நடிகர் மோகன் தமிழ்த் திரையுலகில் அதிக எண்ணிக்கையில் வெள்ளிவிழாப் படங்கள் தந்தவர். அவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் நாயகனாக களமிறங்கும் படம் ‘ஹரா.’
மாறுபட்ட களத்தில், ஆக்ஷன் அதிரடிப் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் விஜய் ஸ்ரீ ஜி. விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் டீசர் வெளியீடு ஏப்ரல் 15;2024 அன்று சென்னையில் நடந்தது.
நிகழ்வில் நடிகர் மோகன் பேசியபோது, ”எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். எத்தனையோ படம் நடித்திருக்கலாம், ஆனால் நான் பெருமையாக சொல்லிக்கொள்கிறேன், நான் நடித்த படங்கள் எல்லாம் லிஸ்ட் வைத்துக் கொண்டதே இல்லை. ‘ஹரா’ தான் என் முதல் படம். நான் நடிக்க ஆரம்பித்த போது, எனக்கு என மார்க்கெட் வாய்ப்பு வந்த பிறகு, எப்போதும் என்னால் முடிந்த அளவு புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு தந்துள்ளேன். அவர்களுக்கு வாய்ப்பு தந்தால் பசியோடு வெறியோடு படம் செய்வார்கள் என்று தான் நினைத்துள்ளேன்.
என்னுடைய பாடல்கள் பற்றி எல்லோரும் சொல்கிறார்கள் ஆனால் அதற்கு காரணம் இசைஞானி, அவர் யாருக்கும் வஞ்சனை இல்லாமல் பாட்டு தந்துள்ளார். எல்லா நடிகர்களுக்கும் ஒரே மாதிரி பாடல் தந்துள்ளார். ஆனால் அந்தப் பாடல்களில் என்னை ரசிக்கிறார்கள் என்றால் அதை ஆர் சுந்தர்ராஜன் மாதிரி இயக்குநர்கள் இயக்கியது தான் காரணம். அவர்கள் மக்கள் உணர்ந்து ஃபீல் செய்வது மாதிரி படம் எடுத்து வெற்றிப்பெறச் செய்தார்கள். அதனால் தான் மக்கள் என்னை தங்கள் பிள்ளை போல் கொண்டாடினார்கள். என்னை வைத்து இயக்கிய இயக்குநர்கள், இசையமைப்பாளர் எல்லோரும் தான் என் வெற்றிக்கு காரணம்.
நான் எப்போதும் மார்க்கெட்டைப் பற்றி யோசிக்கவே மாட்டேன், ஒரு படம் என்றால் அது எனக்குப் பிடிக்க வேண்டும் அவ்வளவு தான். நிகில் தான் விஜய் ஶ்ரீயை கூட்டி வந்தார், எனக்கு திரைக்கதையில் சில தயக்கங்கள் இருந்தது, அதை மனமுவந்து மாற்றினார். 7 முறை மாற்றி தான் இந்தப்படத்தை எடுத்துள்ளோம். ஏன் ஹராவை ஒத்துக்கொண்டீர்கள் என எல்லோரும் கேட்டார்கள். விஜய் ஶ்ரீயிடம் ஒரு ஃபெண்டாஸ்டிக்கான லைட் அண்ட் சவுண்ட் சென்ஸ் இருக்கிறது, அந்த திறமை அவரை பெரிய அளவிற்கு கொண்டு செல்லும். விஜய் ஶ்ரீ அவருக்கு என்ன ஆனாலும், படத்தை பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டு இருப்பார். அவர் இன்னும் நிறைய நல்ல படங்கள் தருவார்.
இந்தப்படத்தில் முதலில் பாடல்கள் இல்லை ஆனால் மூன்று பாடல்கள் வைத்துவிட்டார், மூன்று பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். மணிவண்ணன் மாதிரியான அறிவு கொண்டவர், மணிவண்ணன் தான் பேப்பரில் கதை இல்லாமல் எடுப்பார். ராஜிவ் மேனன் சாரை கேமராமேனாக பார்த்திருக்கிறேன் அவருடன் இணைந்து நடித்துள்ளேன். சிங்கம்புலி, அனுமோல் முதலாக இணைந்து நடித்த அனைவருக்கும் என் நன்றிகள். படம் பாருங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்” என்றார்.
இயக்குநர் விஜய் ஶ்ரீ ஜி பேசியபோது, ”மோகன் சார் மிகப்பெரிய ஆளுமை, ஆனால் ஒரு துளி கர்வம் கூட அவரிடம் இருக்காது. இந்தப்படத்திற்காக பேசும்போது, அவருக்கு என்ன மார்க்கெட் இருக்கிறது, அவரை வைத்து ஏன் படமெடுக்கிறீர்கள் என்று கேட்டார்கள், ஆனால் கோயம்புத்தூரில் ஷூட் செய்யும்போது எங்கு போனாலும் 500 பேர் அவரைப் பார்க்க கூடி விடுவார்கள். அவர் வந்தால் தெரியும் அவர் மார்க்கெட் என்னவென்று. எல்லாவற்றையும் கடந்து அவரின் மனிதம் என்னை பிரமிக்க வைத்தது. அவர் தான் என்னை உயிர்ப்பித்தார். நாம் பல இடங்களில் சீட் பெல்ட் போடுவதில்லை, கவனம் இல்லாமல் இருக்கிறோம், அதற்காகத் தான் இதைச் சொல்கிறேன். மோகன் சார் நடிப்பில் கலக்கியுள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியுள்ளார். அவருக்கு இந்த ‘ஹரா’ மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும்” என்றார்.
நாயகி அனுமோல், நடிகை அனித்ரா, நடிகர் ஜெயக்குமார், நடிகர் ஆதவன், நடிகர் சிங்கம் புலி, தயாரிப்பாளர் எஸ் பி மோகன் ராஜ், நடிகை ஸ்வாதி, இசையமைப்பாளர் ரஷாந்த் ஆர்வின் உள்ளிட்டோரும் பேசினார்கள்.