சூப்பர் ஹீரோவாக ஆசைப்படுகிற ஒரு அயோக்கியன்; அப்பாவியாக இருந்து வினோத சக்தி கிடைத்து சூப்பர் ஹீரோவாக மாறிய இளைஞன் என இரண்டு கதாபாத்திரங்களை மையப்படுத்திய படு சுவாரஸ்யமான கதைக்களத்தில் ‘ஹனு மான்.’ (தெலுங்கு படம் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.)
இளைஞன் அனுமந்த் அக்காவின் அரவணைப்பில் வாழ்பவன்; சின்னச் சின்ன திருட்டுகளில் ஈடுபடுபவன். ஒருநாள் அவனை சிலர் கொலை செய்ய திட்டமிட்டு தாக்குதல் நடத்த, பலத்த காயங்களுடன் தப்பிப் பிழைக்கிறான். அந்த தருணத்தில் அவனுக்கு அனுமனின் சக்தி கிடைத்து 100 பேர் எதிர்த்து நின்றாலும் தூக்கிப் போட்டுப் பந்தாடுகிற அளவுக்கு பலசாலியாகிறான். ஊரில் அதுவரை யாராலும் எதிர்க்க முடியாத மிருகபலம் கொண்டவனை, அராஜக ஆசாமியை அடித்துத் துவைத்து ஊரே கொண்டாடும் ‘சூப்பர் ஹீரோ’வாகிறான்.
அவனுக்கு அந்த பலம் எப்படி கிடைத்தது, எங்கிருந்து கிடைத்தது என்பதை அறிந்துகொள்கிறான் சூப்பர் ஹீரோவாக ஆசைப்பட்டுக் காத்திருக்கிற அந்த அயோக்கியன்.
அப்புறமென்ன… அயோக்கியன், இளைஞனின் பலத்தை கைப்பற்ற பல விதங்களில் சூழ்ச்சி செய்வதும், இளைஞன் அதையெல்லாம் சமாளிப்பதுமாக அடுத்தடுத்த காட்சிகளில் பரபரப்பு கூடுகிறது… அந்த மோதலில் வெற்றி யாருக்கு என்பது கிளைமாக்ஸ். இயக்கம் பிரசாந்த் வர்மா
விடலைப் பருவத்திலிருந்து அப்போதுதான் வாலிப பருவத்தை எட்டிப் பிடித்ததை போலிருக்கிற நாயகன் தேஜா சஜ்ஜாவின் தோற்றமே அவர் ஏற்றிருக்கும் பாத்திரத்துக்கு புத்துணர்ச்சி தந்துவிடுகிறது. திருடுவதை விளையாட்டுத்தனமாக செய்வது, அனுமன் சக்தி கிடைத்தபின் அதை நண்பனிடம் நிரூபிக்க பலவிதங்களில் முயற்சித்து ரயிலை நிறுத்துவது வரை போவது, தான் நேசிக்கும் பெண்ணிடம் தனது விசேஷ சக்தியை வெளிப்படுத்த நினைத்து அத்தனையிலும் பல்பு வாங்குவது என அத்தனையும் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்க,
மல்யுத்தத்தில் எவராலும் வீழ்த்த முடியாத முரடனை முடக்கிப்போடுவது, தனது சக்தியைப் பறிக்க எந்த லெவலுக்கும் இறங்கத் தயாராக இருக்கிற வில்லனின் சதிகளை முறியடிப்பது என நீளும் காட்சிகளில் அதிரடி நாயகனாக மாறி கவனம் ஈர்க்கிறார்.
தம்பி மீது பாசம் காட்டும் வழக்கமான அக்காவாக வந்தாலும் வில்லனை எதிர்த்து நிற்கும்போது தேர்ந்த நடிப்பை தந்த்கிருக்கிறார் வரலெஷ்மி!
சூப்பர் ஹீரோவாக ஆசைப்பட்டு அறிவியல் துணையோடு அதற்கான முயற்சியில் இறங்குகிற, நாயகனின் சக்தியை தட்டிப் பறிக்க விதவிதமாக செயல்படுகிற கார்ப்பரேட் வில்லனாக வினய். ஏற்கனவே ஒன்றிரண்டு படங்களில் செய்த அதே வில்லத்தனத்தை மீண்டும் செய்திருக்கிறார்; அது கதைக்கு பலமாக இருக்கிறதோ இல்லையோ பொருத்தமாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை!
கதாநாயகன் மீது காதல் கொள்கிற வழக்கமான கதாநாயகிதான் என்றாலும் மல்யுத்தப் போட்டி என்ற ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு, ஊரையே நடுங்க வைக்கிற பயில்வானை எதிர்த்து கேள்வியெழுப்பும்போது கம்பீரம் காட்டி அசத்துகிறார் அநியாயத்துக்கு கன்னம் ஒட்டிப்போன அம்ரிதா!
நாயகனுக்கு நண்பனாக வருகிற எடுப்புப் பல் இளைஞனை வைத்து நடிகர் பாலையாவை கலாய்த்திருப்பது ஹன்ட்ரட் பிரசன்ட் கலகலப்பு!
சாதுவான சாமியாராக அவ்வப்போது எட்டிப் பார்த்து, நிறைவுக் காட்சியில் தனக்கானது கெட்டியான பாத்திரம் என்பதை வெளிப்படுத்துகிறார் சமுத்திரகனி!
மற்ற கதாபாத்திரங்களை ஏற்றிருக்கும் நடிகர், நடிகைகளின் நடிப்பு கச்சிதம்!
பசுமைக்கு குறைவில்லாத மலை, அதனிடையே பிரமாண்ட அனுமன் சிலை, கீழே பாய்ந்தோடும் ஆறு, பக்கவாட்டில் அருவி என கதை நிகழ்விடத்தை அமைத்திருப்பது கண்களுக்கு அத்தனை குளிர்ச்சி!
இசையமைப்பாளர் பாடல்களில் பக்திப் பரவசமூட்டி, பின்னணி இசையில் கதையோட்டத்துக்கு தேவையான சுறுசுறுப்பை தந்திருக்கிறார்.
ஊரில் ஊர்க் காவலன் என்ற பெயரில் ஒரு படுபாவி, அவனுக்கு அனுமன் சக்தி கிடைத்தவன் வைக்கும் ஆப்பு, கேப்பில் நுழையும் கார்ப்பரேட் வில்லன் என ஆன்மிகமும் அறிவியலும் கலந்துகட்டி விறுவிறுப்பாக கதைக்களம் அமைத்திருப்பது படத்தின் பலம். அந்த பலம், கதையில் கார்ப்பரேட் வில்லன் நுழைந்தபின் பாதிக்கும் பாதியாய் குறைந்திருப்பது பலவீனம்!
ஹனுமான் பக்திமான்களைக் கவர்வான்!