உதறுவாதம், நடுக்கவாதம் என்று சொல்லப்படுகிற, வயது முதிர்ந்தோருக்கு வரக்கூடிய பார்கின்சன் நோயின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த டிபிஎஸ் (Deep Brain Stimulation) எனப்படும் மூளையைத் தூண்டுகிற சிகிச்சை வரப்பிரசாதமாக இருக்கிறது.
டிபிஎஸ் மூளையைத் தூண்டுவதற்கும் பார்கின்சனின் அறிகுறிகளைப் போக்குவதற்கும் மூளைக்குள் முடியளவிலான மெல்லிய மின்முனைகளைப் பொருத்துகிற நரம்பியல் துறையின் மிகமிக நுட்பமான சிகிச்சை!
இந்த நோயினால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த வந்த 60 வயது முதியவர் ஒருவருக்கு சென்னை வடபழனியில் அமைந்துள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையை அணுகினார்.
குறிப்பிட்ட அந்த நோயாளி மருத்துவமனையை அணுகியபோது நோயின் தன்மையை கவனமாக பரிசீலித்த பிறகு, டாக்டர் விகாஷ் அகர்வால், பார்கின்ஸன் நோய் மற்றும் டிபிஎஸ் நிபுணர், டாக்டர் கே. விஸ்வநாதன், மூத்த ஆலோசகர் வலிப்பு மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் சுபா சுப்ரமணியன், நரம்பியல் நிபுணர் மற்றும் டாக்டர் கே. சுதாகர், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் அடங்கிய நரம்பியல் நிபுணர்கள் குழு, டிபிஎஸ் சிகிச்சைதான் பயனுள்ள சிகிச்சையாக இருக்கும் என்று முடிவு செய்தனர்.
அதையடுத்து ஃபோர்டிஸ் மருத்துவமனையின் நரம்பியல் துறைத் தலைவர் டாக்டர் கே பானுவின் வழிகாட்டுதலின் கீழ், டாக்டர் விகாஷ் அகர்வால் தலைமையிலான ஃபோர்டிஸ் குழு 10 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தது.
இது குறித்து இன்று (பிப்ரவரி 28; 2023) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வடபழனி, ஃபோர்டிஸ் மருத்துவமனையின் பார்கின்ஸன் நோய் மற்றும் டிபிஎஸ் நிபுணர் டாக்டர் விகாஷ் அகர்வால் பேசும்போது, “கடுமையான பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், உடல் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிக அளவு மருந்துகளை உட்கொள்பவர்களுக்கும் டிபிஎஸ் ஒரு வரப்பிரசாதம். அறுபது வயது நிறைந்த இந்நோயாளி, தீவிர பார்கின்சன் நோயின் மருந்து எதிர்ப்பு வடிவமான ஆஃப் டிஸ்டோனியா நிலையில் எங்களைப் பார்க்க வந்தார்.
எங்கள் மருத்துவ நிபுணர்கள் குழு 10 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து மூளையில் மின்முனைகளை பொருத்தினோம். முதல் சவால் என்னவென்றால், எந்தவொரு வயதானவர்களுக்கே உரித்தான சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற இதர நோய்கள் ஆகும். கூடுதலாக, உடலில் உள் உடல் உறுப்புகள் அல்லாத எந்த வகையான வெளிப்புற கருவிகள் வைக்கும்போது இரத்தப்போக்கு மற்றும் தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும், இவை இரண்டும் பக்கவாதத்தில் முடிவடையும். மேலும், மூளையின் செயல்பாட்டை சோதிக்க நோயாளி மருத்துவர் கேட்கும் கேள்வியை புரிந்து பதிலளிப்பது அவசியம் என்பதால், நோயாளி விழித்த நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். டிபிஎஸ் அறுவை சிகிச்சையின் வெற்றி விகிதம் சிறப்பாக அமைய சரியான மருத்துவர்கள், நரம்பியல் வல்லுநர்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை தேர்ந்துஎடுப்பது அவசியமாகும். ஒரு வெற்றிகரமான அறுவை சிகிச்சையானது பார்கின்சன் நோயாளிகளுக்கு தரமான வாழ்க்கையை கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் வரை நீட்டிக்கிறது” என்றார்.
வடபழனி ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மண்டல இயக்குநர் மற்றும் தலைவர் வெங்கட ஃபனிதர் நெல்லூரி பேசும்போது, “ஃபோர்டிஸின் ஒருங்கிணைந்த பார்கின்ஸன் நோய் மற்றும் டிபிஎஸ் மையம் அதிநவீன சிகிச்சை அளிக்கும் நோக்கத்துடன் திறக்கப்படுவதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டிபிஎஸ் கிளினிக் இயக்கக் கோளாறுகளை நிவர்த்தி செய்து, நோயாளிகள் இயல்பான, தன்னிறைவான வாழ்க்கையை வாழ வழி வகுக்கும்.
தமிழகத்தில் இயக்கக் கோளாறுகளுக்கான சிறப்பு சிகிச்சை மையம் கொண்ட மருத்துவமனைகள் மிகக் குறைவு. எங்கள் மையத்தில் பார்கின்சன், ஆழ்ந்த மூளை தூண்டுதல் அறுவை சிகிச்சை மற்றும் பிற நரம்பியல் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், நரம்பியல் மயக்க நிபுணர்கள், மனநல மருத்துவர்கள், உளவியலாளர்கள், வலி மேலாண்மை நிபுணர்கள் மற்றும் நரம்பியல் மறுவாழ்வு நிபுணர்கள் உள்ளனர். அனைவருக்கும் ஏற்ற விலையில் டிபிஎஸ் சிகிச்சைகளை வழங்குவதை உறுதிசெய்ய நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம்” என்றார்.
பத்திரிகையாளர் சந்திப்பில், சான்றுக்காக மேற்குறிப்பிட்ட சிகிச்சைக்கு ஆளானவர் நோய் அறிகுறிகளில் இருந்து மீண்டு இயல்பாக சுறுசுறுப்பாக நடப்பதை காண்பித்தனர்.
டிபிஎஸ் சிகிச்சைக்கு ஆகும் செலவு, யாருக்கெல்லாம் டிபிஎஸ் சிகிச்சை மேற்கொள்ளலாம் என்ற விவரங்கள், சிகிச்சைக்குப் பின் என்னென்ன செய்யலாம் என்னென்ன செய்யக்கூடாது உள்ளிட்ட விவரங்களை துறை சார் வல்லுநர்கள் எடுத்துரைத்தனர்!