‘திரில்லர் கதையா? மர்டர் மிஸ்ட்ரியா? அதை எளிமையான பட்ஜெட்டில் எடுக்கணுமா? அதற்கான சரியான சாய்ஸ் ஊட்டி அல்லது கொடைக்கானல். தமிழ் சினிமாவின் இந்த பாரம்பரிய பழக்க வழக்கத்தை மீறாமல், ஊட்டியில் டியூட்டி பார்த்திருக்கிறது எச் எம் எம் படக்குழு.
அந்த பிரமாண்டமான வீட்டில் தனியாக இருக்கும் இளம்பெண் சுமியை, அவளது தோழி சர்மி நள்ளிரவில் சந்திக்கிறாள். சில நிமிட பேச்சு வார்த்தைக்குப் பிறகு, சர்மி வீட்டைவிட்டு புறப்பட்டதும் முகமூடி அணிந்த உருவம் ஒன்று அவளை வளைத்துப் பிடித்து கத்தியால் குத்திக் கொல்கிறது. அடுத்ததாக வீட்டுக்குள்ளிருக்கும் சுமியைக் கொல்வதற்கு தயாராகிறது. சுமி அந்த உருவத்திடமிருந்து தப்பிக்க போராடுகிறாள்.
அவளால் தப்பிக்க முடிந்ததா இல்லையா? முகமூடிக்குள் ஒளிந்திருப்பது யார்? அந்த நபரின் நோக்கம் என்ன? இந்த கேள்விகளுக்கான பதில்களே கதையின் தொடர்ச்சி…
சுமியாய் நடித்திருக்கிற கதாநாயகி சுமிராவுக்கு நேபாளி முகம். பார்ப்பதற்கு ஒல்லியாகத் தெரிந்தாலும், வளைவு நெளிவுகளில் இளமைக்கும் செழுமைக்கும் பஞ்சமில்லை.
கொலைகாரனைப் பார்த்து மிரள்வது, உயிர் தப்பிக்க அப்படியும் இப்படியும் அலைபாய்வது என கதையோட்டத்துக்கு தேவையான பயத்தையும் பதற்றத்தையும் தன் நடிப்பில் சரியாக டெலிவரி செய்திருக்கிறார். பணத்துக்காக உடற் கவர்ச்சியை முதலீடாக வைத்து சூழ்ச்சி செய்வதிலும் கவனம் ஈர்க்கிறார்.
ஸ்பேஸ் சயின்டிஸ்ட்; அரசுப் பணியாளர்; பணத்துக்காக தன் திறமையை தவறான வழியில் பயன்படுத்துபவர்; நம்பிக்கைத் துரோகத்தை சந்தித்தவர்; அதற்காக பழி வாங்கத் துடிப்பவர் என கதாநாயகனின் கதாபாத்திரத்தை கனமாக படைத்த இயக்குநர் நரசிம்மன் பக்கிரிசாமி, அந்த வேடத்தை தானே ஏற்றுக் கொண்டிருக்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் அவரே.
தான் சயன்டிஸ்ட் என்பதை வசனங்களால் புரிய வைத்து விடுகிற அவர், தொழில்முறை பார்ட்னருடன் தனது கண்டுபிடிப்பு சார்ந்த புராஜக்ட் பற்றி சில வார்த்தைகள் பேசுவது, குளிருக்கு இதமாய் சிகரெட் பிடித்தபடி மலைப் பகுதிகளில் நடப்பது, துரோகிகளை கொலை வெறியோடு அணுகுவது என தனக்கான காட்சிகளை இயல்பாக நடித்துக் கடந்திருக்கிறார்.
சுமியின் தோழியாக, ஷர்மியாக வருகிற ஷர்மிளா எடுப்பாக அழகையும் துடிப்பான நடிப்பையும் கொஞ்ச நேரம் பார்க்க முடிகிறது.
இந்த மூவரைத் தவிர கதாநாயகனின் பார்ட்னர், ஷர்மியின் கணவர் என கதையில் களமாடியிருக்கிற ஒருசிலரின் பங்களிப்பில் குறையில்லை.
புருஷின் பின்னணி இசையிலிருக்கும் உருட்டல் மிரட்டல் காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது. ‘ஹக் மீ மோர்’ தீம் மியூஸிக்கில் மெல்லிய கிறக்கமிருக்கிறது.
திரும்பிய பக்கமெல்லாம் பசுமை, மலையில் உரசியபடி நகரும் மேகங்கள் என்றிருக்கும் செழிப்பான ஊட்டி, கிரணின் ஒளிப்பதிவில் பியூட்டியாக தரிசனம் தருகிறது.
கதைக்கேற்ற பிரமாண்டம் காட்சிகளில் இல்லாதது உட்பட சில குறைகள் இருந்தாலும், கோடிக்கணக்கில் செலவு வைக்கக்கூடிய கதையை எளிய பட்ஜெட்டில், புதுமுகங்களின் பங்களிப்பில் எடுத்திருப்பது ஒரு விதத்தில் முன்னுதாரணம். அதற்காகவே இயக்குநரைப் பாராட்டலாம்.