நம்மூர் இளைஞர்கள் சிலருடன் பால்கோவாவில் செய்தது போலிருக்கிற, கண்களில் மின்சாரம் பாய்ச்சுகிற ஒரு அழகிலும் அழகான ஒரு பெண் வந்து சேர்ந்து, கலந்து பழகினால் அந்த சூழ்நிலை பரவசமாக இருக்கும்தானே? அவர்களில் ஒரு இளைஞன் அந்த ஏலியனை காதலித்தால் குதூகலமாக இருக்கும்தானே? அப்படி ஒரு கதையை யோசித்திருக்கிறார் இயக்குநர் அருண் சந்து.
டிஸ்டோபியன் சயின்ஸ் பிக்சன் ஜானரில், 2040 காலகட்டத்தில் நடக்கிற கதை. ஆவணப் படம் எடுப்பதற்காக வேற்றுக்கிரக வாசிகளை நம் நாட்டுக்காக வேட்டையாடிய ராணுவ வீரர் ஒருவரை பேட்டியெடுக்க செல்கிறது ஒரு டிவி சேனலின் டீம். அவர் தன்னைப் பற்றி, தான் சந்தித்த போர்க்காலம், போர்க்களம் பற்றியெல்லாம் சொல்லச்சொல்ல அதை காட்சிகளாக பார்க்கும் அனுபவம் பிரமிப்பை தருகிறது.
ஏ ஐ தொழில்நுட்ப பயன்பாட்டின் பாதிப்பு, பருவநிலை மாறி அளவுக்கதிகமாய் பொழியும் மழையால் ஏற்படும் பாதிப்பு, பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாடு என காலமாற்றத்தால் ஏற்பட்ட பல சங்கதிகளை அலசுகிறது திரைக்கதை.
ராணுவ வீரராக கணேஷ்குமார் தேர்ந்த நடிப்பைத் தர, ஏலியனாக பூனைக்கான உணவை விரும்பிச் சாப்பிடுபவராக வருகிற அனார்கலி மரைக்காயர் வசனங்களின்றி கண்களாலேயே பல்வேறு உணர்வுகளை கடத்தியிருக்கிறார். காட்டில் மறைந்து வாழும் ராணுவ வீரரின் உதவியாளர்களாக வருகிற கோகுல் சுரேஷும் அஜூ வர்கீஸும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.
சயின்ஸ் பிக்சன் கதை, ராணுவம், போர், நடப்பாண்டிலிருந்து 15 வருடங்கள் கழிந்த காலகட்டம், ஏலியன் வருகை என்றெல்லாம் கதைக்களம் கனமாக இருக்க, அதற்கேற்ப கலை இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் இணைந்து பெரியளவிலான உழைப்பைக் கொட்டி காட்சிகளில் ஆச்சரியத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
கதை சீரியஸாக இருந்தாலும் திரைக்கதையின் பயணத்தில் காமெடிக்கு பஞ்சமேயில்லை.
வித்தியாசமான அனுபவத்தை விரும்புவோர் தாராளமாய் நம்பிப் போகலாம்!