தன்னை எம் ஜி ஆர், ரஜினி, விஜய் என அத்தனை மாஸ் ஹீரோக்களின் ஒட்டுமொத்த அவதாரமாக நினைத்துக் கொண்டு, தமிழ் சினிமாவை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என இரட்டை வேடங்களில் களமிறங்கியிருக்கிறார் ‘விண் ஸ்டார் விஜய்.’
அண்ணன் தேசிங்கு ராஜா நேர்மையான காவல்துறை அதிகாரி. அந்த நேர்மையால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை அடித்து துவைக்க, தப்பிப் பிழைத்து சென்னையிலிருந்து மதுரைக்கு மாற்றலாகிறார்.
அவரது தம்பி ஊர் உலகம் கொண்டாடுகிற வாலிபால் சாம்பியன். அவர் வளரக்கூடாது, அவர் மீது புகழ் வெளிச்சம் பரவக்கூடாது என ஒரு தரப்பு முயற்சி செய்கிறது.
ஒரு கட்டத்தில் அந்த இரண்டு ராஜாக்களின் தங்கை கடத்தப்படுகிறார்.
கதை இப்படி நகர, கடத்தலுக்கான காரணம் என்ன? தங்கையைக் கடத்தியது யார்? அண்ணன்களால் அவரை மீட்க முடிந்ததா, இல்லையா? என்ற கேள்விகளுக்கு பதில் தரும்படி கடந்தோடுகிறது திரைக்கதை.
கதை, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு எல்லாமே விண் ஸ்டார் பொறுப்பில்…
கேரக்டருக்கு பொருத்தமான நடிப்பு வராவிட்டாலும் டேப்லினா, பிரியா என ஆளுக்கொரு ஜோடியை சேர்த்துக் கொண்டு கண்டபடி கட்டிப்பிடிப்பு, டூயட் பாடலில் அந்த அம்மணிகளின் தேகம் முழுதும் மோப்பம் பிடிப்பு என கிளுகிளுப்பு சங்கதிகளை சரளமாய் செய்திருப்பவர், ‘நல்லவனுக்கு கெட்டவனால ஆபத்து, கெட்டவனுக்கு அவனாலேயே ஆபத்து’ என அவ்வப்போது குளோசப்பில் முகம் காட்டி பஞ்ச் டயலாக்குகளையும் பறக்க விடுகிறார்.
வாலிபால் ராஜாவின் வாலிபத்தை ருசி பார்க்கத் துடிக்கும் பெண் தாதாவிடம், ‘மண்ணு திங்கிற உடம்பை பொண்ணு தின்னா என்ன?’ என வசனம் பேசி, காமநெடிக் காட்சியை காமெடியாக்கியிருப்பதெல்லாம் அக்குறும்பு அநியாயம்.
சதைநாயகிகளாக பயன்பட்டிருக்கிற கதாநாயகிகளில் டேப்லினாவின் புன்னகையும், பிரியாவின் உடற்கட்டும் ஈர்க்கிறது.
ராஜாக்கள் இருவரின் ராஜ்ஜியத்தில் நமச்சிவாயம், சோமசுந்தரம், லயன் குமார், ஜெயவேல், கே எஸ் கே செல்வகுமார், ஜோ மல்லூரி, திரைப்பட பத்திரிகையாளர் கார்த்திக் என சில நடிகர்கள் அப்பாவி குறுநில மன்னர்களைப் போல் அவ்வப்போது ஆஜராகி அப்பால் செல்கிறார்கள். தாதாவாக வருகிற கும்தாஜ் கனத்த உடம்பை வைத்துக் கொண்டு கவர்ச்சிப் பாய்ச்சல் நிகழ்த்தியிருக்கிறார்.
ஒளிப்பதிவு, பின்னணி இசை, பாடல்கள், கதை நிகழ்விடங்கள் என அத்தனை அம்சங்களும் எளிமையிலும் எளிமையாக இருந்தாலும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பிரதமர் மோடி வரை நிறைவுக் காட்சியில் தரிசனம் தந்திருப்பது எதிர்பாராதது.
இந்த படத்துக்கு இரண்டாம் பாகமும் இருக்கிறதாம்… அதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினெல்லாம் எட்டிப் பார்க்க வாய்ப்பிருக்கிறது.
எப்போதும் ராஜா, இதுவே போதும் ராசா!
-சு.கணேஷ்குமார்
சுவாரஸ்யமான விமர்சனம்.மேற்கோள் காட்டியிருக்கும் உவமைகள் ரஸிக்க வைக்கிறது. வாழ்த்துகள்