திரைப்படத் தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் திரையுலகில் பலரிடமும் ‘நான் பிரபல விநியோகஸ்தராக கொடிகட்டிப் பறக்க காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர்கள் ஏவி.எம். சரவணன் சார், கே.பாலாஜி சார், ஜி.வி சார், எஸ்.பி. முத்துராமன் சார், ஆர்.எம்.வீரப்பன் சார், தேவர் ஃபில்ம்ஸ் சின்னப்பா தேவர் இப்படி பலர்… அவர்கள் இல்லாமல் நான் இப்படி ஒரு தயாரிப்பாளராக உருவாகியிருக்க வாய்ப்பில்லை’ என்று அடிக்கடி சொல்வதுண்டு.
அந்த நன்றியோடு, தான் தற்போது பிரமாண்டமான தயாரிக்கும் ‘ஜென்டில்மேன்-ll’ படத் துவக்கவிழா அழைப்பிதழை திரையுலகினருக்கு நேரில் வழங்க துவங்கியுள்ளார்.
திரையுலகில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு டிஜிட்டல் முறையில் அழைப்பு அனுப்பப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில் எதையும் பிரமாண்டமாக செய்தே பழக்கப்பட்ட மெகா தயாரிப்பாளர் குஞ்சுமோன் அழைப்பிதழை நேரில் வழங்கி அழைக்கும் மரபை மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்.
அதன் துவக்கமாக தனது திரையுலகப் பயணத்தின் வளர்ச்சியில் ஆரம்ப காலத்தில் இருந்து உறுதுணையாக நின்றவர்களில் ஏவிஎம் சரவணன், எஸ்.பி.முத்துராமன், ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரை நேரில் சந்தித்து மரியாதை செலுத்தி ஆசி பெற்று விழா அழைப்பிதழை வழங்கினார். அதையடுத்து திரையுலகைச் சார்ந்த பலரையும் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வருகிறார்.
படத்தின் துவக்க விழா வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி, நிகழ்வு ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணிக்கு பாராட்டு விழாவாகவும் சென்னை எழும்பூர் ராஜா முத்தையா மண்டபத்தில் பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது. திரையுலகைச் சார்ந்த பலர் கலந்து கொள்கிறார்கள்.
சினிமா விழாக்களுக்கு நேரில் அழைப்பிதழ் வழங்குவது கிட்டத்தட்ட நடைமுறையில் இருந்து மறைந்து சிலபல வருடங்களாகிவிட்ட நிலையில், மீண்டும் அந்த மரபைக் கடைப்பிடிக்கும் குஞ்சுமோனின் அணுகுமுறையை திரையுலகினர் ஆச்சர்யத்துடன் பார்த்து பாராட்டுகின்றனர்.
‘ஜென்டில்மேன்-ll’ படத்தை ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்க, ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.