இது உணர்வுப்பூர்வ ஹாரர் படைப்பு! -ஹன்சிகா நடித்துள்ள ‘கார்டியன்’ பட விழாவில் இயக்குநர் குரு சரவணன் பேச்சு

ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்க அவருடன் சுரேஷ் மேனன், ஸ்ரீமன், அபிஷேக் வினோத், ஸ்ரீராம் பார்த்தசாரதி, ‘மொட்டை’ ராஜேந்திரன், பிரதீப் ராயன், ‘டைகர் கார்டன்’ தங்கதுரை உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ள படம் ‘கார்டியன்.’ படத்தை குரு சரவணன், சபரி ஆகியோர் இயக்கியுள்ளனர்.

வரும் மார்ச் 8-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்தின் டீசர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

நிகழ்வில் ஹன்ஷிகா மோத்வானி பேசியபோது, ”கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள இந்த படத்தில் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

இயக்குநர்களில் ஒருவரான சபரி பேசியபோது, ”நான் இந்த மேடையில் இருப்பதற்கு எங்களுடைய குருநாதர் ஆகிய திரு கே.எஸ்.ரவிக்குமார் அவர்களே முக்கிய காரணம். அவர்களை நாங்கள் காட்பாதராகவே நினைக்கிறோம். அவர்தான் எங்களுக்கு முதல் பட வாய்ப்பு அளித்து எங்களை இயக்குனராக உருவாக்கினார். இனிமே எத்தனை படம் இயக்கினாலும் அவர் அளித்த முதல் வாய்ப்பை என்றும் மறக்க மாட்டோம். அதேபோல தயாரிப்பாளர் விஜய்சந்தர் ஒரு இயக்குனராக இருப்பதால் எங்களுக்கு பல விதத்திலும் பக்கபலமாக இருந்தார்.

இத்திரைப்படத்தின் கதாநாயகி ஹன்சிகாவும் தனது முழு ஒத்துழைப்பையும் இத்திரைப்படத்திற்காக வழங்கினார்கள். சாம் சி எஸ் தனது பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசையையும் சிறப்பாக அமைத்துக் கொடுத்திருந்தார். கலை இயக்குனர் லால்குடி இளையராஜா முழு ஒத்துழைப்பையும் நல்கினார். ஊடகத்துறையினர் எங்களது முதல் படத்தை எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்த்தீர்களோ, அதே போல இந்த படத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுகிறேன். குறிப்பிட்ட ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த படம் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார்.

இயக்குநர்களில் ஒருவரான குரு சரவணன் பேசியபோது, ”தமிழுக்கும்,கடவுளுக்கும், எங்களது குருநாதர் கே. எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கும் எனது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கடவுள் கொடுத்த வரம் என்னவென்றால் திரு.கே. எஸ்.ரவிக்குமார் எங்களை அவரிடம் சேர்த்துக் கொண்டதுதான்.தயாரிப்பாளர் விஜயசந்தர் எங்களுக்கு நீண்ட நாள் நண்பர் தான். கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போதே, தயாரிப்பு நிறுவனம் தொடங்கவிருப்பதையும் இணைந்து பணிபுரியலாம் என்றும் கூறினார்.நானும் சபரியும் பத்தாண்டுகளுக்கு மேலாக சிறந்த நண்பர்கள் இருவருக்கும் பல விஷயங்கள் ஒத்துப்போகும். கதையை தயாரிப்பாளர்,அவரது குழுவினர் மற்றும் ஹன்ஷிகாவிடமும் கூறி ஒப்புதல் பெற்றோம்.பின்னர் எங்கள் குருநாதரிடம் இதைக் கூறி,ஆசி பெற்றோம். படத்திலுள்ள அனைத்து நடிகர், நடிகையருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களும் முழு ஈடுபாட்டுடன் உழைத்துள்ளனர். ஹாரர் திரைப்படத்தை சிறந்த திரைக்கதையுடன் உணர்வுப் பூர்வமான கதைக்களத்துடன் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய படமாக உருவாக்கி உள்ளோம்” என்றார்.

தயாரிப்பாளர் விஜயசந்தர், கலை இயக்குனர் திரு லால்குடி, ஒளிப்பதிவாளர் தியாகராஜன், டான் அசோக், இசையமைப்பாளர் சாம் சிஎஸ், படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமை பெற்றுள்ள யுவராஜ், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோரும் பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here