ஃபேண்டஸி கலந்த காதல் கதையாக, 45 நிமிடங்கள் வரை ஓடுகிற ‘ஹேய் அர்ஜுன்‘ படத்தை முகமது ஜார்ஜிஸ் இயக்கியுள்ளார். THE CHOSEN ONE PTE LTD [சிங்கப்பூர்] நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் டெல்லி கணேஷ் குறிப்பிடத்தக்க வேடத்தில் நடிக்க, புதுமுகங்கள் நடித்துள்ள இந்த படத்தின் சிறப்புத் திரையிடல் சென்னையில் நடந்தது. இயக்குநர் லிங்குசாமி, நடிகர் கூல் சுரேஷ் கலந்து கொண்டு படத்தை பார்த்து படக்குகுழுவை வாழ்த்தி, பாராட்டினர்.
நிகழ்வில் லிங்குசாமி பேசும்போது, “ஹேய் அர்ஜுன் ஒரு புது டீம், என்ன பண்ணிருப்பாங்களோனு தான் வந்தேன். ஆனா நல்லா பண்ணிருக்காங்க. அந்த மாயாஜாலக் கல் வந்த உடனே மின்னல் முரளி போல ஒரு ஆக்ஷன் எல்லாம் வருமோனு நினைச்சேன். ஆனா அதை காதல் படமாக கொண்டு போயிருக்கிறார் இயக்குநர் ஜார்ஜிஸ். இதை ஒரு முழுநீள படமாகவும் எடுக்கலாம். சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் இன்னும் கொஞ்சம் உழைப்பை போட்டால் இந்த குழுவிடம் இருந்து மிகச் சிறந்த படங்களை தர முடியும்” என்றார்.
கூல் சுரேஷ் பேசும்போது, “இந்த சின்ன குழுவை மதித்து எந்த ஈகோவும் பார்க்காமல் வாழ்த்த வந்திருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. அவரின் இந்த குணத்தால் தான் அவர் எப்போதும் பெரிய மனிதராகவே இருக்கிறார்.
இந்த படத்தின் ஹீரோ கெளதம் காதலில் விழுந்தேன் படத்தில் நகுல் எப்படி இருப்பாரோ அந்த மாதிரியே இருக்கிறார். நகுல் மாதிரி உருகி உருகி காதலிக்கிறார். நாயகி பூஜா நிறைய அழுறாங்க, அதுவும் ஒரு அழகு தானே. இயக்குநர் ஜார்ஜிஸ் தமன் மாதிரியே இருக்கிறார். நான் ஒரு விழாவில் ஒரு பெண்ணுக்கு மாலை அணிவித்தது மிகப்பெரிய பிரச்சினையாகி விட்டது. இனிமே அது நடக்காது. இந்த நாயகியின் நடிப்பை பாராட்டி நான் சால்வை அணிவிக்கிறேன்” என்றார்.