‘குடி, கூட இருப்பவனை கெடுக்கும்; அவன் வாழ்வைச் சிதைக்கும்’ என கிளாஸ் எடுக்கும் ‘கிளாஸ்மேட்ஸ்.’
கதையின் நாயகன், தன் மாமனுடன் சேர்ந்து நாள் முழுக்க குடிக்கிறான். கார் டிரைவராக இருக்கும் அவனால் விபத்து நேர்கிற சூழலை சந்தித்து காவல்துறை நடவடிக்கைக்கு ஆளாகிறான். அன்புக்கு இலக்கணமாக இருக்கும் தன் புத்தம்புது மனைவி மீது சந்தேகப்படுகிறான். அதனால் வாழ்க்கையில் நிம்மதி பறிபோகிறது.
அந்த நிம்மதியை அவனால் மீட்டெடுக்க முடிந்ததா இல்லையா என்பதே கதையோட்டம்… இயக்கம் ‘குட்டிப்புலி’ சரவண சக்தி.
கதையின் நாயகனாக அங்கையற்கண்ணன். வகைதொகையில்லாமல் குடிப்பவர்கள் என்னவெல்லாம் ஏடாகூடம் செய்வார்களோ அதையெல்லாம் அப்படியே செய்திருக்கிறார்!
சம்பாதிக்கிற வேலையை பெரியமனதோடு மனைவிக்கு தூக்கிக் கொடுத்துவிட்டு, செலவழிக்கிற சிரமமான வேலையை தூக்கிச் சுமப்பவராக இயக்குநர் சரவண சக்தி. மாப்பிள்ளையோடு சேர்ந்து குடிப்பதை முழுநேரப் பணியாக வைத்திருக்கிற அவரது அலம்பல் சலம்பல் ஓரளவு ரசிக்க வைத்தாலும், பாத்ரூம் என நினைத்து பீரோவை யூரினால் குளிப்பாட்டுவதையெல்லாம் சத்தியமாய் காமெடியாக ஏற்க முடியல சாமி. எந்த நேரமும் போதையில் மிதந்து மனைவியின் அந்த’ பசிக்கு தீனிபோட முடியாத, தன் இயலாமை குறித்து சிந்தித்து குற்றவுணர்ச்சிக்கு ஆளாகும் காட்சி கவனம் ஈர்க்கிறது!
நாயகனுக்கு மனைவியாய் வருகிற பிரணா ஹோம்லி லுக்கில் லட்சணமாக இருக்க, படம் முழுக்க அவர் அணிகிற உடைகள் பளீர் வண்ணங்களில் பளபளக்க, கலஃர்புல்லான நைட்டிகளையும் கணக்கு வழக்கில்லாமல் உடுத்திக் கொண்டு திரிகிறார்!
சரவண சக்திக்கு மனைவியாக வருகிறவரின் உடற்கட்டில் இளமை திமிர்கிறது!
முதல் முக்கிய விஷயம்… அந்த இரு மனைவிகளும், கணவர் எவ்வளவுதான் குடித்துக் கூத்தடித்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், கல்லைத் தூக்கிப் போட்டுக் கொல்லாமல் அவர்கள் மீது அன்லிமிட்டடாய் அன்பைக் கொட்டுகிறார்கள். மாமா மாமா’ என கொஞ்சிக் குலாவுகிறார்கள். அதையெல்லாம் பார்த்தால், அவர்கள் வேற்றுக்கிரக வாசிகளாக இருப்பார்களோ என்ற சந்தேகம் வருவதை தவிர்க்க முடியவில்லை!
எந்த நேரமும் பாட்டிலுடன் திரிகிற மாமனுக்கும் மாப்பிள்ளைக்கும், ஏதேனும் ஒரு ஸ்பாட்டில் கறிச் சோறு கன்ஃபாமாகி விடுவது திரைக்கதையிலிருக்கிற 2-வது முக்கிய விஷயம். ஹூம்… எத்தனை பேருக்கு இப்படி அமையும்?
‘அயலி’ அபி நட்சத்திரா அவ்வப்போது மின்னல்போல் எட்டிப் பார்த்துவிட்டு, கிளைமாக்ஸில் ஷாக்கடிக்கும்படி எக்குத்தப்பான இடத்திலிருந்து என்ட்ரி கொடுப்பது எதிர்பாராதது!
மயில்சாமி தான் நடித்தவற்றில் கடைசியாக டப்பிங் பேசிய படமாம் இது. நடிப்பில் எந்த வித்தியாசமும் காட்டாமல் வழக்கம்போல் குடிகாரராக வந்து, தள்ளாடி நடந்து ‘ஹே…ய், ‘ஹோ…ய்’ என குரல் கொடுக்கிறார். ‘நல்லவன் குடிச்சா குழந்தை, கெட்டவன் குடிச்சா கொலைகாரன்’ என அவர் பேசும் வசனம் ஈர்க்கிறது!
துபாயில் சம்பாதித்து திரும்பி, கிராமத்து காடு மேடுகளில் கோட் சூட்டுடன் பந்தாவாக வலம் வருகிற சாம்ஸ், குடிகாரர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக அவர்களுடன் பழகி, அவர்களைவிட மகா மெகா குடிகாரராக மாறிப்போகிற டி எம் கார்த்திக் இருவரும் லேசாக கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்!
அருள்தாஸ், மீனாள் என இன்னபிற பாத்திரங்களில் வருகிறவர்களின் பங்களிப்பு நிறைவு!
‘வாடா மச்சி கட தொறந்தாச்சு’, ‘அடிக்கிற பொண்டாட்டி தெருவுல நிப்பாட்டி’ பாடல்களை ரகளையாக தந்திருக்கிறார் பிரித்வி!
ஒளிப்பதிவு நேர்த்தி!
சொல்ல வந்த கருத்து வரவேற்புக்குரியதுதான் என்றாலும், கதை ‘ஹாஃப்’பாயிலாக இருப்பதால் ‘ஃபுல்’ மார்க் போட முடியாத நிலை!
கிளாஸ்மேட்ஸ் – டூப்ளிகேட் சரக்கு!
-சு.கணேஷ்குமார்