும், திரைக்கதையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இ மெயிலை வசூல் புயல் தாக்கியிருக்கும்.