சிறிய பொறுப்புக்கானதோ, பெரிய பதவிக்கானதோ எதுவானாலும் தேர்தல் களத்தை தலைவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், தொண்டர்கள் எப்படி சந்திக்கிறார்கள் என்பதை நிஜத்திலும் திரையிலும் பல முறை பார்த்தாயிற்று… எளிமையான கண்ணோட்டத்தில் மீண்டும் ஒருமுறை எடுத்துக் காட்டியிருக்கிறது ‘எலக்சன்.’
அந்த ஊரில் செல்வாக்கு மிக்க கட்சியின் பல வருட விசுவாசமான தொண்டர் நல்லசிவம். தேர்தலில் அவர் சொல்லும் நபருக்கு ஓட்டுபோடுகிற அளவுக்கு மக்களிடம் செல்வாக்கைச் சம்பாதித்து வைத்திருப்பவர். ஒரு கட்டத்தில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு அவர் போட்டியிட விரும்பி, பின்னர் அதற்கான வாய்ப்பை அவராகவே வேறு நபருக்கு விட்டுக் கொடுக்கும்படியான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்.
நல்லசிவத்தின் செல்வாக்கையும், உழைப்பையும் பயன்படுத்திக் கொள்கிற கட்சியின் தலைமை, அவருக்கு நன்றிக்கடனாக எதையும் திருப்பிச் செய்யமால் துரோகம் செய்வது ஒரு கட்டத்தில் அவரது மகனுக்கு தெரியவருகிறது. அதை பார்த்து கொதித்துக் கொந்தளிக்கிறான் நல்லசிவத்தின் மகன். அதுவரை அரசியல் அது இதுவென எதை பற்றியும் யோசிக்காத அவன், அப்பாவின் கட்சித் தலைமைக்கு எதிராக தேர்தலில் போட்டியிட களமிறங்குகிறான். அதன்பிறகு அவன் சந்திக்கும் கஷ்ட நஷ்டங்கள் கதையின் மிச்சமீதி. தேர்தலில் அவன் வெற்றி பெற்றானா, இல்லையா என்பது கிளைமாக்ஸ்… இயக்கம் சேத்துமான் தந்த தமிழ்
தொண்டனை அடிமையாகவே வைத்திருக்க நினைக்கும் கட்சித் தலைமை மீது சீற்றம், தேர்தல் பிரச்சாரத்தில் உ ற்சாகம், காதலியோடு நெருக்கம், அவளைப் பிரிந்தபின் கலக்கம், மனைவி மீது நேசம், கோபம் கொப்பளித்து ஆயிதம் ஏந்தும்போது வெறித்தனம் என காட்சிகளின் தன்மைக்கேற்ப உணர்வுகளின் கலவையாக மாறி வீரியமான நடிப்பால் கவனிக்க வைக்கிறார் விஜயகுமார்.
நல்லது கெட்டது, லாப நஷ்டம் என எதைப் பற்றியும் யோசிக்காமல் கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு களப் பணியாற்றுகிற, சொந்த மகனே தேர்தலில் போட்டியிடும்போதும் அவனுக்கு ஆதரவளிக்காமல் கட்சி நிறுத்திய வேட்பாளர் ஜெயிப்பதற்காக உழைக்கிற தொண்டன் நல்லசிவமாக ஜார்ஜ் மரியான் தந்திருப்பது வழக்கம்போல் எளிமையான நடிப்பு.
கதைநாயகனின் மனைவியாய் பிரீத்தி அஸ்ராணி. சராசரியைத் தாண்டி போராட்டக் களத்துக்கு தாவிவிட்ட மனிதனுக்கு, எப்படியெல்லாம் தோள்கொடுக்க முடியுமோ அப்படியெல்லாம் ஆதரவாய் நிற்கிற அவரது நடிப்புப் பங்களிப்பு மனதில் தங்கும். வன்முறை வெறியாட்டத்தில் அபார்சனாகி ரத்த வெள்ளத்தில் துடிக்கும்போது சற்றே கண்கலங்கும்.
நாயகனின் தாய் மாமனாக வருகிற பாவெல் நவகீதனின், கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி பிரதிபலித்திருக்கும் நடிப்பு படத்துக்கு பலம். திலீபனின் வில்லத்தனமும் இன்னபிற பாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்பும் நேர்த்தி.
கோவிந்த் வசந்தா இசையில் ‘மன்னவன் வந்தானே’, ‘தீரா என் ஆசை’ பாடல்கள் சுகமாய் தாலாட்ட, ‘நல்லூரு மண்ணின் சிங்கம்’ பாடலில் உற்சாகத் தெறிப்பு அதிகம். பின்னணி இசையால் கதைக்களத்துக்கு கிடைத்திருக்கிறது சுறுசுறுப்பு.
காலங்காலமா இருக்குறதாலேயே தப்பு சரின்னு ஆகிடாது… அழகிய பெரியவனின் வசனங்களில் சூடு பறக்கிறது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கலாம்.
ரத்தம், ரணம் ரெளத்ரம் என தேர்தல் களத்தின் அத்தனை சூதுவாது சூழ்ச்சிகளையும் சுற்றி வளைத்திருக்கும் எலக்சன், அள்ளும் கலெக்சன்!