தங்களை வானத்திலிருந்து குதித்தவர்கள் போல் நினைத்துக் கொள்கிற, சமூகமும் அப்படியே நினைக்க வேண்டும் என எதிர்பார்க்கிற ‘ஃபெமினிஸ்ட்’களிலும் சராசரி மனித உணர்வுகள் கொண்டவர்கள் இருப்பார்கள் என்பதை எடுத்துக் காட்டும் விதத்தில் கேபிள் சங்கர் உருவாக்கியிருக்கிற படைப்பு.
பெண்ணியவாதியான அந்த இளம் கவிஞரின் கவிதைகளால், பேச்சால் ஈர்க்கப்படுகிறான் அந்த இளைஞன். அந்த ஈர்ப்பு அவர்களுக்குள் நட்பை உருவாக்க, அந்த நட்பு நன்கு வளர்ந்த நிலையில் நடைமுறைக்கு வருகிறது கொரோனா ஊரடங்கு. இளைஞனுடன் கவிஞர் சேர்ந்து தங்குகிற சூழ்நிலை உருவாகிறது. அதுவரை நட்பால் நெருங்கியிருந்தவர்கள், அன்று உடலாலும் நெருங்கிவிட தொடங்குகிறது ‘லிவின் ரிலேசன்ஷிப்.’
அந்த ரிலேசன்ஷிப்’பால் அவர்களுக்குள் கரைபுரள்கிறது உற்சாகம்; நாட்கள் சொர்க்கமாய் கடந்தோடுகிறது. ஒரு கட்டத்தில் அவரவர், அவரவர் போக்கில் பயணிப்பதால் எட்டிப் பார்க்கின்றன பிரச்சனைகள்.
அந்த பிரச்சனைகள் என்ன என்பதும், அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுமே கதையின் மிச்சசொச்சம்…
கதையை தன் ஆளுமையான நடிப்பாலும் பளபள தளதள கவர்ச்சியாலும் தாங்கிப் பிடித்திருக்கிறார் ஏஞ்சலின் புளோரா.
ஒளிப்பதிவு, பின்னணி இசை நேர்த்தி.