‘நின்று நிதானித்தால் பல பிரச்சனைகளுக்கு சுலபமான தீர்வு நம்மிடமே இருக்கும்’, ‘துன்பம்கூட பழகிக் கொண்டால் இன்பமாகும்.’ இப்படி ஒருசில கருத்துக்களை விதைக்கிற படம்… பார்க்கும் நேரத்தை குதூகலமாக்க படத்தின் முன்பாதி முழுக்க காமெடி மசாலா தூவிய ‘குட் நைட்.’
இளைஞன் மோகன் பக்கத்தில் படுத்திருப்பவர்களை படுத்துவது மட்டுமல்லாமல் கீழ் வீட்டில் தூங்குகிறவர்களைக்கூட தூக்கிவீசுகிற அளவுக்கு குறட்டை விடுகிற இளைஞன். அந்த சிக்கலால் அவன் மனதுக்கு நெருக்கமானவள் தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட, அவனது வெகுளித்தனத்தில் மயங்கி, உதவும் குணத்தில் கிறங்கி இன்னொரு பெண் சிக்குகிறாள். அவளிடம் தன் குறட்டை பிரச்சனையை மறைத்து மனைவியாக்கிக் கொள்கிறான். அதனால் அவர்களது மணவாழ்க்கையில் புயல் வீசத் தொடங்குகிறது. அதன் விளைவுகள் எப்படிப்பட்டது என்பதே கதையோட்டம்… இயக்கம்: விநாயக் சந்திரசேகரன்
மோகனாக மணிகண்டன். நல்லவன், கூட்டுக்குடும்ப வாசி, ஐடி பணியிலிருப்பவன் என ஏற்ற பாத்திரத்தில் கச்சிதமாக வெளிப்படுகிறார். குறட்டையால் மனைவியின் தூக்கம் கெடுவதை உணர்ந்து படுக்கையில் தனிகண்டன் ஆவதாகட்டும், அலுவலகப் பணியில் டீம் லீடர் தரும் மன உளைச்சலை எதிர்கொள்வதாகட்டும், மனைவியைப் பிரிகிற அளவுக்கு நிலைமை சிக்கலானபின் கோபத்தில் வெடிப்பதாகட்டும் இயலாமையால் துடிப்பதாகட்டும் அத்தனை பரிமாணங்களிலும் பக்குவமான நடிப்பை பந்தி வைத்திருக்கிறார். இடைவேளைக்கு முந்தைய காட்சிகள் பெரும்பாலும் கலகலப்பாக நகரும்படி திரைக்கதை அமைய அதற்கு இயல்பான நடிப்பால் உரம் சேர்த்திருக்கிறார். அந்த ‘ஜெய்பீம்’ நாயகனின் சேட்டைகள் சிடுமூஞ்சிகளையும் சிரிக்க வைக்கும் என உத்தரவாதம் தரலாம்!
படித்து, நல்ல வேலையில் இருந்தாலும், சிறுவயதிலேயே பெற்றோரை இழந்ததால் உறவுகளால், அக்கம் பக்கத்தால் ‘ராசியில்லாதவள்’ என்ற முத்திரை குத்தப்பட்டு அதை நம்பி மனம் உடைந்து வாழ்கிற பரிதாபமான கதாபாத்திரத்தில் மீத்தா ரகுநாத். அவரது இயல்பான தோற்றமும் முகபாவமும் பரிதாபத்திலும் பரிதாபமாக இருக்க, கூடுதலாக கண்ணீர் கசியக் கசிய நடித்துமிருக்கிறார். அவரது குரலின் டெசிபல் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து பேசுவது போலிருப்பது ஒருசில காட்சிகளுக்கு பொருத்தம். அவர் வரும் காட்சிகள் அத்தனையிலும் அப்படியே முனகுவது ஏனென்று புரியவில்லை. அம்மணி மலர்ந்து சிரிக்க நிறைவான ஒருசில காட்சிகளை வைத்திருக்கலாம்!
மனைவியின் தம்பியுடைய சுக துக்கங்களில் பிரதிபலன் பார்க்காமல் தோள் கொடுப்பது, ஆறுதலுக்கு ஊற்றிக் கொடுப்பது என அலட்டலற்ற நடிப்பால் கவர்கிறார் ரமேஷ் திலக்!
மண வாழ்க்கையில் நுழைந்து சில வருடங்கள் கடந்தபின்னரும் தாய்மையடையாததால், கணவனின் பெற்றோரால் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு, அந்த வலியை பிரதிபலிக்கும்போது தனித்து தெரிகிறார் ரேச்சல் ரெபேக்கா. வலிகளைச் சுமந்தபடி பெண்ணியம் பேசுகிற காட்சியிலும் சிறு விபத்து, பேரிழப்பு என்றெல்லாம் சோதனைகளைக் கடந்தபின் ‘இது எங்க வாழ்க்கை; யாருக்கும் தலையிட உரிமையில்லை’ என்பதுபோல் உரத்த குரலில் சொல்லி கணவனை சினிமாவுக்கு அழைக்கிற காட்சியிலும் பாய்ச்சல் ரெபேக்கா!
ஆதரவற்ற கதாநாயகிக்கு மனையால் அடைக்கலம் தந்து மனதால் அரவணைக்கிற இயக்குநர் பாலாஜி சக்திவேல், அவருக்கு மனைவியாக வருகிறவர், டீம் லீடராக பகவதி பெருமாள்.. இப்படி மற்ற பாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்பு பங்களிப்பும் நேர்த்தி.
தெருவில் பாவமாக ஒதுங்கிக் கிடந்து, கதாநாயகியின் கருணைப் பார்வையால் வீட்டுக்குள் வந்து, பின்னர் சொகுசாக மெத்தையில் படுத்துறங்கும் அந்த நாய்க் குட்டி அத்தனை அழகு. படத்தின் முக்கிய பாத்திரமாக வருகிற அந்த நாயின் உறக்கத்தை கிளைமாக்ஸ் காட்சியில் காண்பிக்கும்போது கதை அழுத்தம்கூடி அர்த்தமுள்ளதாகிறது.
ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவும் கதையோட்டத்தோடு சரிவர கைகோர்த்திருக்கின்றன!
குட் நைட் – ஃபீல் குட்!