கருடன் (மலையாளம்) சினிமா விமர்சனம்

சூப்பர் ஸ்டார் சுரேஷ் கோபி என்று டைட்டில் வருகிறது. பட்டத்த பறிக்கிற நூறு பேருல சுரேசும் ஒருத்தர் போலருக்கு?! நம்மூரு சூப்பரு கடுப்பாகாம இருந்தா சரிதான்!
படம் அதன் கதை சொல்லும் பாணியிலும், விறுவிறுப்பிலும் திரிஷ்யத்தை நினைவுபடுத்துகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்த அருமையான படம்.
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் இளம்பெண் தெரசாவின் வழக்கை ஹரிஷ் மாதவ் (சுரேஷ் கோபி) என்ற நேர்மையான காவல் அதிகாரி விசாரிக்கிறார்.
ஏழு மாதங்கள் கடந்த பின்னரும் வழக்கு தீர்வை நோக்கி முன்னேறாமல் போகவே, குற்றவாளியின் டிஎன்ஏ வை வைத்து விசாரணை நடத்துகிறார். இந்தியா முழுவதும் ஒப்பீடு நடக்கிறது. அதில் ஹைதராபாத்தில் இருக்கும் சுதேஷ் என்பவரின் டிஎன்ஏ ஒத்துப் போகிறது. அவரை விசாரிக்கையில் அவரது தூரத்து உறவினர் நிஷாந்த் (பிஜு ,மேனன்) கேரளாவில் தெரசா படிக்கும் கல்லூரியிலேயே பேராசிரியராகப் பணிபுரிகிறார் என்பது தெரியவருகிறது.
மனைவி, குழந்தை என்று அமைதியான வாழ்க்கை வாழும் நிஷாந்தின் டிஎன்ஏ மாதிரி எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. அவரே குற்றவாளி என நிருபணமாகிறது. ஆயுள்தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்படுகிறார்.
ஏழு ஆண்டுகள் கழிகின்றன. தண்டனை முடிந்து வெளியே வருகிற நிஷாந்த் சிறையிலேயே சட்டம் படித்து முடிக்கிறார். மீண்டும் வழக்கை விசாரிக்க மனு செய்கிறார். டிஎன்ஏ சோதனை சரியாக நடத்தப்படவில்லை என வாதம் செய்கிறார்.
எல்லாவற்றிற்கும் மேலாக முருகன் என்ற தண்டனைக் கைதியை உண்மையான குற்றவாளி என நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகிறார். தனக்கு வழங்கப்பட்ட தண்டனை அநீதியானது என நிரூபிக்கிறார்.
இப்போது நிரபராதியாக தண்டனை அனுபவித்த நிஷாந்துக்கு நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கிறது. அதில் ஒரு பெரும் தொகையை ஹரிஷ் மாதவ் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வருகிறது. ஹரிஷ் மாதவ் அவமானத்தில் துடிக்கிறார்.
நிஷாந்த்-ஹரிஷ் மாதவ் மோதலில் என்ன நடக்கிறது?
உண்மையான குற்றவாளி யார்? என்பதாக மீதிப் படம் போகிறது.
படத்தில் சில லாஜிக் மீறல்கள் இருக்கின்றன.
முக்கியமாக தண்டனைக் கைதி முருகன் என்பவர் தானே தெரசாவை பாலியல் பலாத்காரம் செய்ததாக நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார். ஆனால் அவரை டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தாமலேயே நீதிமன்றம் விட்டுவிடுகிறது. அவரை சோதனைக்கு உட்படுத்தியிருந்தால் அந்த இடத்திலேயே நிஷாந்த் பொய்யான குற்றவாளியை ஆஜர் படுத்துகிறார் என்பது தெரிந்து போயிருக்கும். கதையும் முடிந்து போயிருக்கும். ஆனால் படத்தில் திரைக்கதை விறுவிறுவென போவதால் இந்தக் குறைகள் எதுவும் பெரிதாகப் பாதிக்கவில்லை.
படத்தின் இயக்குனர் அருண் ஷர்மா அவர்களுக்கு இது முதல்படம். அதிலேயே இப்படி ஒரு குயுக்தியான திரைக்கதையை தருவது தனித்திறமைதான்! வாழ்த்துக்கள்.
இசை, ஒளிப்பதிவு எல்லாமும் நிறைவாக இருக்கிறது.
அவசியம் பாருங்கள். அமேசான் பிரைமில் இருக்கிறது.
-இரா.குண அமுதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here