பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. இந்த படத்தில் தேவர் வேடத்தில் நடிக்கும் ஜெ.எம்.பஷீரின் மூத்த மகள் பாஷினி பாத்திமா. இவர் லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இண்டர்நேஷனல் பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்து மெரிட் மாணவியாக தேர்ச்சி பெற்றார். 2020-ம் ஆண்டின் மிஸ் இந்தியா பட்டம் வென்றார். அடுத்து மிஸ் வேர்ல்டு உலக அழகி போட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.
இதுபற்றி பாஷினி பாத்திமா பேசியபோது, ‘‘எனக்கு படிப்பில் ஆர்வம் இருப்பதுபோல் நடிப்பிலும் ஆர்வம் உண்டு. சிறந்த நடிகையாக வரவேண்டும் என்ற ஆசை சிறுவயதிலிருந்தே உண்டு. உலக அழகியாக ஐஸ்வர்யா ராய் பட்டம் வென்றபோது அவரைப் போல் நாமும் சாதிக்க வேண்டும் என்று எண்ணினேன். அந்த எண்ணம் லட்சியமாக மாறியது. அதற்காக என்னை தயார்படுத்திக் கொள்ள முடிவு செய்தேன். என் தந்தையிடம் இதுபற்றி சொன்னபோது அவர் என்னை வாழ்த்தியதுடன் கடினமாக உழைத்தால் உன் லட்சியத்தில் வெற்றிபெறுவாய் என்று ஆசியும் வழங்கினார். அது எனக்கு உற்சாகம் அளித்தது.
ஐஸ்வர்யா ராய் உலக அழகி போட்டியில் பங்கு பெற்ற மும்பையில் உள்ள மிஸ் வேர்ல்ட் ஆர்கனைஷேனில் (Miss World organization)தான் நானும் மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்க பயிற்சி பெற்றேன். 2020-ல் டெல்லியில் நடந்த போட்டியில் பங்கு பெற்று மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்றேன். அடுத்து மிஸ் வேர்ல்ட் போட்டிக்கும் அதே அமைப்பில் பயிற்சி பெற்று வருகிறேன். அலிஷர்மா என்பவர் பயிற்சி அளிக்கிறார். வரும் செப்டம்பர் மாதம் நடக்கும் மிஸ்
வேர்ல்டு போட்டியில் பங்கேற்க உள்ளேன். தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறேன்” என்றார்.