இசை மாஸ்ட்ரோ என ரசிகர்களால் கொண்டாடப்படும் இசையமைப்பாளர் அனிருத், துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் ‘ஹூக்கும் வேர்ல்ட் டூர் – அலப்பரை கெளப்பறோம் கான்செர்ட்’டை அறிவித்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத் பாலிவுட் திரைப்படமான ’ஜவான்’ உட்பட தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில்தான் உலகம் முழுவதுமான தனது இசைப்பயணத்தை துபாயில் இருந்து ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளார். இந்தியாவின் முதன்மையான நிகழ்வு மேலாண்மை நிறுவனமான பிராண்ட் அவதார் (Brand Avatar), இந்தியாவைத் தளமாகக் கொண்ட ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை அமைப்பான பல்ஸ் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த இசை நிகழ்ச்சி, பிப்ரவரி 10, 2024 அன்று துபாய் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த இருக்கிறது.
இந்த நிகழ்வு பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் இசை தாக்கங்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சியாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. அனிருத்தின் பல ஹிட் பாடல்கள் இந்த இசை நிகழ்ச்சியில் இடம்பெற இருக்கிறது. ‘ஹுக்கும்- வேர்ல்ட் டூர்’ இசை மூலம் ரசிகர்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்க்கும் விதமாக அமையும்.
இந்த கச்சேரி குறித்து பிராண்ட் அவதார் ஹேமச்சந்திரன், “பல்வேறு மறக்கமுடியாத அனுபவங்களை அந்தந்த பிராண்டுடன் இணைந்து கொடுக்கும் பணியைக் கையாண்டு வருகிறோம். ‘ஹுக்கும்- வேர்ல்ட் டூர்’ மூலம் அனிருத் லைவ்வாக பாடுவதையும் ஒரு நிறைவான இசை அனுபவத்தையும் ரசிகர்கள் பெறுவார்கள். கார்ப்பரேட் கூட்டங்கள் முதல் பெரிய அளவிலான கச்சேரிகள் வரையிலான நிகழ்வுகளை நாங்கள் கையாளுகிறோம். மேலும் அனிருத்தின் இந்த இசை சுற்றுப்பயணத்தின் மூலம், உலக அளவில் ரசிகர்கள் மத்தியில் எங்களின் இருப்பை மீண்டும் உறுதிப்படுத்துவோம்” என்றார்.
சமீபத்தில் அட்லி இயக்கிய ஷாருக்கானின் பிளாக்பஸ்டர் படமான ‘ஜவான்’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இசையமைப்பாளர் அனிருத் பேசியிருப்பதாவது, “நான் எப்போதும் பலதரப்பட்ட பார்வையாளர்களின் விருப்பதை எதிரொலிக்கும் வகையிலான இசையை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறேன். ‘ஹுக்கும்- வேர்ல்ட் டூர்’ என ஆரம்பித்திருக்கும் இந்த உலக இசைச்சுற்றுப்பயணத்தின் மூலம், நான் சினிமாவில் அறிமுகமானதில் இருந்து எனது பணியைப் பாராட்டிய பார்வையாளர்களுடன் எனது வெற்றியையும் பயணத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அன்பான இசை ரசிகர்களைச் சந்தித்து இந்த உலக இசைச்சுற்றுப்பயணத்தைத் தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.
கச்சேரிக்கான டிக்கெட்டுகள் பிளாட்டினம் பட்டியல், கோகோ கோலா அரங்கம் மற்றும் விர்ஜின் டிக்கெட்டுகளில் கிடைக்கின்றன. ‘ஹுக்கும்- வேர்ல்ட் டூர்’ நிகழ்வின் ஸ்பான்ஸர்ஸ் நேச்சுரலஸ். அசோசியேட் ஸ்பான்சர்களான சக்தி மசாலா, லார்ட், எஸ்எஸ்விஎம் மற்றும் சத்யபாமா இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஆகியவை இந்த சுற்றுப்பயணத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்ற வேண்டுமென்பதில் ஏற்பாட்டாளர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.