வித்தியாசமான கதைக்களத்தில் பரபரப்பான கிரைம் திரில்லராக ‘ஃபைண்டர்.’
குடும்பத்தின் வறுமைச் சூழலால் பணத்துக்கு ஆசைப்பட்டு, செய்யாத கொலைக் குற்றத்தை ஏற்றுக்கொண்டு சிறைக்குச் செல்கிறார் பீட்டர். ஆறு மாதத்தில் அவரை சிறையிலிருந்து மீட்டுவிடுவோம் என உறுதியளித்த தரப்பு, பின்னர் அவரை மீட்க முடியாது என கை கழுவிவிட, எதிர்பார்த்த பணம் கிடைக்காமல் ஏமாற்றத்தை சந்திக்கிறது அவரது குடும்பம். பீட்டரின் மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார்.
இந்த விவகாரம், செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிப்பவர்களைக் கண்டறிந்து, அவர்களை நிரபராதிகள் என நிரூபிப்பதை முழுநேரப் பணியாக செய்கிற டிடெக்டிவ் வினோத் கவனத்துக்கு வருகிறது. அவர், நடந்தது என்ன? வழக்கில் பீட்டர் சிக்கியது எப்படி? உண்மையில் கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்றெல்லாம் ஆராயும் முயற்சியில் இறங்குகிறார். கிடைக்கிற தகவல்கள், நடந்திருக்கும் சம்பவங்கள் என அனைத்தும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தருவதாக இருக்க, பீட்டரை வினோத்தால் சிறையிலிருந்து விடுவிக்க முடிந்ததா இல்லையா? என்பதே கதையோட்டம்…
பீட்டராக சார்லி. அப்பாவி குடும்பத் தலைவனாக, சூழ்நிலைக் ‘கைதி’யாக துரோகம் தரும் வலியை துல்லியமாய் பாரிமாறி பரிதாபத்தைச் சம்பாதிக்கிறார்.
படத்தை இயக்கியிருக்கிற வினோத் ராஜேந்திரன், பிரைவேட் டிடெக்டிவாக குற்றப் பின்னணியை கண்டறிவதில் சுறுசுறுப்பில் அலட்டலில்லாத நடிப்பு கவர்கிறது. அவருக்கு உதவியாளராய் இணைந்து பயணிக்கிற தாரணி அழகாக இருக்கிறார்; அளவான நடிப்பை தந்திருக்கிறார்.
நிழல்கள் ரவி அரசு தரப்பு சீனியர் வழக்கறிஞராக நீதிமன்ற வாத விவாதங்களில் கம்பீரம் காட்ட, அப்பாவி சார்லியை சிக்கலில் மாட்டிவிட்டு அதில் தானும் சிக்கிக்கொள்கிற வேலையை சரியாகச் செய்திருக்கிறார் சென்ராயன்.
சார்லியின் மகளாக பிரணா, வில்லனாக நாசர் என இன்னபிற பாத்திரங்களை ஏற்றிருப்போரின் பங்களிப்பு நிறைவு.
சூர்ய பிரசாத்தின் பின்னணி இசை பரவாயில்லை ரகம். பிரசாந்த் வெள்ளிங்கிரியின் ஒளிப்பதிவு காட்சிகளை மெருகேற்றியிருக்கிறது.
சில காட்சிகள் திரும்பத் திரும்ப வருவதை தவிர்த்துப் பார்த்தால் முன் கதை, நிகழ்காலக் கதை என முன்னும் பின்னுமாக கலந்து கடக்கும் காட்சிகளை ஒழுங்கு தவறாமல் கத்தரித்துக் கோர்த்திருப்பதில் தெரிகிறது எடிட்டர் தமிழ்க் குமரனின் உழைப்பு.
அடுத்து என்ன அடுத்து என்ன என்று எதிர்பார்க்க வைக்கும் திரைக்கதை, அடுக்கடுக்கான திருப்பங்கள், டூயட் சாங், குத்துப் பாட்டு என மசாலா அம்சங்களைச் சேர்க்காமலிருந்தது படத்தின் பலம்.
சுயாதீன திரைக்கலைஞரான (இன்டிபெண்டன்ட் ஃபிலிம் மேக்கர்) வினோத் ராஜேந்திரனிடம் இருக்கிற, பரபரப்பும் விறுவிறுப்பும் குறையாமல் கதையை நகர்த்தும் திறமை அவரை அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்த்தும்!
ஃபைண்டர், இந்த வார ரிலீஸ் ரேஸில் முந்துகிற ரன்னர்!