வாழ்வின் வினோதங்களைப் பேசும் புதிய படத்தில் இணையும் அர்ஜுன் தாஸ் – ஷிவாத்மிகா! விஷால் வெங்கட் இயக்குகிறார்.

அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் நடிக்க, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்த விஷால் வெங்கட் இயக்கும் புதிய படம் வாழ்வின் வினோதங்களைப் பேசும் பொழுதுபோக்கு படைப்பாக உருவாகிறது. நாசர், காளி வெங்கட், அபிராமி, ரமேஷ் திலக், பால சரவணன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

சுதா சுகுமார் தயாரிப்பில், சுரேந்தர் சிகாமணி இணை தயாரிப்பில், கெம்ப்ரியோ பிக்சர்ஸ்
(Gembrio Pictures) நிறுவனம் தயாரிக்கும் முதல் படமாக உருவாகிறது.

கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி சென்னையில் நடந்த இந்த படத்தின் துவக்கவிழாவில், படக்குழுவினர் பத்திரிகையாளர்களிடம் படம் பற்றி பேசினார்கள். இயக்குநர் விஷால் வெங்கட், ‘‘என்னுடைய முதல் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த உங்களுக்கு நன்றி. எனக்கு இந்த இடம் கிடைக்க நீங்கள்தான் காரணம். இந்தப் படத்திற்கும் அதே போல உங்கள் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய வெற்றிக்கு என்னுடைய டெக்னிக்கல் குழுதான் காரணம். அவர்களுக்கு எனது நன்றி.

நான் தேர்வு செய்துள்ள நடிகர்களுக்கு இந்த படம் நல்ல பெயரை பெற்றுத் தருவதாக இருக்கும். இசையமைப்பாளர் இமான் சார் எனக்கு அண்ணன் போல் தான் இருந்தார். அவருடன் பல விஷயங்கள் பேசியுள்ளேன்.

அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகாவுக்கு இந்தப் படம் ஒரு முக்கியப் படமாக இருக்கும். இந்தப் படமும் மனிதர்களைப் பற்றியதாகத்தான் இருக்கும். கூடுதலாக ஒரு என்டர்டெயின்மென்ட் படமாகவும் இருக்கும். எங்கள் குழுவிற்கு உங்கள் ஆதரவைத் தர வேண்டும்” என்றார்.

நடிகர் அர்ஜூன் தாஸ், ‘‘இந்த படத்தில், மிகப்பெரிய சுவாரஸ்யம் காத்திருக்கிறது. நாசர் மாதிரி பெரிய நடிகருடன் நடிக்கப் போகிறேன். இமான் சாரின் ரசிகன் நான். அவர் இசையமைக்கும் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. ஷிவாத்மிகாவிற்கு வாழ்த்துக்கள்.

இயக்குநர் விஷால் மதுரை வந்து கதை சொன்னார். மூன்று மணி நேரம் சொன்னார். அப்போதே ஓகே சொல்லிவிட்டேன். அவரை நம்பி முழுமையாக என்னை ஒப்படைத்து விட்டேன். அநீதி படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. இந்தப் படத்திற்கும் ஆதரவு தாருங்கள். தயாரிப்பாளர்களுக்கு இந்தப்படம் வெற்றிப்படமாக இருக்கும்” என்றார்.

படத்தின் நாயகி ஷிவாத்மிகா ராஜசேகர் ‘‘இயக்குநர் ஒரு அற்புதமான கதையை எழுதியுள்ளார். நாசர் சார் மற்றும் அர்ஜுன் தாஸுடன் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நானும் இமான் சாரின் மிகப்பெரிய ரசிகை தான். அவரது பாடலுக்காகக் காத்திருக்கிறேன்” என்றார்.

நடிகர் நாசர், ‘‘தயாரிப்பாளர்களுக்கு கண்டிப்பாக இந்தப்படம் மகிழ்ச்சி அளிக்கும். அதற்குக் காரணம் நீங்கள் தேர்வு செய்த இயக்குநர். இயக்குநர் விஷால் வெங்கட் என்னை ஆச்சரியப்பட வைத்தவர். அவரின் முதல் படத்தில் முதல் நாளிலிருந்தே, அவர் என்னை ஈர்த்து விட்டார். தனது பணியில் மிகவும் தெளிவானவர். நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். அவர்களுக்கு இந்தப் படம் மூலம் புது அடையாளம் கிடைக்கும். இந்தப்படம் மிகச்சிறந்த படமாக இருக்கும். இயக்குநர் விஷாலுக்கு நான் எப்போதும் ஆதரவாய் இருப்பேன்” என்றார்.

நடிகர் காளி வெங்கட், ‘‘இந்தப் படத்தின் கதையை நான் முழுவதுமாக கேட்டுள்ளேன். ஆனாலும் என்னை நம்பாமல் மீண்டும் படத்தின் கதையை இயக்குநர் எனக்கு அனுப்பியுள்ளார். இயக்குநர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்தப் படம் எனக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும். அர்ஜுன் தாஸுடன் ஏற்கனவே இணைந்து நடித்துள்ளேன். ஆனால் அதில் எங்கள் இருவருக்கும் சேர்ந்தது போல காட்சிகள் இல்லை. இந்தப் படத்தில் நாங்கள் இருவரும் இணைந்தே பயணம் செய்யவுள்ளது மகிழ்ச்சி. தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள். உங்கள் தைரியமும், நம்பிக்கையும் தான் எங்களுக்கு ஒரு ஆதரவாக இருக்கும்” என்றார்.

இசையமைப்பாளர் இமான், ‘‘கெம்ப்ரியோ நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் இணைந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தின் கதையை கொரானா காலத்தில் கேட்டேன். படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர்களுக்கும் வாழ்த்துகள். இயக்குநர் கதைக்கு மட்டுமல்லாமல், படத்தில் சின்ன சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்துகிறார். கண்டிப்பாக ஒரு நல்ல படமாக உருவாகும் என்று நம்புகிறேன். படத்தின் பாடல்கள் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும்படி இருக்கும். படத்தின் தயாரிப்பாளர் சுதாவிற்கு வாழ்த்துகள்” என்றார்.

தயாரிப்பாளர் சுதா சுகுமார், ‘‘பல்வேறு டிஜிட்டல் துறைகளில் எங்கள் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இப்போது திரைத்துறையில் கால் பதிக்கிறோம். நாங்கள் தயாரிக்கும் முதல் திரைப்படம் இது. இயக்குநர் விஷால் வெங்கட் ஒரு சிறந்த இயக்குநர். அதற்கு அவரது முதல் படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நானும் எங்கள் குழுவும் ஒரு 10 முறை படத்தின் கதையில் சந்தேகங்கள் கேட்டிருப்போம். ஆனால், ஒவ்வொரு முறையும் அனைவருக்கும் பொறுமையாகக் கதையை விளக்கமாக சொன்னார்.

இந்தப் படம் மக்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தைத் தரும். நாங்கள் தேர்வு செய்துள்ள நடிகர்கள் படத்தின் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமாக இருப்பார்கள். குறிப்பாக காளி வெங்கட் சாருக்கு இது முக்கியமான படமாக இருக்கும். நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் ஷிவாத்மிகாவுக்கு வாழ்த்துகள். நான் இமான் சாரின் மிகப்பெரிய ரசிகை. அவரது பாடல்கள் நம்மை மெய் மறக்கச் செய்து விடும். இந்தப் படத்தின் பாடல்களும் அதே போல் இருக்கும் என நம்புகிறேன். படத்தில் பணிபுரியவுள்ள அத்தனை கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் வாழ்த்துகள்” என்றார்.

படக்குழு:-
கதை, திரைக்கதை – மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரீசன், விஷால் வெங்கட்
வசனம் – மகிழ்நன் பி எம்
ஒளிப்பதிவு – பி எம் ராஜ்குமார்
படத்தொகுப்பு – ஜி கே பிரசன்னா
கலை இயக்கம் – மனோஜ் குமார்
உடை வடிவமைப்பு – பிரியா ஹரி, பிரியா கரண்
நடன அமைப்பு – அப்ஸர்
சண்டைப் பயிற்சி – மாஸ்டர் முகேஷ்
விளம்பர வடிவமைப்பு – தினேஷ் அசோக்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here