வடசென்னையை கதைக்களமாக கொண்ட படங்களின் வரிசையில் புதுவரவு. காட்சிக்கு காட்சி ஆக்சன் அதிரடி விருந்து படைத்திருக்கும் ‘ஃபைட் கிளப்.’
கால்பந்தாட்டத்தில் சாதிக்க நினைக்கிற செல்வா என்ற அந்த சிறுவனை அரவணைத்து ஊக்குவிக்க முன்வருகிறார் பெஞ்சமின். மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க களமிறங்கி களமிறங்கி ஏரியாவில் கணிசமான செல்வாக்கை வளர்த்து வைத்திருக்கும் அவர், தன் தம்பியாலேயே கொல்லப்படுகிறார்.
அந்த சம்பவத்தின் பின்னணியில் பெரும் துரோகம் சூழ்ந்திருக்க, அந்த துரோகியை அந்த தம்பி பழி தீர்க்க நினைக்கிறான். 20 வருட சிறை தண்டனை அனுபவித்து விடுதலையானபின் அதற்கான முயற்சியில் இறங்குகிறான்.
தான் சிறை சென்றபோது சிறுவனாக இருந்த செல்வா, வாலிபனாக வளர்ந்து நிற்க அவனை தன் பழிவாங்கும் முயற்சிக்கு பலம் சேர்க்கப் பயன்படுத்துகிறான். அதனால் செல்வா என்னென்ன விளைவுகளைச் சந்திக்கிறான்? கால்பந்தாட்ட வீரனாக புகழ்பெற நினைத்த அவனது விருப்பம், கனவு, லட்சியம் என்னவானது? இப்படியான கேள்விகளுக்கு பரபரப்பான காட்சிகளில் பதில் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அப்பாஸ் ஏ ரஹ்மத்.
இறுகி விரிந்த உடற்கட்டும், தெனாவட்டு ததும்பும் முகவெட்டுமாய் உறியடி விஜய்குமார். கால்பந்து மீது நேசம், அக்சன் காட்சிகளில் வெறியேறிய காளையாய் சீறிப்பாயும் ஆவேசம் என ஏற்ற பாத்திரத்திற்கு எக்கச்சக்கமாய் பொருந்தியிருக்கிறார். போதையில் மிதந்தபடி போதைக்கெதிராக வசனம் பேசுவதையெல்லாம் உள்ளுக்குள் சிரித்தபடி கடக்க வேண்டியிருப்பது தர்மசங்கடம்.
பெஞ்சமினுக்கு தம்பியாக வருகிற அவினாஷ் ரகுதேவன் துரோகத்தின் வலியை, மனதுக்குள் இருக்கும் பழி தீர்க்கும் உணர்ச்சியை முகபாவங்களில் மிகச் சரியாய் வெளிப்படுத்த, பெஞ்சமினாக வருகிற கார்த்திகேயன் சந்தானம், வில்லன்களாக வருகிற சங்கர் தாஸ், சரவண வேல் என இன்னபிற பாத்திரங்களை சுமந்திருப்பவர்களின் பங்களிப்பு நிறைவு தருகிறது.
நாயகி மோனிஷா மோகன் ஒன்றிரண்டு காட்சிகளில் வந்துபோவதோடு சரி. கதையோட்டத்துக்கு அதுவே போதுமானதாக இருக்கிறது.
விக்கி, அம்ரின் அபூபக்கர் கூட்டணி சண்டைக் காட்சிகளில் வித்தியாசம் காட்டி வீரியமூட்டியிருக்கிறார்கள்.
அடிதடிக்கு பஞ்சமில்லாத கதைக்களத்தை தன் பின்னணி இசையால் அதிரச் செய்திருக்கிறார் கோவிந்த் வசந்தா.
வடசென்னை படமென்றாலே குடிபோதை, அடிதடி, கஞ்சா, ரத்தவெறி என்ற டெம்ப்ளேட்டில் இன்னொரு படமென்பது சற்றே அயர்ச்சி தந்தாலும் ஆக்சன் பட பிரியர்களுக்கு அட்டகாசமான விருந்து என்பதை மறுப்பதற்கில்லை.