குறட்டையில் நகைச்சுவை… ‘ஜெய்பீம்’ மணிகண்டன் நடிக்கும் ‘குட் நைட்’ படத்தின் சுவாரஸ்யம்!

‘ஜெய் பீம்’ பட நாயகன் மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு ‘குட் நைட்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இசையமைப்பாளர் அனிரூத் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக மீதா ரகுநாத் நடித்திருக்கிறார். ரமேஷ் திலக், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபேக்கா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ‘குட் நைட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் மணிகண்டனின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசும்போது, ”குறட்டையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த படத்தில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவமும் இடம் பிடித்திருக்கிறது. தூங்கும் போது ஒருவர் விடும் குறட்டை, எப்படி மற்றவர்களை பாதிக்கிறது என்பதை நகைச்சுவையாகவும், அர்த்தமுள்ள கதையாகவும் உருவாக்கி இருக்கிறோம்” என்றார்.ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்குநராக ஸ்ரீகாந்த் கோபால் பணியாற்ற, பட தொகுப்பை பரத் விக்ரமன் மேற்கொண்டிருக்கிறார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம். ஆர். பி என்டர்டெய்ன்மெண்ட்  எனும் பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நசரேத் பசிலியான், மகேஷ் ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக இயக்குநர் எஸ். பி. சக்திவேல் பணிபுரிந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here